Friday, December 23, 2016

விசறு பிடித்த வித்வான்களுக்கு


தாய் வீட்டில் தளிர் கொடியாகி,
தமையன் தமக்கையோடு
வேர் விட்டு மரமாகி,

மணாளன் கரம் கோர்த்து
மருமகளாய் நான் மாற

பருவகால மாற்றத்தால்,
மாணிக்க கிளைகளாக
மகள்கள் மண்ணில் தோன்ற,

கிளைகளோடு இலைகளாக
மருமகன்களின் வரவினிக்க,

வசந்தகால பூக்களென
புவியிறங்கிய நான்கு தேவதைகளோடு,

விருட்சமென விரிந்து நிற்கிறது,
தளிர் கொடி இன்று காடடைக்கும் பெரும் மரமாய்..

பெருமை கொள்ளும் இவ்விடயம்,
பகடிக்க என்ன உளது??🤔🤔

முழுமை பெற்ற வாழ்வளித்த
இறைவனுக்கு கோடி நன்றி.
     
             

Monday, June 20, 2016

விடியலை நோக்கி விளை நிலங்கள்.


பேராசை பெரும் தீயில்
பச்சை மரங்கள் மழிக்கப்பட்டு,
காணி நிலமெல்லாம்
" கார்பரேட் " கம்பெனியாகி
கரிசல் காடுகளும்
களையிழந்து போனதுவே...

பச்சை பட்டுடுத்தி
பரந்து விரிந்த விளைநிலமும் வீடாகி,
காடெல்லாம் காட்சி ப்பொருளானால்,
நெல்மணி என்ன "நெட்"டில் கிடைக்குமா,
மழை என்ன மந்திரத்தில் பெய்யுமா?

பசுமை பாரதம் பட்டொளி வீசி
மண்முட்டும் விதைகள்
விண்முட்டி வளர,
விடியலை நோக்கி விரைந்திடுவோம்
விவசாயிகளோடு நாமும் கை கோர்த்து.

                                                 Uma karunamoorthy.

Thursday, August 27, 2015

எங்கள் திருமண நாள் கவிதை

எட்டு எட்டாய் நடை பயின்று,
பட்டு ரோஜா நாலு பெற்று,
பார் புகழ உயர வைத்தோம்,
இருபத்தியெட்டு ஆண்டுக்குள்ளே...

எத்தனையோ சண்டைகளில்,
எட்டிப் பார்த்த கோபங்களில்,
ஒளிந்து நின்ற பாசத்தை,
பாவை நான் பகுத்தறிய‌,
பாதி வாழ்க்கை க‌ழிந்தது...

கரி பூச எண்ணி
சதி செய்த சமூகத்தில்,
கறைபடாது எனை காத்த,
கல்லுக்குள் ஈரமாய்
கடவுளை நான் காண‌,
கால் நூறாண்டு கடந்தது...

பாசத்தின் கொள்ளளவை,
பாத்தியப் பட்ட நாம் உணர‌,
மீதி வாழ்வு வழங்கிடவே,
இறை வணங்கி
அருள் வேண்டிடுவோம்...

Wednesday, August 26, 2015

திருமண நாள் வாழ்த்துகள்


உன் மனதை
கொள்ளையிட்ட காரணத்தால்,
மன்றாடி கேட்டும்,
மனமிறங்க மாட்டாது
மன‌ச்சிறையில் பூட்டி வைத்து,
அன்பு கணையெடுத்து
அன்னாரை நோகடித்து,
நொடி பொழுதும் நீங்காது
நரம்பெல்லாம் நாண் ஏற்றும்
நாயகியே!
உன் ராமனின் ரத்தமெல்லாம்
மத்தளமாய் உன் நினைவு
சத்தமின்றி ஓடுவதை
சந்தேகமின்றி அறிவாயா?

தமயந்தி நளனை
தரணியில் யாம் கண்டதில்லை..
சத்தியவான் சவித்திரியை
சத்தியமாய் சந்திக்கவில்லை..
இருவரையும் பார்க்கிறேன் இன்று,
"காவேரி ராமன்" உம் வடிவில்..

தேவர்களின் தலைமகனை
கரம் பிடித்த தேவதையே!
தேனூறும் மனதோடு
"ராணி"நான் வாழ்த்துகிறேன்
வாழ்க பல்லாண்டு,
வளமோடும் நலமோடும்.
                 
                 அன்புடன்
                     உமா கருணாமூர்த்தி.

Thursday, July 23, 2015

ஆராதனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.




ஆண்டவன் அருளிய
ஆகாய தாமரை நீ,

' பாரதி ' வணங்கி நின்ற‌
பராசக்தியும் நீ..

' கம்பனின் ' கவி தொகுப்பில்
தப்பிய தாரகை நீ,

' வாலியின் ' வரிகளில்
பிரிந்து வந்த வாக்கியம் நீ...


' வைரமுத்து '  கண்டிடாத‌
வைர வரிகளும் நீ,

' தாமரையின்'  தலைமகளாம்
தமிழ் மொழியும் நீ..

'பழநி பாரதி ' பார்த்திடாத‌
'பா' க்களின் தொகுப்பு நீ,

கவிஞர் ' சுரதா 'வின்
சூரிய படைப்பும் நீ..

பாஷையின்றி பேசும்
' ஓஷோ 'வின் புது மொழி நீ

ஓசையின்றி கரைகிறது மனம்
ஓயாது ஒலிக்கும் உன் குரலில்..

ராணியின் ராஜ்ஜியத்தை
ஆள வந்த ஆராதனாவே

நீ ஆண்டு நூறு நலம் வாழ‌
நாளும் வேண்டுகிறோம் இறைவனிடம்..



Wednesday, January 14, 2015

தை மகளே வருக..



போகியன்று போர் குணம் போயிட,
ஆசை, கோபம்
அனைத்தையும் அக்னியில் அழித்திட,
ஆனந்தமாய் ஆடிடுவோம்,
அகமகிழ வாழ்ந்திடுவோம்,
அடுத்த நாள் வரப்போகும்,
தை மகளை வரவேற்க...

வைகறையில் நீராடி
வாசலிலே கோலமிட்டு
வண்ண வண்ண பட்டுடுத்தி
புதுப்பானை பொங்கலிட்டு
பொங்கி வரும் புன்னகையுடன்
பூரணமாய் படையலிட்டு
பூமித்தாயை வணங்கி பின் கதிரவனுக்கு நன்றி சொல்லி
களிப்புடனே வரவேற்போம்
தை மகளே நீ வருக..


                          அன்புடன் வாழ்த்தும்,
                              உமா கருணாமூர்த்தி

Thursday, December 25, 2014

சுனாமி.

காற்று வாங்கச் சென்றவரை
காவு வாங்கிய சுனாமி,
பூவோடு பிஞ்சையும்
புல்லென பிடிங்கிய‌
காலனின் பினாமி...

கருணையைக் கடலாக‌
கற்றவர்கள் சொன்னதுண்டு,
உப்பிட்டவரை மறவாதேயென‌
மற்றவரும் சொன்னதுண்டு...

மறக்குமா நெஞ்சம் இனி?
மனித உயிர் குடித்த‌
மகத்தான கடலலையே!
தெரியுமா உனக்கு...
நீ சுவைத்த எவரும்
உன்னை சுவைத்ததில்லை
ஒரு போதும்....

Tuesday, August 5, 2014

பூமராங் பூளோகம்...


அன்பு கணையெடுத்து
அகிலத்தில் போர் தொடுக்க,
எரிந்த வேகத்தில்
எதிர்கொள்ளும் ஏகாந்தம்..


விரவி நாம் ஏற்றும்
கல்வி அகல் விளக்கு,
புற்றீசல் படை போல
புரவியேறி நமை போற்றும்..


அக்னி பிழம்பென
ஒரு சொல் நீ மொழிய,
அமில மழையாய்
அது மாறி நமை
நனைக்கும்...


நன்மை தீமை
நாம் செய்தால் ஒரு முறை,
நாற்புறமும் எதிர் கொள்ளும்
நாளை வரும் நம் தலைமுறை...


பூமராங் புவியிலே,
பூவும் முள்ளும்
சொல்லும் கல்லும்
எரிந்தவரே எடுத்துக் கொள்வர்.

( பி.கு
கணை- அம்பு
ஏகாந்தம் -சொர்க்கம்

விரவி-விரைந்து
புரவி- குதிரை )






Monday, July 21, 2014

அழகு தேவதை ஆராதனாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து.


அந்தியில் உதித்த சூரியனே !
அன்னை கருவினில் துளிர்த்த சந்திரனே,உன்
சந்தன தேகமது ,அழகின் உச்சம்..
உன்னை கண்ட நாள் முதல்
வாழ்வில் எல்லாம் துச்சம்..

நான் துவண்டிடும் வேளையில் 
தூண்டா மணிவிளக்கு,
தூரிகைக்கு தப்பிய
காவியம் உன் சிரிப்பு..

மயக்கிடும் சிரிப்பிலே
மாயவலை விரித்தவளே !
அந்த மாய கண்ணனும்
மலைத்திடுவான் நீ செய்யும் லீலை...

ஆண்டவனின் அருள்மழையில்
அக்னி குஞ்சாய் வந்தவளே !
அவதரித்தேன் மீண்டும் நான்
ஆண்டு 43 கடந்த பின்னே...

ஆதியும் அந்தமும் ஆன
எங்கள் அழகு தேவதையே !
நீ ஆண்டு பல வாழ்ந்து
சாதனை படைக்க 
அன்போடு வாழ்த்துகிறோம்..

Friday, July 18, 2014

என் மகள் சஹானாவிற்கு


போராடும் மனதோடு
போட்டியிட பிறந்தவளே!
பூரிக்கிறது நெஞ்சம்
புவியில் உன்னை ஈன்றதற்கு...

அத்தனைக்கும் போட்டி
அனைத்துடனும் போட்டி...
அழகில் அல்லி மலருடன் போட்டி
அன்பில் என் அன்னையுடன் போட்டி...

நிறத்தில் நிலவுடன் போட்டி
நீண்ட கூந்தலோ
கார் முகிலுடன் போட்டி...
முல்லை மலருடன்
உன் முத்து பற்கள் போட்டி...

வெள்ளை சிரிப்பொலியில்
வெள்ளி கொலுசு தலை சாய‌
தகதக‌க்கும்  தேகமது
தங்கத்தோடு போட்டி..

போதுமடி பெண்ணே
போராட்டத்தை நிறுத்தி விடு,
இயற்கையும் தோற்கிறது உன்
இன்முக சிரிப்பிலே...
ஈன்றவளும் தோற்கிறேன்
ஈடில்லா உன் கருணையிலே...

( இதில் உயர்வு நவிற்சியோ
வஞ்சபுகழ்ச்சியோ கிடையாது )

Wednesday, August 28, 2013

ஆராதனா..........


மூச்சு விடும் முல்லை மலர்
முதன்முதலில் நான் கண்டேன்..

கண்ணிரண்டில்
கரும் திராட்சை,

காலிரண்டில்
மடல்வாழை,

வாசனையோ
வானை முட்ட,

வரவொன்று கிடைத்தது
செலவின்றி....

வரவேற்பு

குன்றத்து முருகன்
குழந்தை வடிவில்...

குதூகலத்தில் மனம்
கூடி கும்மியடிக்கிறது..

கூர்மதி கருணையோடு
குறைவில்லா அழகினோடும்

அகிலமே திரும்பி பார்க்க‌
அடியெடுத்து வைக்கும்
அறிவு மலரே-உன்னை

ஆச்சியென்னும் பெயரோடு
அன்னையாய் அள்ளி
எடுப்பேன் என்னுள்ளம்
களிகொள்ள...

Wednesday, July 17, 2013

தெளிவு

மண்டியிட்டு கேட்கிறேன்
மன்னித்து விடு மணாளனே...

உரைப்பது உண்மையென‌
என் உள்ளம் உணர்ந்தும்
உன்னையும் ஏற்க சொல்லி
ஏனிந்த அதிகாரம்???

என்னைப் பற்றி
எனக்கு தெரிந்தும்
ஏனிந்த எதிர்பார்ப்பு??
எட்டவில்லை என் மூளைக்கு...

தேகம் திரியாக்கி
யாகம் வளர்க்கையில்,
வழிந்தோடும் என் வலியை
நீ உணர..

தேனூறும் என் நெஞ்சின்
தெளிவை நீ  அறிய‌
நீ ....நானல்லவே.

இரவெல்லாம் யோசித்து
விட்டுவிட்டேன் இன்று,
உன்னையல்ல...
உன் மீது நான் கொண்ட கோபத்தை,
என்னை நம்ப வைக்க‌
நான் செய்த யாகத்தை...

Monday, February 25, 2013

ஹை கூ கவிதைகள்


  விதி !

மாற்றம் ஒன்றை தவிர‌
அனைத்தும் மாறிடும் என்று
அறிந்த எனக்கு,
ஆறு வருடம் முன்பே
ஆறிப்போன என் அழகை
அறியாமல் போனது
என் விதியே..


                 

முன்பு
    என்னை கண்டு பிரிகையில்
  அழுதிட்ட உன் மனம்
இன்று
   என்றும் காண விரும்பிடாது
  மாறிட்ட மாயம் என்ன??
உன்னை
    மன்றாடி கேட்கிறேன்
   மறைத்திடாது கூறிடுக‌
   அன்பில் நான் செய்த‌
     குறை என்ன??




          சவுக்கடி

காசில்லை, பணமில்லை
அழகில்லை ,வயதில்லை
ஆனால் அள்ளி கொடுக்க‌
அன்பிருக்கு என்ற என்
ஆணவத்துக்கு சரியான‌
சவுக்கடி கொடுத்து விட்டாயே .....

கேரளத்து பைங்கிளியின் 
பவுர்ணமி பூஜையில்
கிடைக்க போவது
உனக்கு பணமா?
கிடப்பில் கிடந்த‌
உன் வாழ்க்கைக்கு வளமா?

( sorry ithu kavithai alla  )




            ஏனோ??


அன்று
 என் கைபிடித்ததும்
பிறவி பயன் பெற்றதாக‌
கூறிய நீ
இன்று
 என் கண்பட கூடாது
என்று பதறுவது ஏன் ???




      உன் கைபேசி

அன்று ராணிக்காக‌
வாங்கிய உன் கைபேசி
இன்று அவளை தவிர‌
அனைவரிடமும் 
அழகாக பேசுகிறது


Sunday, February 24, 2013

I Hate mirror


என்னை கறுப்பழகி என்று பொய்யுரைத்த‌
என் வீட்டு கண்ணாடியை
காலமெல்லாம் வெறுக்கிறேன்...

உணர்ந்த உண்மை


நான்கு வருடம்  என் இதயத்தில்
நங்கூரம் இட்ட நீ,
நான்கு நாட்களுக்கு முன்
பார்க்க பிடிக்காமல் அழித்தது-என்
புகைபடம் மட்டுமல்ல...
புகைபடிந்த மனதையும் தான்.

தெளிந்த ம‌னது தெளிவாக சொன்னது
நான் தேவதையல்ல‌
தேய்ந்து போன " தெரிவை" என்று...


( பேதை,  பெதும்பை,  மங்கை, மடந்தை, அரிவை,  தெரிவை,   பேரிளம் பெண் இது பெண்ணின் 7 பருவநிலை)

அரிவை என்பது 6 வது பருவம்

Thursday, January 10, 2013

அஞ்சலி


(டெல்லியில் கற்பழிக்கபட்ட மாணவி வெறும் கற்பழிப்புக்கு மட்டும்
ஆளாகவில்லை,கொடுரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாள்,
எல்லார் மனதிலும் இவ்வளவு தாக்கம் ஏற்பட அதுவும் ஒரு காரணம்...
அந்த மாணவிக்கு இந்த கவிதை சமர்ப்பணம்.....)

காலதேவன் ஆலயத்தில்
கனவுச் சுமந்த காரிகையே!
காற்று கை தொடுகையில் 
கனிந்து விடும் மாங்கனியே!

மலர் போன்ற உன் தேகம்
மறைந்து விட்டாலும்
எங்கள் மனதோடு
உன் நினைவு படிந்து விட்டதடி...

காமனின் களியாட்டத்தில்
காலாவதியானதுவோ இரக்க குணம்
மருத்துவராகும் உன் கனவை
மண்ணில் புதைத்ததுவே
மிருக மனம்.......

பூவே நீ
உன்னை காக்க‌
புயலாக போராடியும்
பேரிடி தாக்கத்தில் 
சிதறி விட்டாயடி.......

மகத்தான தேவதையே!
மண்ணில் மங்கையருக்கு
எச்சரிக்கை மணியடித்து
நீ மரணத்தை ஏற்றுக்கொண்டாய்....

சாக்கடையில் பிறந்த‌
அந்த சாத்தான்களுக்கு
சட்டம் சாட்டையடி கொடுக்கவில்லை
சாகும் வரை இன்னும் தூக்கிலிடபடவும் இல்லை....

சகோதரிகள் எங்கள் பாதுகாப்பிற்கு
சட்டம் வர காரணமானவளே!
சத்தியமாய் சொல்கின்றோம்,
உன் சமாதி ஈரம் காயும் முன்னே
அந்த காம சாத்தான்களுக்கு
கசையடி நாங்கள் கொடுப்போம்....

தன் உடலும் உயிரும் உருக்கி
எங்கள் உணர்வுகளை தொட்டவளே!
உன் ஆன்மா சாந்தியடைய‌
ஆண்டவனை வேண்டுகின்றோம்.......

Monday, January 7, 2013

கோவை மாநாடு




நித்தம் வேக வைத்து
சித்தம் கலங்கிய,
சிதிலடைந்த என் இதயம்
பித்தம் தெளிந்து
சுத்தமென்றாக்கிய‌
சுதந்திர நன்னாள்.......

பலர் போதனைகள்
செய்த போதும்
வேதனையே வாழ்க்கையாக்கி
வேடிக்கை பார்த்த என்னை
வேரோடு மாற்றி
எனக்கு மறுவாழ்வு
கொடுத்த நாள்.........

காடு மலை தேடியும்
கிடைத்திடாத பேரின்பம்
என் காலடி பனிதுளியில்
நான் கண்டமுதல் நாள்.........

மாபெரும் மாநாட்டில்
மனதிலொரு பெருமாற்றம்
மாறியது நானா? -அல்லது
மாற்றியது ஷாஜகானா?
காரணம் யாரெனிலும்
கடவுளுக்கே நன்றி........

Wednesday, September 19, 2012

கவிதை



கண்ணனை எண்ணி 
கவிதை எழுத‌
கண்களை மூடினேன்
கன்னம் நிறைத்தன‌
என் கண்ணீர் துளிகள்...

என்னுள் எல்லாமாய்
நீயிருக்க‌
என்னவென்று எழுத?
நீர்,    நிலா,காற்று
எதில் சென்று உன்னைத் தேட?

லட்சம் பல வார்த்தைகள் 
என்னைச் சுற்றி வட்டமிட‌
ஒற்றை வரி கிடைக்கவில்லை
உன்னைப் பற்றி நான் எழுத...

வெற்று காகிதம் என்னை
வெறுமையாய் கேலி செய்ய
வேறெதுவும் தோன்றாமல்
வேடிக்கை பார்க்கிறாய்
என்னுள் நீயிருந்து..........

Saturday, March 10, 2012

மெளனத்தின் ஓசை

இரும்பு இதயத்துள்- உன்னை
இறுக்கி பூட்டி வைத்தேன்,
நெருப்பு வார்த்தைகளால்
உருக்கி உடைத்து விட்டாய்..

உன் அன்பு ஒன்றை பெற‌
அனைத்தையும் அடகு வைத்தேன்..
சுற்றம் தவிர்த்தேன்,
சுற்றுலா தவிர்த்தேன்,
நட்பு தவிர்த்தேன்,
நல் விழாவினை  தவிர்த்தேன்,
ஆனால்
நீ என்னை தவிர்த்தது தெரியாமல்...

காதல் வயப்பட்டு
வரம்பு மீறியதால்
வார்த்தைச் சாட்டையால்
விலாசி எடுத்து விட்டாய்
வலி தாங்காது மூர்ச்சையாகும் வரை...

என்னை வேண்டாமென‌
நயமுடன் சொல்லியிருப்பின்
நானாக விலகியிருப்பேன்
வீணாக "வலி"யின்றி.....

உணர்வோடு பேசிய வார்த்தைகளே
உரு குலைந்து போன பின்னே
என் மெளனத்தின் ஓசை மட்டும்
உனக்கு கேட்கவா போகிறது???

Monday, February 20, 2012

வன வாசம்..

மான்க‌ள் மருண்டோட‌ 
மயில்கள் மகிழ்ந்தாட‌ 
குயில்கள் கூடி கூவ
கும்மிப் பாட்டோடு
குதூகளிக்கும் வண்டாட..
வண்ணக் குவியலாய் 
வாசனை மலர்களோடு 
மகிழ்ந்திருக்கும் 
மாலைப் பொழுதில் 
மனதில் சுமையோடு 
ஒருத்தி மட்டும் சாய்ந்து நின்றாள்
ஓரமாய் தென்னையோரம்... 
               ( சீதா தேவி )

அன்பும் விஷமே..

உன் உயிரே நானெனினும்
உரசிச்செல்லும்
என் வார்த்தை ஒவ்வொன்றும்
 உயிரோடு எரிக்கிறது உன் உணர்வை..

உன் சுவாசமே நானெனினும்
 அதன் சூடு தாங்காது
துவண்டு போகிறாய் சில பொழுது...

அன்பை மட்டும் யாசித்த‌
 உன்னைப் பற்றி
 அதிகம் யோசித்தேன்..

உன் ஆணி வேரோ
என்னைச்சுற்றி,
மர விழுதுகளோ
உன்னைச்சுற்றி...
வேரினை விடவும் முடியாது,
விழுதினை வெட்டவும் தெரியாது,
தவிக்கும் உன் உணர்வு
சொல்லாமல் சொல்லியது,
அளவுக்கு மிஞ்சினால்
அமுது மட்டும் அல்ல‌
அன்பும் விஷம் தான் என்று....

Sunday, November 13, 2011

நிலா....


காலை விடிகையில்
காற்றில் கரையும் நிலா....

நித்திரை கொள்கையிலும்
தன் முத்திரை மறைக்கும் நிலா...

நினைவுகள் எங்கும்
நீந்திச் செல்லும் நிலா...

என் கனவில் மட்டும்
தினம் வந்து போகும் உலா..

பார்த்து பார்த்து லயித்தாலும்
பாத்திய படாதவளான‌தால்

பங்கு பெற முடியாத‌
உன் வாழ்க்கையில் விழா....

ஏற்றுக்கொள்


பிடிக்கிறது என்பதனால்
காற்றை பிடிக்க இயலுமா?

பிடிக்காது என்பதனால்
சூரியனை மறைக்க முடியுமா?

சொத்து முழுதும் கொடுத்தாலும்
முழுமதியை சொந்தமாக்கிட இயலுமா?

காலச்சக்கரத்தின் ஓட்டம்
என் கால் தடுப்பில் நிற்குமா?

இயலாது ...முடியாது ....நிற்காது...
என தெரிந்தும்

தெறித்து விழும் விழியோடும்
வெம்பி அழும் மனதோடும்
தினம் மல்யுத்தம் ஏனோ??

Saturday, October 8, 2011

என் காதல் வாழும்...

உன்னையும் என்னையும் அன்றி
"அவன்" மட்டும் அறிந்த‌
என் காதலை
என்னையும் "அவனை"யும் அன்றி
நீ கூட அறியவில்லை,
இருந்தும் பரவாயில்லை
என் காதல் வாழும்.....

அதற்கு உருவம் வேண்டாம்
மொழிகள் வேண்டாம்
ஸ்பரிசம் வேண்டாம்
விசாரிப்புகள் வேண்டாம்
ஆயினும் என் காதல் வாழும்.....

மெய் மறைக்க வேண்டாம்
பொய்யுரைக்க வேண்டாம்
வரி வரி யோசித்து பேச வேண்டாம்
வார்த்தை அளவிட்டு ஏச வேண்டாம்
ஆயினும் என் காதல் வாழும்.....

சண்டை வேண்டாம்
அதனால் வரும் கண்ணீர் வேண்டாம்
கடந்த காலம் மனதில் கொண்டு
கற்பை கலங்கடிக்கும் வார்த்தை வேண்டாம்
ஆயினும் என் காதல் வாழும்.....

ஏனென்றால்
என் காதல் காதலனும் அறியா காவியம்..
கனவிலே நான் எழுதிய ஓவியம்
ஒற்றையாய் நான் வாழும் ஆலயம்
எனவே என் காதல் என்றும் வாழும்.....

Thursday, September 15, 2011

ஸ்ரீ ரமணர் பொன் மொழி


"அவரவர் பிராரப்தப் பிரகாரம்
அதற்கானவன் ஆங்காங்கிருந்து
ஆட்டுவிப்பான்

என்றும் நடவாதது என்
முயற்சிக்கினும் நடவாது;

நடப்பது என் தடை செய்யினும்
நில்லாது.

இதுவே திண்ணம் ஆதலின்
மெளன‌மாயிருக்கை நன்று".



( ஸ்ரீ ரமணர் பொன் மொழி )‌

Friday, August 12, 2011

கடிதம்



[எனக்கு நானே எழுதிக்கொண்ட கடிதம்]


பிச்சை எடுத்து வாழ்வது ஒரு வாழ்வா?
எச்சில் இலை நீயென்றிந்தும்
எருக்கன் செடியே
உனக்கு ஏனிந்த மோகம்?

துளியூண்டு போதையால்
பாதை மாறி போனவளே!
இன்று பைத்தியமாய் ஆன பின்னும்
மீண்டு வர மனமில்லையா?

மாண்டிட மனம் துணிந்த உனக்கு
வாழ்ந்திட வழியில்லையா?

காதல் அமுதம் தான்
அளவுக்கு மிஞ்சி போனதால்
விஷமாகி விருட்சத்தை அழிக்கிறது
அனுமதிக்கலாமா அதற்கு?

வெறுப்பை நெருப்பாய்
கொட்டுகையில்
நெருங்கி போகாதே
நொறுங்கி போகும் உன் இதயம்...

யோசித்து பார் ஒரு நிமிடம்
யாசித்து பெறுகையில்
காதலும் உனக்கு பிச்சை தான்..
பிச்சை எடுத்து வாழ்வது ஒரு வாழ்வா?

நானும் கவிஞன் தானோ?


பலர் சொல்லி கேட்டதுண்டு
கவிஞனுக்கு கற்பனா சக்தி அதிகம் என்று
காதலைப் பற்றிய 'கற்பனை'யில் அது
காலாவதியானதை கூட அறியவில்லையே..........
ஓ! நானும் கூட கவிஞன் தானோ??/‌

Thursday, August 11, 2011

ஏன்???


[அடுக்குத்தொடரில் எழுத முயற்சி செய்து இருக்கிறேன் ]


போ போ என் தடுத்தும்
வாவா என்றழைத்த‌
வசந்தமே! இன்று
வேண்டும் வேண்டும்
என்றழுதும்
வேண்டாம் வேண்டாம்
என் மறுப்பதேன்???

தேடி தேடி அலுத்த பின்னே
நாடி நாடி வந்த
அமுதமே! இன்று
வாடி வாடி வதங்கினாலும்
எனை உதறி
ஓடி ஓடி ஒதுங்குதலேன்???

மூச்சடக்கி மூச்சடக்கி
முத்தெடுத்தேன் உன் உருவில்
மூளையில்லா பேதையென்றே
முத்திரை முகத்திரையில்
குத்தியதேன்??

பல பல பேர்களுக்கு
பகிர்ந்தளித்தேன் அன்பினை
அது உனக்கு உனக்கு என்
உருகுவது தெரிந்தாலும்
மருகி மருகி தான் வாழுகிறேன்
இருந்தும் மன்னிக்க மறுப்பதேன்???

காதல் காதல் என்று
கையேந்தி நின்ற போது
காணிக்கை மறுக்கையிலே
மனம் சாதல் சாதல் என்றே
சாஷ்டாங்கமாய் வீழ்கிறதே.........

Wednesday, August 10, 2011

காரணி




காதலும் ஒரு வகை
சித்ரவதை தான்
இருந்தும் இனிக்கிறது
விரும்பி நான் ஏற்றுக்கொண்டதால்....

அணுக்களை கட்டையாக்கி
ஆர்மோனியம் இசைக்கிறது
இருந்தும் ரசிக்கின்றேன்
என் ரகசியமே அதுவானதால்...

ராத்தூக்கம் பறித்து
பகற்பொழுதே நீள்கிறது
இருந்தும் மகிழ்கின்றேன்
உறக்கத்தில் உன் குரல் கேளாதென்பதால்...

சத்தமின்றி ஓடும் இரத்தம் கூட‌
சலசலத்து கேட்கிறது
இருந்தும் சங்கீதமாய் உணர்கின்றேன்
உன் பெயரை அது உச்சரிப்பதால்....

ஆனால்

உண்மையில் துடிக்கும்
என் இதயம் மட்டும்
இன்று வரை கேட்கவில்லையே ஏன்?
ஓ ! உன் நினைவுச் சுமையில்
நினவிழந்து கிடக்கிறதோ !

Friday, July 15, 2011

அறிவேன்


உயிரை விட உயர்வான
ஒரு வார்த்தை
உன் பெயரன்றி
வேறொன்றும் நானறியேன்....

பாசத்தை பதியமிட்டு-நீ
ஓசையின்றி ஒதுங்கி நிற்க‌
உலகிலே உன்னையன்றி
வேறுருவம் நானறியேன்....

உயிரே உயிரே என்றழைத்து
என் உயிர் மூச்செல்லாம் திருடிச் செல்ல
உறவெல்லாம் கூடி கேட்டும்
நான் யாரென்றே நானறியேன் ......

உன்னை என்னை படைத்த பிரம்மன்
உண்மையில் குழம்பி விட்டான்
நீயும் ,நானும் யாரென்று???

அது பாதி வாழ்வில்
உயிர் பெற்ற "பரணி " என்று
படைத்தவனோடு
நான் மட்டும் அறிவேன்.....

Sunday, April 3, 2011

அமைதி

சுனாமி தோன்றும் வரை
ஆழ்கடல் அமைதி தான்...

'மேக்மா' சிதறும் வரை
எரிமலையும் அமைதி தான்...

பட்டென கொட்டும் வரை
தேள் கூட அமைதி தான்...

இடியும் மழையும் இணையும் முன்
கார்மேகமும் அமைதி தான்...

மன்னித்து விட மன்றாடியும்
மறுத்து வறுக்கும்(வார்த்தையால்)
நீ கூட அமைதி தான்....

அமைதியே உனது
பெயர் காரணம் தான் என்ன??

Wednesday, February 2, 2011

வால் நட்சத்திரம்

[ மிகுந்த கஷ்டத்தில் இருந்த ஒரு பெண்ணை
ஒரு வசதியான வீட்டு பையன் விரும்புகிறான்
அவர்களை பற்றிய கவிதை]

நீல வானமாய் என்
நிர்மல வாழ்வில்
நீண்ட தொலைவில்
தோன்றியது வால் நட்சத்திரம்.....

கார் மேகம் சூழ்கையில்
கண்ணெதிரே தோன்றியிருப்பின்
அடை மழை பொழிந்த கண்கள்
அமுத மழையில் நனைந்திருக்கும்....

இடி மின்னல் உரசலில்
இடையினில் உதித்திருந்தால்
பூர்வ ஜென்ம பந்தமொன்று
புது பிறவி எடுத்திருக்கும்.........

சுடு நெறுப்புச் சொல்லிலே
சுக்கு நூறாய் சிதறுகையில்
தூரத்திலாவது வந்திருந்தால்
வசந்தம் வேர் விட்டு துளிர்திருக்கும்.........

ஆனால்...

மின்னலில் மிதிபட்டு
அடைமழையாய் அழுத பின்னே
நெருப்பாய் மனம் தகிக்கையிலே
வந்து நின்றாயே ஏன்?

என் வேதனை தணிக்கவா [வா?]
வேரறுந்த கொடியென்னை
உன் தோளில் சாய்க்கவா [வா?]
உயிர் பிரிந்து போகும் வேளை
உன் உயிரை ஊற்றவா [வா?]
இல்லையெனில்
வாழத்தால் வழியில்லை
என்னோடு சாகவா [வா?]

இறுதியாய் கூறுகிறேன்
இனியாவது வந்து விடு
இருவரும் புவியிலே
புது விண்மீனாய் ஜொலித்திடுவோம்..........

Thursday, December 9, 2010

உன்னுள் கண்டேன்

[ தன் பையனே உலகம் என்று எண்ணிய‌
தாய் அவன் வேறு பெண்ணை விரும்பியதும்
அதை எண்ணி புலம்பியது ]

எனக்கோர் புது உலகம்
உன்னில் நான் கண்டேன்.

என்னுயிரின் மறுபாதி
உன்னுடலில் உலவக்கண்டேன்...

ஆறடி உயரத்தில்
அடை மழை நான் கண்டேன்...

அதில் துளியூண்டும் குறையாது
அனுதினம் நனையக்கண்டேன்...

அங்கேயும் ஒரு இதயம்
எனக்காகத் துடிக்க கண்டேன்...

அதில் அணுவெல்லாம்
துகள் துகளாய் என் நினைவு தான் என்றேன்...

அதில் ஆக்ஸிஜன் குறைகையில்
என் மூச்சு திணறக்கண்டேன்...

உறவுகளை மதியாது
உலகத்தை ஒதுக்கி வைத்தேன்...

நீ ஒருவன் போதுமென்று
புது உலகம் நான் செய்தேன்.....

அதை உற்று பார்க்கையில் தான்
உன் குரல் கேட்க கண்டேன்...

உனக்கென்று ஒரு மனம்
இருப்பதை உணர்ந்து கொண்டேன்...

அதில் விருப்பொன்றும் வெறுப்பொன்றும்
இருப்பது தெரியக் கண்டேன்...

சடுதியில் என் உலகம்
சரியக் கண்டேன்...

ஊரார் கை கொட்டி சிரித்திடும்
கரகோசம் கேட்க கண்டேன்...

காண்பது கனவா என்று
கண் கலங்கி ஒதுங்கி நின்றேன்....

Monday, November 8, 2010

மௌனத்தின் தாக்கம்


அழகு விள‌க்கொன்று எரிய‌
அதை விளையாட்டாய் என் விரல் தடவ‌
ஒரு முறை சுட்ட காயத்தில்
ஓராயிரம் ஓட்டைகள்
என் இதயத்தில்...

பேசியே பழி வாங்கும் உலகத்தில்
பேசாது பைத்தியமாக்க‌
எங்கு நீ கற்று கொண்டாய் ?
வைத்தியத்திற்கு வழியின்றி
வாய் மூடி அழுகின்றேன்...

நெருப்பைக் காதலிக்க‍‍‍‍‍‍‍‍_ நான்
நெருப்புக் கோழியுமில்லை
நெருப்பென்று விலகிச் செல்ல_என்
நெஞ்சிலே துணிவுமில்லை...

சுட்டிடும் சூரியனை
சுற்றிடும் பூமியாக‌
எட்ட நின்றேனும் பார்த்திடுவேன்
ஏங்கிடும் இதயத்தை
தாங்கிக் கொண்டே.....

Wednesday, October 13, 2010

காதலுக்கே காதல் பரிசு


( நம் வாழ்வில் நடந்தால் மட்டும் தான் கவி எழுதமுடியுமா?
பிறரையும் என்னைப் போல் எண்ணியதால் எழுதியது தான் இந்த கவிதை)


என்னை தெய்வம் என்றாள்
என் தாய்...
தேரில் வந்த தேவதை என்றார்
என் தந்தை....
தேன் மதுர கவி என்றாள்
தோழி....
எதிலும் அசையாத என் மனம்
நீ "உயிரே" என்ற போது
உருகி ஓடியது ஒரு நொடி...

அன்றிலிருந்து
பறந்தேன் ..பறந்தேன்
பரவசத்தில் விண்ணை த்தாண்டி மிதந்தேன்..

விண்மீனை உமக்கு பரிசளிக்க‌
மீண்டும் மண் நோக்கி தவழ்ந்தேன்...

வழிபோக்கன் சொல் கேட்டேன்
வராதே பெண்ணே
நிஜம் வேறு நிழ‌ல் வேறு
நிஜம் நிஜமாகி விட்டது
நீ வெறும் நினைவாகி விட்டாய் என்று...

நொறுங்கிப் போனேன் நான்
அழுதேன் அரற்றினேன்
பித்து பிடித்து பேதலித்தேன்..

தெளிகையில் மனம்
தெளிவாய் சொன்னது
உன்னை உயிரென்ற உடல்
அதன் உயிரோடு சேர்ந்தது
உன் காதல் உண்மையெனில்
விட்டு கொடு " உன் உயிருக்காக"என்று..

இடிந்து போன என் இதயம்
இறுக மூடி க்கொண்டது
இம்மையில் மட்டுமல்ல‌
மறுமையிலும் எவரும் நுழையாதிருக்க.....

Monday, September 6, 2010

மறுக்கப்பட்டக்காதல்


நாம் பேசாத நாளெல்லாம்
கனவினில் நீ வந்து
என் கால்களை தடவிப் பார்
தழும்புகளின் எண்ணிக்கை
எகிறி போயிருக்கும்
என் இதய துடிப்பை போல...


தீராத மோகத்தில்
தீயும் முத்தமிட‌
தங்க நிற தோலிலே
கருப்பு நிற வட்ட நிலா...
வருடிக்கொண்டே வாழ்ந்திடுவேன்
உன் நினைவின் பதியமென்று...

என்றாவது ஒரு நாள்
என் மரணச் செய்தி
கேட்க நேர்ந்தால்
மறுக்காது ஒத்துக்கொள்
விதைத்தது நீயென்று...

மறுஜென்ம விதியிருப்பின்
விதிவிலக்காய் வேண்டிடுவேன்
வீணாய் போன மனிதனை விட‌
மந்தியாய் பிறப்பெடுக்க..
மறுக்கப்பட்ட காதலது
மறுபடியும் துளிராதிருக்க‌.........

Thursday, August 12, 2010

எரி தழல் ஏந்தி வா.....


விண்ணும் விரிசல் விழ‌
விளைநிலமெல்லாம் வீடாக‌
வியர்வையை முத்தாக்கி
விளைவித்த நெல்மணியை
தன் சொத்தாக்கி
சோறு போட்ட விவசாயி
வாழ்வில் சோகம் போக்கிட‌
எரிதழல் ஏந்தி வா.....

பள்ளிச் செல்லும் பட்டாம்பூச்சி
பசியினை பகடையாக்கி
பிஞ்சு பொன்விரல்கள்
கன்றி தழும்பேற,
கட்டிய கனவுக்கோட்டையை
காற்றில் சுக்கு நூறாக்கும்
சுய நல அரக்கனை அழிக்க‌
எரிதழல் ஏந்தி வா....

அன்னையால் பிறந்தும்
தங்கையோடு வளர்ந்தும்
தாரமாய் வந்தவளின்
தங்க குணம் பாராது
தங்கத்தை எடைபோட்டு
அவள் அங்கத்தை பஷ்பமாக்கும்
வரதட்சணை அரக்கனை
வேரோடு அழிக்க‌
எரிதழல் ஏந்தி வா....

கருவிலே உருவாக்கி
உயிரையே திரியாக்கி
ஊண் உருக உனை வளர்க்கும்
உன்மத்த பெற்றோரின்
உள்ளம் தகர்த்து
முதியோர் இல்லம் அனுப்பும்
முட்டாள்களை மூழ்கடிக்க‌
எரிதழல் ஏந்தி வா...

Thursday, August 5, 2010

தோல்வியிலும் வென்ற காதல்

பல்லவர் காலத்தில்
பதியம் போட்டு
பாதியில் பறித்தெரியப்பட்ட‌
பாராசீக ரோஜா
வீதியில் வீழும் முன்னே
வீழ்ந்தது உன் விழியில்
புதைந்தது உன் மனதில்...

தொல் பொருள் ஆராய்சியாளர்
தோண்டி தோண்டி பார்த்தாலும்
தோராயமாக கூட
ஆராய முடியாது
புதைந்து போயும்
சிதைந்து போகாத‌
சிற்பமான என் உருவம்......‌

எண்ணூறு ஆண்டுகள்
என்னைச் சுமந்த உன்னை
இந்நூற்றாண்டில் உணருகையில்
உச்சி முதல் பாதம் வரை
உதறல் கண்டே
உள்ளிருப்பு போராட்டம்
தொடர்ந்து கொண்டேன்...

தோல்வி நம்மை தொடரும் வரை
தோற்று போவது நாமல்ல,
வேற்றுக்கிரகம் போனாலும்
நம்மை வேரறுக்க யாருமல்ல,
ஊணில் உயிரில் கலந்த பின்னே
விடும் மூச்சுக் காற்றும் வேரல்ல,
நம் மூச்சு நின்று போனாலும்
முற்றும் போடும் உறவும் அல்ல.....‌

தாய் பாலின் மகத்துவம்


தாய் வழி பிள்ளைக்கு
தானாக தேனாக‌
தங்க பஸ்பமாக‌
ஊணாக உயிராக‌
இரத்தமெல்லாம் பாலாக‌
பாசத்தின் உச்சமாக‌
பாலூட்டும் போழ்தினிலே
பாவையரெல்லாம்
பாரினிலே
பரமனை விட உயர்ந்து விட்டோம்....

பிள்ளை கனியமுதை
அள்ளி அணைத்து
அமுதூட்டும் நேரமெல்லாம்
அதனோடு கை கோர்த்து
துளியூண்டு பசி போகும்
மலையளவு பாசமேவும்...

நோய்க்கு விடை சொல்லும்
நோய் எதிர்ப்பு திரவம்
தினம் தினம் தாய் தரும்
தாய் பாலின் வடிவம்...
தாய்மையின் புனிதத்தை
தானாக நிறுத்திடாது
தாராளமாக கொடுத்திடுக‌
கொஞ்சும் குழவி வளரும் வரை

Wednesday, July 14, 2010

கலைந்திடும் கனவு.....



கனவு கோட்டைக்குள்
காதல் தூளிக் கட்டி
காலமெல்லாம் ஆடி களிக்க‌
அப்பாவி ஒரு கிளி ஆசை பட,
ஆண்டவன் சிரித்துக் கொண்டான்
ஆடு பெண்ணே ஆடு ‍_உன்
அல்பாயுள் முடியும் வரை ஆடு..

நிஜம் எரித்து
நிழல் நிர்மூலம் ஆன போது
உறைத்தது உண்மை
யாரோ எழுதிய பாடல் வரியில்..
கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்...

Saturday, July 10, 2010

காதல் விஸ்வரூபம்

கானல் நீரான காதலை
கண் முன்னே காணுகையில்
கற்பனை வளமென்று
கண் மூடி யோசித்தேன்....

உன் பாச வெள்ளத்தில்
பாதி மூழ்கி போன போதும்
பார்ப்பது கனவென்று
பக்கத்தில் பேசிக்கொண்டேன்...

ஈராண்டு தேக்கத்தை
இரு வரியில் இயம்புகையில்
இதயச் சுவரெல்லாம்
இரத்தச் சுனாமி கண்டேன்...

வெறி பிடித்த வேங்கையாய்
என்னை வேட்டையடி வெல்லுகையில்
வேறெதும் தோணாது
அன்பில் கூட அஹிம்சை கண்டேன்...

அண்ணாந்து நான் பார்க்க‌
விண் முட்ட உன் உருவம்
உன்னுள்ளே எனைக் காண‌
எமனையும் எதிர்க்கும் கர்வம் கொண்டேன்.

காதல் வளர்த்தேன்

காதலியே காதலி என்றாய்
காதல் கொண்டேன்
நானும் உன் மேல்....

கசடில்லா காதலோடு
கையை பிடித்தாய்,
கட்டியணைத்தாய்,
கைப்பிள்ளையாய் எனை மாற்றி
கன்னம் சுவைத்தாய்,
கண்களது கள்வெறி கொள்ள‌
அன்பனைத்தும் அள்ளி குடித்தாய்,
அன்றே
என் ஆணிவேரை
அசைத்து பார்த்த‌
உன் உள்ளத்தை காதலித்தேன்,
உணர்வை காதலித்தேன்,
உன்னுள் இருக்கும்
என்னை காதலித்தேன்,
எனக்காக துடிக்கும்
இன்னொரு இதயம் என்ற‌
இறுமாப்புடன் இறுதியில்
உன்னை நான் காதலித்தேன்.....

தமிழ் ஊறிய சமூகத்தில்
பெண்ணாகிய பாவத்தால்
மண்ணாகி மறையும் வரை
மனம் குளிர காதலித்தேன்
காதலிக்கிறேன்
காதலித்துக்கொண்டே இருப்பேன்.......

எனக்கே எனக்கு


நாய் பெற்ற‌
தெங்கம்பழம் அல்ல நீ
நான் கேளாது பெற்ற
தங்க வரம்.....

வரம் கொடுத்த சாமியே
வந்து நின்று கேட்டாலும்
வன்மையாய் மறுத்திடுவேன்
தண்மையாய் உணர்த்திடுவேன்........

தாயான பின்பு
நான் கேட்ட‌
முதல் தாலாட்டு கவிதை நீ......

தான் தோன்றி சுயம்புவாய்
என்னுள் வளர்ந்த‌
காதல் சொரூபம் நீ......

சொக்கப்பனை சாம்பலை
பூக்கச் செய்த‌
சோலை நிலவொளி நீ....

பாலைவன மனதை
பரவசப்படுத்திய‌
பசுந்தளிர் நீ....

உன்னை பகிர்ந்தளிக்க முடியாது
பரிதவிக்கும் எனக்கு
நாய் பெற்ற‌
தெங்கம்பழம் தான் நீ.....

Monday, June 14, 2010

நிஜத்தின் நினைவுகள்


காலை பனியிலே பனித்துளி
மாலை பூவிலும் மழைத்துளி

உலகம் உறங்கையில்
உன்னுள் கேட்கும்
என் மன ஒலி....

இமைகள் தழுவையில்
எனக்குள்ளும்
அதன் எதிரொலி......

பாதி ஜாமம் விழிக்கையில்
என் செவியிரண்டில்
உன் சிரிப்பொலி......

மறுபடியும் உறங்கையில்
உணருகிறேன்
உள்ளமெங்கும் புது வலி.....

உயிரும் உணர்வும் கலக்கையில்
உன்னை என்னை கேளாது
உடல்கள் இயங்கும் தனி வழி.....

நினைவு

மூடுபனியால் மூழ்கி
உறை பனியால் உறைந்து
ஊணும் உடலும்
விரைத்து விட்ட போழ்தினில்
உள்ளம் மட்டும்
வியர்த்துக் கொட்டி போனதடா
உள்ளிருக்கும் உன் நினைவால்

Sunday, June 13, 2010

மூணார்


மூன்று நாட்களாக தேடியும்
முழுவதும் தெரியவில்லை
முற்றிலும் மூடப்பட்ட‌
மூணாரின் முகவரி...

தேயிலையின் மலை குடைந்து
தேரென ஊர்ந்து சென்று
'தெய்வத்தின் திருநகரின்'
வீதி வரைச் சென்று விட்டோம்...

விடிந்த பின்னும்
விலகவில்லை
விண்முட்டும் பனிப்புகையும்
வியப்பூட்டும் மழைதுளியும்....

வியந்து வியந்து பார்த்தாலும்
விளங்காத அழகுடன்
விடியலிலும் விண்மீன்கள்
மின்மினியெனும் பெயரோடு...

கண்மணி என் கண்களது
கலர் குருடு ஆனது போல்
காணும் இடமெல்லாம்
பச்சை வண்ணம் படமெடுக்க‌
மீதி வண்ணம் தேடி நின்றேன்
மீண்டும் மலையிறங்கி
மதி மயக்கம் தீரும் வரை.....

Thursday, June 3, 2010

நண்பர்

[எனது நண்பர் தினேஷ் பாபு விற்காக எழுதிய கவிதை]


அறிமுகமோ பல வருடம்
அருகாமையோ சில வருடம்,
ஆண்களென்றால் ஆண்டவனாம்
அகராதி பிடித்த உலகத்தில்.....

உன்னில் நான் கண்டேன்
உவர்ப்பில்லா ஒரு உள்ளம்,
பார்வையில் தெரிந்த உன் உருவம்
பழகி பார்கையில் மழலை வடிவம்....

குழம்பியது மனம்
புலம்பியது தினம் தினம்,
தாலாட்ட தாய் வேண்டாம்
தட்டிக் கொடுக்க நீ போதும்...

தாளாது அழும் வேளை
நான் சாய உன் தோள் போதும்...

எழுத நினைக்கையில் எல்லாம்
ஊற்றெடுக்கும் வார்த்தைகள்
உன்னைப்பற்றி நினைக்கையில் மட்டும்
கறைபுரண்டோடியதே...
ஓ..... இது தான் "நட்பீர்ப்பு " சக்தியோ???

Sunday, May 23, 2010

நரக சுகம்

ஊர் உறங்க‌
உலகம் அடங்க‌
என்னுள்
அடங்கா மிருகம் ஒன்று
அசை போட்டு எழும்ப‌
எகிறி குதித்த இதயத்தில்
ஏறி இறங்கியது
இரத்தம்‍_அதன்
அணுவெல்லாம் உனது
சத்தம்.......

சத்தத்தின் சங்கீதமா
இரைச்சலின் இம்சையா,
இரண்டுக்கும் இடைப்பட்ட
இனிய அவஸ்தையா,
ஹார்மோனின் நர்தனத்தில்
நடு இரவு நரக சுகமா?....

நானறியா நாரத கலகம்
ஐம்புலனில் அரங்கேர,
அசைவற்று கிடக்கிறேன்
ஆறாவது புலனில்
உன்னை சுமந்து....

Thursday, April 1, 2010

தெளிவு கொள்....

நிலவினில் வாழும்
நிலா பெண் நீ,
நட்சத்திரத்தை நம்பி
நலிவடைந்து போகாதே....

விண்மீன்கள் வியந்திடும்
செங்காந்தல் மலர் நீ,
உன் கூந்தல் மணம் சேர்க்க‌
மின் மினி பூ போதாதே...

செந்தூரான் சேவடியில்
பொற்றாமரை மலர் நீ,
சேற்றுக்குள் மூழ்கிடும்
செந்தாமரை ஆகாதே...

புரிந்து கொள் பெண்ணே!
புன்னகைக்கும் புது மலர் நீ,
மணம் வீசும் மனம் கொள்
மனம் கொல்லும் குணம் கொல்லாதே....

பூவுக்குள் பூகம்பம்
மனதுக்குள் எரிமலை
மழை நீராய் உன் நெஞ்சம்‍‍_அதில்
கலந்திட்டதே காதலென்ற துளி நஞ்சும்...

தூசி தட்டி எழுந்திடு
சூரிய கதிர் பிடித்திடு
தூரிகையாய் நினைத்திடு
தூயவளாய் உனை வரைந்திடு...

Tuesday, January 12, 2010


மண்ணோடு மண‌ம் புரிந்தும்
விண்ணேடு கரம் சேர்க்கும்
முறையில்லா ம‌ர‌ங்களுக்கு
பெயர் கூட தெரியவில்லை..

வெட்டி வைத்த‌
கேக் துண்டுகளாய்
வட்ட வட்ட
தேயிலைகள்....

விமான பயணம்...


அன்று
அண்ணாந்து பார்த்த‌
ஆகாய பறவை,
இன்று
என் அரையடி தொலைவில்..

ஆனந்த அதிர்வில்
அதனுள் அமர‌
சூரியகதிரோடு கைகோர்த்து
கடலை பார்த்து
கண் சிமிட்டியது..

மேகத்தை முத்தமிட்டே
மேல் நோக்கிச் செல்ல செல்ல‌
மேனியெல்லாம் சில்லிட‌
எட்டி பார்க்க எத்தனிக்கையில்
பூளோகமே ஒரு புள்ளியானது..

நாற்பது நிமிடம்
நானிலம் மறந்தேன்
நானென்பதும் மறந்தேன்
வின்னிலே மிதந்தேன்
இலங்கையை அடைந்தேன்...

மண்ணை
தொட்டன எம் கால்கள்
முத்தமிட்டன அவர் உதடுகள்..
பிறந்த மண்ணை
பிரிந்த துயரில்
இறுகிய அவர் இதயம்
இணைந்த மகிழ்வில்
இளகி கசிந்தது..

அசோக வனம்...


அழகிய வனம்
அதிலொரு பயணம்
அடர்ந்த காட்டுக்குள்
அசோக வனம்...

அழகின் உச்சமென‌
அதிலொரு குளம்
ஆற்றின் மறுபக்கம்
அனுமனின் பாதம்...

உள்ளம் களிகொள்ள‌
உலகம் மறந்தேன்
உறைந்திடும் பனி நீரில்
பாதம் நனைத்தேன்...

சுட்டது தண்ணீர்
சுருக்கென பட்டது மனதில்,
இது தண்ணீரல்ல‌
சீதை அழுத கண்ணீர்...

கண்ணனின் காதலி‍‍-என்
கண்களில் நீர் துளி,
காதலின் பிரிவெண்ணி
ஆற்றில் கலந்தது
மீண்டும் என் நீர் துளி.....

Tuesday, December 29, 2009

புத்தாண்டு வாழ்த்துக்கள்...

பழைய கவலை மறந்திட்டு
மனதில் புதிய கவிதை மலர்ந்திட,
சுக துக்கம் இரண்டிலும்
சுகமே என்றும் நிலைத்திட,
குளிர் நிலவாய் மொழி பேசி
வாழ்வு சூரியனாய் நிலைத்திடவே,
சூத்திரங்கள் சொல்ல வரும்
வருடத்தை வரவேற்போம்..
"வாழ்க வையகம்"

Saturday, December 26, 2009

காதல்..

காதல்
இரு மனம் கலந்து
வெளிவரும் உணர்வு
இரவெல்லாம் அழுதால்
அதிலேதோ தவறு...

காதல் என்ன கத்தரிக்காயா
சமைத்து ருசி பார்க்க?
கண்களுக்குத் தெரியாத‌
கண்ணீர் துளிகள்...

காயாத நினைவுகளின்
காய்ந்து போன வடுக்கள்
காலச்சக்கரத்தில் சிதைப்பட்டு
கன்றி போன காவியம்...

பல‌ சச்சரவுகளிடையே
சமாதியாகி போன‌
என் காதலுணர்வை‍‍
நீ...
மலர்வளையம் வைத்து
மறுபடியும் உயிரூட்ட‌
உணர்கிறேன் புது வலி,
உள்ளமெல்லாம் உயிர் வலி...

Friday, December 18, 2009

என்னுயிர் பிரியா...

சிக்கலான சில பொழுது
சிறகு வலித்து துவளுகையில்
சிக்கெடுத்தச் சிறு விர‌ல்கள்
சீரிய அவள் மொழிகள்,
என்னோடு சிரித்த பலரோடு
எனக்காக அழுத அவள் விழிகள்,
அனைத்தும் கருவாகி
அகம் தன்னில் நெருப்பாகி
அடுத்த பிறப்பிலும்
அன்பாய் உருவாகும்...




குன்றத்தில் ஒளிர்கின்ற‌
கோஹினூர் வைரமவள்,
ஓலமிடும் மன ஒலியில்
ஒன்று கூட கேட்டிடாது,
ஓசையின்றி ஒதுங்கி விட்டாள்
என் உயிரை மட்டும் உருவிக்கொண்டு

என்னுயிர் காதலியே !

ஜீவனுக்குள் ஜீவிக்கும்
என் ஜீவிதமே !
உன் ஜீவனதை குளிப்பாட்டும்
ஜீவ நதி நானே... !

சிந்தனைச் சிதறடித்த
சிங்களத்தமிழ் பெண்ணே!‌
என் சிந்தையதில் அமுதாக‌
கலந்தவளும் நீ தானே....!

அணுவெல்லாம் நுழைந்தாடும்
ஆளுயர ஆக்ஸிஜனே
என் சுவாசமதை சூடேற்றும்
செஞ்சூரியனும் நீ தானே....!

உள்ளத்தில் "கள்"ளாகி
காட்சிதனில் கருவாகி
என்னை களவு கொண்ட
காதலியே !

களிகொள்ளும் என்னுள்ளம்
உன்னை கவிபாடும் போதெல்லாம்...!‌

Thursday, December 17, 2009

நிஜம்.


வாழ்க்கையில் ஏமாந்தவள் அல்ல நான்
ஏமாற்றமே வாழ்க்கையாய் கொண்டவள்....
நிலவை நான் விரும்பினால்
நிலவொளி கூட என்னை விட்டு விலகி விடும்....
பதினேழு வய‌தில்
படிப்பை இழந்தேன்.....
பதினெட்டு வயதில்
பிறந்தகம் இழந்தேன்....
இருபதில் இளமை இழந்தேன்..
வருடம் செல்லச் செல்ல‌
வாழ்வில் எல்லாம் இழந்தேன்..
இறைவனும் என்னை விரும்பாததால்
இரு முறை முயன்றும்
சாவை இழந்தேன்...
பிறகு ஏனிந்த வாழ்க்கை என்ற‌
உன் ஏளன பார்வை புரிகிறது...
சொல்கிறேன்...நான் வாழத்தான் வேண்டும்
என் வண்ணத்துப்பூச்சிகள்
வானில் சிறகடிக்க‌
நான் வாழ்த்தான் வேண்டும்...
இழந்த சிரிப்பொலி எல்லாம்
என்னைச் சுற்றி என்றும்
கேட்கத்தான் வேண்டும்...
அதற்காக எதையும் இழப்பேன்
என்னையும் இழப்பேன்....

Monday, December 7, 2009

கண்ணீர்


ஆண்டவனிடம் கண்ணீர் சிந்து
அருள் மழை உனை நனைக்கும்,

அடுத்தவனுக்காக கண்ணீர் சிந்து
அன்பின் அலை உனை அணைக்கும்,

அஃதின்றி

காதலுக்காக
கண்ணீர் சிந்தும் மானிடா!
நீ சிந்தும் விழி நீரின்
விலையறியாயோ?

கண்ணீர் என்ன கங்கை நதியா
வற்றாது உன் கண்ணில்
வழிந்தோட?

அதனை.....

அன்னைக்கு கடன் கொடு
ஆனந்த கண்ணீரில் உனை நனைப்பாள்

தென்னைக்கு கடன் கொடு
தேடி வந்து தாகம் தணிப்பாள்...

கார் முகிலுக்கும் கொஞ்சம் நீ கொடு
அகிலத்தை அடை ம‌ழையால் நனைத்திடுவாள்

ஆனால்.....

காதலுக்கு மட்டும் கொடுத்து விடாதே
காலமெல்லாம் கண்ணீரில் கரைந்திடுவாய்...

கால‌ங்க‌ள்

கருவோடு உயிராகி
உணர்வோடு உயிராகி
தாயின் மடியில் உலாப்போனது
வாழ்வின் நிலாக்காலம்...

"பேதை"பெண்ணாகி
போதை மொழிபேசி
பொலிவுடன் திகழ்ந்தது
வாழ்வின் இளமைக்காலம்...

"பெதும்பை"பருவத்தில்
பதுங்கியிருந்ததால்
பாதி உலகம் மறந்த‌து
வாழ்வில் வசந்த காலம்...

"மங்கை" நான் மலராகி
மணாளன் தோள் மீது
மயங்கி மகிழ்ந்தது
வாழ்வின் வசந்த காலம்...

"மடந்தை" பருவத்தில்
மழலையின் மொழியில்
மகிழ்ந்து குலைந்து கரைந்தது
வாழ்வின் பொற்காலம்....

"அரிவை" யாகி அனைத்தும் அறிந்து
தெரிவை பெண்ணாகி
தெளிந்து நிற்ப‌து
வாழ்வின் நிக‌ழ்கால‌ம்....

"பேரிளம்" ப‌ருவ‌த்தில்
பேர‌ன் பேத்தியுட‌ன்
பேரான‌ந்த‌ம் பெற‌‌ப்போவ‌து
வாழ்வின் எதிர் கால‌ம்....

வா என்ற‌ழைத்து
வ‌ருந்தி அழுதாலும்
வ‌ராம‌ல் போவ‌து
வாழ்வின் இற‌ந்த‌கால‌ம்....

Friday, November 27, 2009

கண்ணன் என் காதலன்

வளைந்து செல்லும் சாலையில்
உயர்ந்து நிற்கும் பாறையில்
மயங்கி நான் தேடுகிறேன்
'மதுசூதனா' உன் எழிலை!

வெள்ளி நீர் வீழ்ச்சியில்
அது துள்ளி விழும் ஓசையில்
ஓய்வின்றி பார்க்கிறேன்
'கார்முகிலோன்' களிநடனம்!

சோலை நில‌வொளியில்
கான‌ குயிலொலியில்
க‌சிந்துருகி யாசிக்கிறேன்
'க‌ண்ணா' உன் குழலொலியை!

மேனி த‌ழுவும் ம‌ழைத்துளியில்
எனை மூடும் ப‌னிப்புகையில்
ம‌ன‌தார‌ உண‌ர்கின்றேன்
'மாதவா' உன் ஸ்ப‌ரிச‌ம்!

புன்ன‌கைக்கும் புது ம‌ல‌ரில்
பூத்திட்ட‌ ப‌னித்துளியில்
ப‌ரவுத‌ய்யா உன் வாச‌ம்
'ப‌ர‌ந்தாமா' நீயெ என் சுவாச‌ம்!

எங்கெங்கு நோக்கிலும்
உன் உருவ‌ம் தானென்று
க‌ண் மூடி தூங்கினேன்
க‌ன‌விலும் வ‌ந்து க‌ள‌வாடி சென்றாய‌டா...


[கொடைக்கானல் செல்லும் போது எழுதியது]

Thursday, November 26, 2009

தோழியின் பிரிவும்,தோழனின் வரவும்.

மகேஷ்வரன் மறுத்தும்
மண்ணுக்குள் மறைந்த‌
மாணிக்கப் பெண்ணின்
மலர் முகம் காணாது,
பித்து பிடித்து
பேதலித்த பேதையினை,
போதையேற்றி தெளிய வைக்க
போராடும் போதினிலே,
மூடுபனியாய் எனை மாற்றி
மூச்சு விட வைத்த‌
மூலிகை மாணவன் ‍_ உன்னை
மூப்பினிலும் மறவேனே!

இலக்கணக்காதல்

பெண்மையின் இலக்கணத்தை
'புணர்ச்சி' (மன)விதிப்படி
புணர்ந்து
இலக்கணப் பிழையாக்கிட்ட‌
என் தலைவனுக்கு
இதயம் எழுதிய‌
இரு வரி 'குறுந்தொகை'யை
'குழு உக்குறி'யில்
குறிப்புணர்த்த‌
'மங்கலச்சொல்'
மனதினில் மலரவில்லை
தமிழ் மொழி கற்ற தமிழனுக்கு
'விழி மொழி' கற்க‌
கண நேரம் கிடைக்கலியோ?


['புணர்ச்சி' 'குழு உக்குறி' 'மங்கலச்சொல்' ]
இதெல்லாம் தமிழ் இலக்கணத்தில் வரும் சொற்கள்

Wednesday, November 25, 2009

பெண்ணே நீ


பசித்தவனுக்கு மட்டும்
உணவாய் இரு
பசியற்றவனின்
ஊறுகாயாகி விடாதே...

அறிவுப் பசியென்றால்
கல்வி களஞ்சியமாயிரு...

காதல் பசியென்றால்
கட்டிய மனைவியாயிரு...

காமப்பசியென்றால்
கற்பில்லா காதலியாயிரு...

ஆனால்
அன்பு பசியென்றால்
அனைத்துமெ நீயாயிரு...

மறந்து விடாதே பெண்ணே!
பசித்தவனுக்கு மட்டும் உணவாயிரு...

Sunday, November 22, 2009

இளவரசியின் முடிவு

ஒரு சிறிய கதை....

[ஒரு இளவரசியை சேர நாட்டு படை தளபதி விரும்புகிறார்.
ஆனால் அவள் தந்தையோ வெரொரு வணிகரை மண‌ம் செய்து வைக்க‌
விரும்புகிறார், எது தெரிந்து மூவ‌ரும் ஒருவருக்கு ஒருவ‌ர்
விட்டு கொடுப்பதாக நினைத்து தன் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள்..
இதை பார்த்த இயற்கை தேவன் அடுத்த பிறவியிலாவது மூவரும் இணைந்து
சந்தோசமாக வாழ ஆசிர்வதிக்கிறார்..

மறுபிறவியில் அவள் வணிகரை முதலில் மணம் முடித்து விட்டாள்.‌
நீண்ட இடைவெளிக்கு பிறகு தளபதியை சந்திக்கிறாள்...அப்போது அவள் என்ன‌
முடிவு எடுத்தால் மூவரும் சந்தோஷமாக வாழலாம்????]



முடிந்து போன‌
சொந்தமொன்று
முல்லை மலராய்
மூச்சு விட‌
வானம்பாடியாய் வந்தது
வணிகரின் காதல்...

வசந்த கால நதியினிலே
சுழல் ஒன்று வந்தது போல்
தலையெடுத்த காலம் வரை
வாராத தளபதி
தலை நரைத்து போகும் முன்
வந்து விட்ட கோலமென்ன?

இயற்கை தந்த சாபமோ
இளவரசி செய்த பாவமோ
இன்றும் காதல்
இதயத்தை கிழிக்கிறதே....

காலம் கடந்த காதலை
கருத்தினில் ஏற்க முடியாது
காம‌ம் க‌ட‌ந்த‌ காத‌லாய்
க‌ண்ணுக்குள் சிறை வைத்தாள்
'ந‌ட்பாக‌'

Friday, November 20, 2009

முறையற்ற காதல்

[ஒருவர் ஒரு பொண்ணை விரும்புகிறார்...அந்த பொண்ணுக்கும்
அவரை பிடிக்கும்...ஆனால் அவர் அவளுக்கு அண்ணன் முறை..
அது தெரிந்து அந்த பெண்ணின் உணர்வுகள்]


காதலுக்கு கண்ணில்லையென்று
எனக்கு தெரியும்,
உறவு முறையும் இல்லையென‌
நீ சொல்லி தான் தெரியும்...

அழகாய் இருக்கிறாய்
என் அடி மனதில் இனிக்கிறாய்
ஆறடி எரிமலையாய்
என் ஆயுள் நனைக்கிறாய்...

மனம் திறந்து சொல்லாமல்
மறைமுகமாய் உணர வைத்தாய்
உயிரும் உட‌லும் உறைந்தாலும்
என் உள்ளம் ம‌ட்டும் உத‌ற வைத்தாய்...

தாம‌தித்த‌ கார‌ணத்தால்
த‌ங்க‌த்தை ம‌றுக்க‌ முடியாது
த‌ங்கையென்னும் அரிதார‌த்தில்
நான் அழுதது உமக்கு தெரியாது...

ம‌றுபிற‌வி ஒன்றிருந்தால்
மறுப‌டியும் பிற‌ந்திடுவோம்
அத்த‌ணை உற‌வு எதிர்த்தாலும்
அவ‌னியிலே ஜெயித்திடிவோம்...

Monday, November 16, 2009

புதிய‌ ந‌ட்பு

உன் அறிவில்
அதிசயித்த என்னை
ஏறிட்டு நீ பார்க்க‌
ஏற்பட்ட ஓர் தருணம்...

பத்தாண்டு
பலமொழியில்
பரிமாறா பாலப்பாடம்,
ப‌த்து நொடி விழி மொழியில்
ப‌சியாறிய‌
விந்தையென்ன‌...

காத‌ல் காம‌ம்
த‌ழைத்தோங்க‌,
தாவ‌ணி ப‌ருவ‌ம் என‌க்கில்லை..
தாயாய்,த‌ங்கையாய்
ஆன‌ பின்னே
என்னுள் வ‌ந்த‌ மோன‌ நிலை...

என‌க்கே தெரியா
பெண்ணொருத்தி,
என்னிள் இருந்த‌
இன்னொருத்தி,
என்றும் வ‌ருவாள் உன்னோடு,
உயிராய் 'ந‌ட்பு'ஒளியேந்தி.......

Thursday, October 8, 2009

வாழ்க்கை

ஓராண்டா....ஈராண்டா
இருபத்தி மூவாண்டு தவம்,
த‌டைப‌ட்டு போன‌து........
கல்லூரியில் கால் வைக்கும் முன்
காற்றில் சுழ‌ன்ற‌து
என் காலச் ச‌க்க‌ர‌ம்.....

ச‌ர‌ ச‌ர வென்றோடிய‌
வாழ்வில்
வசந்த‌மும் வந்த‌து,
வள‌மையும் தந்தது,
சிற‌கும் விரித்த‌து,
சிலுவையும் சுமந்த‌து......

இள‌மையை அட‌கு வைத்து
குடும்ப‌ம் தழைத்த‌து.....
த‌ர‌ணியில் த‌லைகாட்ட‌
தாழ்வு ம‌ன‌ப்பான்மை
என்னுள்
தாண்ட‌வ‌மாடிய‌து.....

மூழ்கிய‌ எரிம‌லை
மெதுவாய் மூச்சு விட‌
தாக‌ம் த‌லைக்கேறி
த‌மிழ் மோக‌ம்
என்னுள் "மேக்மா"வாய்
வழிந்தோடிய‌து
த‌மிழ் க‌ற்க‌ நினைத்தேன்
க‌ன‌வில் திழைத்தேன்....

Tuesday, October 6, 2009

glitters09



காலையில் கண்விழித்தேன்
கண் முன்னே கலர் கனவு
கவனத்தில் வந்தது
இன்று இளமை திருவிழா....

பத்து மணிக்கு மண்டபம் அடைந்தேன்
என் வயதில் 10 குறைந்தது,
பார்வையில் பட்ட‌
பாவையரின் கண்களில்
எந்தன் பாதியே தெரிந்தது...

ப‌ன்னிர‌ண்டு ம‌ணித்துளியில்
க‌விதை தேர்ந்தெடுக்கும்
க‌விஞ‌னானேன்,
கை கொட்டி கேலி செய்த‌
என் ம‌ன‌தை ம‌றைத்து...


ம‌திய‌ம் செல்ல‌ச் செல்ல‌
ம‌யில்க‌ளின் வ‌ண்ண‌த்தில்
ம‌னம் உருகி,
உட‌ன் உறைந்த‌து
உயிர் ஓவிய‌த்தில்....

அந்தியில் ஓரு ஆத‌வ‌னாய்
விஜ‌ய் ஆதி ராஜ் ஜின்
அச‌த்த‌ல் வ‌ருகை,
அவ‌ர் கையால் கிடைத்த‌து
அழ‌கிய‌ சால்வை...

இர‌வு நெருங்கிய‌து
க‌ன‌வு ம‌ய‌ங்கிய‌து
நிக‌ழ்வு நினைவில் வ‌ந்து
க‌ட‌மை தொட‌ங்கிய‌து
ம‌ட்டில்லா ம‌கிழ்வோடு
ம‌று விழாவை எதிர் பார்த்து.........

Sunday, August 16, 2009

இன்னர்வீல் நட்பு

என்றும் இணையில்லா
இன்னர்வீல் தொடங்கின‌
இருண்ட என் இதயத்தில்
மின்னல் பூ பூத்தன..

பெண்ணாய் பிறந்தேன்
புவியோடு வளர்ந்தேன்
கண்ணனுக்கு வாக்கப்பட்டு
கற்பனையாய் வாழ்ந்தேன்..

காட்டாற்று வெள்ளமென‌
கலமது சுழன்றோட‌
கண்ணிமைக்கும் நேரத்தில்
இன்னர்வீல் வந்தது
இனிய குடும்பம் தந்தது..

விட்டு போன உறவெல்லாம்
தரணியிலே சிதறியிருக்க‌
தானும் சென்று உதவிடும்
தாய்மை உணர்வை தந்தது..

நட்பு என்னும் தாய் வயிற்றில்
நாழும் பிறந்து சேயானோம்
தாய் இல்லா சேய்களும்
தழைத்தோங்க உதவிடுவோம்..

சாதி மதம் பல கடந்து
வயது வசதி தனை மறந்து
தனிமை சிறையின் விலங்குடைத்து
வானமளவு உயர்ந்திடுவோம்
நமக்குள் வல்லமை பல தந்திடுவோம்..

தாயாய் தங்கையாய் தரம் பிரித்து
தன் மன உணர்வை பகிர்ந்திடுவோம்,
தோழியாய் குழந்தையாய் குணம் மாறி
கூடி குலாவி மகிழ்ந்திடுவோம்..

கூட்டு குடும்ப‌ம் ம‌றையும் கால‌மிதில்
சுற்ற‌ம் என்ன‌ சொன்னாலும்
எந்த‌ சூழலில் மாட்டிக் கொண்டாலும்
இன்ன‌ர்வீல் குடும்ப‌ம் க‌லையாது
நாம் கூடி க‌ளித்து வாழும் வ‌ரை..

Wednesday, March 11, 2009

விழித்தெழு பெண்ணே!

பேதை பெண்ணே நீ
போதை பொதை பொருளாய்இருந்தது போதும்
பாரதி கண்ட புரட்சி பெண்ணாய்பொங்கியெழு..

புதுமையை
ஆடை குறைப்பில் காட்டாதே
ஆளவந்தவளாக உனை மாற்று...

சமமாய் தண்ணியடிப்பதில் காட்டாதே
சாவ்லாவாய் சாதனை புரிந்து நீ காட்டு...

அன்னை தெரசாவாக மாறி
அன்பினை காட்டு அனாதைகளுக்கு..

அப்துல்கலாமாக மாறி
ஆக்கம் பல புரி பாரதத்திற்கு..

காவிரி தாயாக மாறி
தண்ணிர் தந்து விடு தமிழகத்திற்கு....

கொலுபொம்மையாக மட்டும் இருந்துவிடாமல்
கோபுர கலசமாக உயர்ந்து நில்
நாளைய உலகம் நமது கையில்....

Friday, February 27, 2009

தன்னிரக்கம் வாங்கிய அடி

நண்பர்களே!
பள்ளி நாட்களில் நன்றாக நடனமாட‌ கூடிய நான்இப்போது தொடர்ந்து 1/2 மணி நேரம் நடக்க கூட‌சிரம படுகிறேனே என்று வருந்தும் பொழுது..நேற்று தொலைகாட்சியில் ஆன்ந்தபாபுவை பார்க்க‌நேர்ந்தது..நல்ல கால்கள் கருகிய நிலையில்...அவர் மனம் எவ்வளவு வேதனை அடைந்திருகும்??அதை உணரும் போது தோன்றிய கவிதை தான் இது...
-----*----------*----------*---------*

ஆடிய நிகழ்வினை மனம் அசை போட‌
ஆனந்த நாட்கள் கண்ணில் நிழலாட‌
தலை தானாக் குனிந்தது
விழி நீரில் பாதம் நனைந்தது......

காலத்தின் மாற்றமோ
கால்களின் இரத்த ஓட்டமோ
பாதிக்கப்பட்டது என் மனம்
பதறியது மறுகணம்...

ஆனந்த தாண்டவம் ஆடிய‌
ஆனந்த பாபுவை கண்டதும்
அரற்றியது அனுதினம்...

ஆண்டவனின் திருவிளையாட்டில்
மன்னிக்கவும்‍‍‍ " தீ "விளையாட்டில்
கருகியது அவர் கால்கள் மட்டுமல்ல‌
அதை கண்ட நம் மனமும் தான்...

பருக பாலில்லை என அழுதேனே
பசிக்கு நீரில்லா அவரை காணும் வரை..
வெட்கி மீண்டும் தலை குனிய‌
பாதம் பார்த்தது பாசத்தோடு...

Thursday, February 26, 2009

40+ காதல்.


காதல் வெள்ளோட்டத்தில்

கால் நூற்றாண்டுகள் கடந்தும்

கண்ணாமூச்சி ஆடுகின்றதே

நம் காதல்.....

என் கண்களில் தேடினாய்

உன்னை‍‍‍‍ - உன்

மனக்கண்களில் கண்டேன்

என்னை....

நம் காதல் தேசத்தில்

இலையுதிர் காலம் கூட‌

இள வேனிற் பூக்களை

தருகிறதே....

நரையோடி நடை தளர்ந்தும்

கடலோடு நான் கரைந்தாலும்

கலையாத பனியாக‌

உதிராத மலராக‌

உன் உள்ளில் நானிருப்பேன்

ஓரு காதல் தவமாக.........

Wednesday, February 25, 2009

நான்

மன்னவன் உனைக் காக்கும்
வெண்கொற்ற குடை நானே........

வேம்புனிலும் தேன் தேடும்
தேவதை பெண் நானே..........

திங்களோடு உறவாட‌
தினம் ஏங்கும் மனம் தானே........

தேங்கிடும் ஆசையினால்
தேய்கின்ற நிலவு நானே..........

தேயாமல் காத்திடுவேன்
தேய்ந்தாலும் உனை நானே......

தேடினாலும் தெரியாது
தொலைந்து விட்டேன்
உன்னில் நானே... ...

Wednesday, February 18, 2009

அமைதி கொள் மனமே.

மூவுலகையும் சுற்றி வந்தேன்
மும்மூர்தியை வணங்கி நின்றேன்
மும்மதமும் ஓர் மதமாக....

காஷ்மீர் என்ன காபூல் என்ன‌
கருணை கண் கொண்டு நோக்கிட‌
அயோத்தி என்ன ஆப்கான் என்ன...

பாபர் மசூதி இராமனுக்கென்றால்
பாவப்பட்ட மனிதா‍- நீ
இடித்த அன்றே அவர் இறந்திருப்பார்...

அக்பரும் இராமரும் ஓர் இனம்
இருவரின் இரத்தமும் ஓர் நிறம்
இருப்பினும் உனக்கேன் வெறி குணம்...

இருவரும் இணைந்து ஒன்றனால்
இறந்தவர் மீண்டும் உயிர் பெறுவார்
இந்தியாவில் அமைதி மலரச் செய்வார்....

Monday, February 16, 2009

உண்மை காதல்.


கண்ண‌சைவில் களி நடனம் கண்ட‌

கற்பனை காதலெல்லாம்,

கால் நூற்றாண்டு கடந்தால்

காணாமல் போவதுண்டு...

உடலின்றி உயிர் சார்ந்த‌

பெண்மையின் கண்மை

கரையும் வேளையில்

கலங்கிய விழிகள்

காற்றில் அனுப்பும் ஒலிகளை

உள் வாங்கி உணர‌

ஊற்றென பெருகும்

உன்மத்த காதலே!

உயிர் உள்ள வரை

உடன் வரும் காதலாம்....

Sunday, February 15, 2009

காதலர் தினம்

காதலி சம்மதித்தால்
காதலியுங்கள்.......
பெற்றோர் சம்மதித்தால்
கரம் பிடியுங்கள்..........
இரண்டும் இல்லையென்றால்
காத்திருங்கள்..... அடுத்த‌
"வாலன்டைன்ஸ்டே" வரும் வரை.....

காதலென்ற புதிய வரவால்
கலைந்து போனது
குடும்பமென்ற பழைய உறவு...

Friday, February 13, 2009

தன்னம்பிக்கை வேண்டுமடி

குழந்தைகள் வாழ்வு உயர்வுற
உன் உயிர் நிலை பெற வேண்டும்...

ஒதுக்கி விடு உலகத்தை
உன்னோடு சிரிக்கும் ஊரிது
உனக்காக அழுவதில்லை ஒரு போதும்..
உன்னைப்பற்றி உனக்குத் தெரியும்


உன் மேல் அன்பு காட்ட
உன்னை விட யாருண்டு?

ரத்த சொந்தமெல்லாம்
ரயில் சொந்தம் போல‌
உடன் வர மாட்டார்
ஊர் போயி செரும் வரை..

உனக்குள் உருவாக்கு ஒரு உலகம்
பின்பு பார்
உன்னை விட அதிர்ஷ்டசாலி யாருமில்லை

ஏனென்றால்
உன் மனதை அறிய
அந்த மகேஷனாலும் இயலாது

பாராட்டு,
அனைவரையும் பாரபட்சமின்றி
அன்பு காட்டு ,
அதை அவர் எதிர்பார்காமல்
இரக்கப்படு,
இன்னொரு ஏசுவாய் எண்ணிக்கொண்டு...

இறுதியாய் ஒன்று மட்டும்
நீ வேறு உலகம் வேறு
எதிர்பாராதே எதையும்
ஏமாற்றத்தை தவிர்க்கலாம்
"என்னை போல்"

Thursday, January 29, 2009

சுமைதாங்கி

தேவையறிந்து தேனூட்டும்
தென்றலான தேனி என்னை

தேடி தேடி சொல்லெடுத்து
தேளென நீ கொட்டிடினும்

வலி தாங்கி விழி தூங்கா
இமையாக நானிருந்து

கசிகின்ற நெஞ்சோடு
கசங்காது உனைக்காப்பேன்

Tuesday, September 16, 2008

புன்னகை

மங்கையின் புன்னகை
மார்கழி பனிக்காற்று....

மழலையின் புன்னகை
மயக்கிடும் தேனூற்று....

அன்னையின் புன்னகை
அன்பெனும் நீரூற்று...

அதை உணர்ந்திட்டால்
நம் மனதிலே
ஆனந்த பூங்காற்று...

காற்றும் கடலும்
புன்னகைக்க‌
கரை தொட்டாடும்
அலை மிக அழகு...

அந்தி வெயிலின்
புன்ன‌கையிலே
ஆறோடும் நீர் அழ‌கு...

பொன் ந‌கையின்
விலையேற்ற‌த்தில் பெண்ணே!
உன் புன்ன‌கையோ
மிக‌ மிக‌ அழ‌கு....

Tuesday, July 29, 2008

பிடித்தவைகள்...

அன்னை தெரசாவின்
சேயாக‌ பிடிக்கும்...

வைர‌முத்துவின்
தோழியாக‌ பிடிக்கும்...

லேனா த‌மிழ்வாணனுக்கு
த‌ங்கையாக‌ பிடிக்கும்...

க‌ம‌ல‌க்கண்ண‌னுக்கு
காத‌லியாக‌ பிடிக்கும்...

ர‌ஹ்மான் இசையில்
பாட‌ பிடிக்கும்....

என் கண்வ‌னுக்கு ம‌ட்டும்
ம‌னைவியாக‌ பிடிக்கும்...

உன‌க்கும் கூட‌
அன்னையாக‌ பிடிக்கும்...
ஆனால்‍‍‍...
இவ‌ர்க‌ள் அனைவ‌ருக்கும்

என்னை பிடிக்குமா???

Thursday, July 17, 2008

மறக்க முடியுமா?

நட்பினை நினைவு படுத்த
நாட்காட்டியில் நாளுளதாமே!
நான் அதை மறந்து விட்டேன்...

அகத்தீயில் எரிகையில்
புற‌மிருந்து எனை காத்த
புன் செய் விளை நில‌மே!
உனை நான் ம‌ற‌ந்து விட்டேன்....

பிள்ளை மொழி கேட்ட‌ என்னை
பித்த‌னாக்கி பிற‌ழ‌ வைத்த‌
த‌ங்க‌ த‌மிழ் மொழியே!
உனை என்றோ ம‌றந்து விட்டேன்...

என் சித்த‌ம் க‌ல‌ங்கிடாது
நித்த‌ம் ந‌னைத்த‌
நில‌வொளியே!
உனை கூட‌ ம‌ற‌ந்து விட்டேன்....

பாச‌மென்னும் பாச‌க்க‌யிற்றால்
ப‌ன் முறை உயிர் குடித்த‌த்
தென்றலே!
உனையும் தான் ம‌ற‌ந்து விட்டேன்...

ஓ! மறந்து விட்டேன் பார்த்தாயா?
ம‌ர‌ண‌ம் எனை த‌ழுவி
மாத‌ம் ஒன்று ஆன‌தையே!!

கா.உமார்த்தி

Monday, July 14, 2008

you too karnaa?

செஞ்சோற்று நன்றிக்கு
சொல்லொண்ணா இலக்கணம் கர்ணன்....

மாசற்ற ந‌ட்பிற்கு
மங்காத இலக்கணம் கர்ணன்....

தான‌ த‌ர்ம செயலுக்கு
தன்னிகரில்லா இலக்கணம் கர்ணன்....

அன்னையின் அன்பிற்கு
அப்ப‌ழுக்க‌ற்ற இல‌க்க‌ணம் க‌ர்ண‌ன்....

வெண் மேக‌த்தில் க‌ரும் புள்ளியாய்
சூதாட்ட‌திலும் க‌ர்ண‌ன்....
க.உமார்த்தி

சுனாமி....

கடல் பற்றி கவிதை கேட்டார்கள்
எழுதி முடிக்கும் முன்னே
முடிந்தது ஒரு சகாப்தம்....

Wednesday, June 25, 2008

என்னைப் பற்றி

என்னை கண் கொண்டு நோக்கிடின்
கண்ணி வெடியாய் சிதறிடுவீர்
காரணம்...

கற்பனை செய்யாத
காரிருள் தேகம்
கனவிலும் வாராது
என் மீது மோகம்...

கூன் விழும் தோள்களோடு
கரு நாக தோல்கள் மூடி,
முகம் சுழிக்க செய்யும்
முன் நெற்றி வழுக்கை...

காணாமல் போனது
கருவிழியிள் 1/4கண்டால் போவது
நம் நட்பில் 3/4...

அகிலத்தை ஆட்டி வைக்கும் உன்னை
அரை நொடியேனும் ஆட வைப்பேன்...
அணு குண்டாய் வந்தே
ஓர் நாளில் அலற வைப்பேன்...

Wednesday, June 18, 2008

பெண்ணே!

மெட்டி ஒலியால்
என்னை கட்டி இழுத்தாய்..

கொள்ளை அழகால்
என்னைகொள்ளையடித்தாய்..

கூர் விழியால்
என்னைகுத்திக் கிழித்தாய்...

கும்மிருட்டு வேளையிலும்
குலுங்கி அழ வைத்தாய்...

நீ கொடுக்கும் சித்ரவதையில்
சிதறிப் போன என்னை

சீக்கிரத்தில் கொன்று விடு பெண்ணே
உன் அழுத்தமான முத்தத்தால்...!
கா.உமார்த்தி.

Tuesday, June 17, 2008

உருவில்லா உன் மனதை
உற்று கேள்
உள்ள சிணுங்களிலில்

உறைந்திருக்கும்
என் குரலும்....

க.உமார்த்தி.

Wednesday, May 2, 2007

நண்பனே!

இரு வழி பாதை
இரு வழி பயணம்
இருவரும் சங்கமித்தல்
சாத்தியமா நண்பனே!



சந்திப்பு நேராத வரையில்
சந்தித்தோம் பல முறை
சந்தர்ப்பம் வாய்த்தவுடன்
சந்திக்க மறுக்கிறது என் கண்கள்.....



நான் யாசித்த இதயம்
என்னை நேசிக்கவில்லை...
என்னை நேசித்த இதயமோ
புவியில் இன்று சுவாசிக்கவில்லை...



அருகிருக்கையில் பேசாத என்னுள்ளம்
அதையெண்ணி அழுகிறது
தொலைவில் நீ சென்ற பின்னே!


பக்கத்தில் இருக்கையில்
பற்ற வைத்த பாச நெருப்பு
பற்றி எரிகிற்து நீ
என்னை விட்டு எங்கோ சென்ற பின்னே!


பல செல் கூடி
உருவான உடலானது-உன்
ஒரு சொல் கேட்க
உயிரோடு நடமாடுது...



தொட்டு விட்டேன் சிகரத்தை
திரும்பி பார்க்கையில்
காலடி தடத்திலெல்லாம்
காயாத இரத்த துளிகள்....


மகளே!

அல்பாயுசில் போயிடுவேன்
என்று தான்
அரணாக உன்னை
படைத்தானோ!

என்னுள் நான்

சில பொழுது சிரிக்கின்றேன்
பல பொழுது அழுகின்றேன்....
சிந்தை சிதறியே
சிலையாய் சமைகிறேன்....
வன்மம் தழைத்தோங்க
ஜென்மத்தில் சில நாள்
குரூரத்தில் குளிக்கிறேன்.....
குமரன் ஆடிய நெஞ்சத்தில்
சாத்தனை குடி வைக்கிறேன்....
கூடி களித்து மகிழ்கயிலும்
குடைசலில் கூனியாய்
சதி செய்கின்றேன்....
மன்னித்து விடு இறைவா!
மறு பிறவியாவது
மனித பிறவி எடுக்கிறேன்...

Monday, April 23, 2007

அகர வரிசையில் ஆசையொன்று...

அன்பு அலையடிக்க
ஆசைக்கு அணை போட்டும்
இதயத்தின் இடப் பக்கம்
ஈட்டியாய் இறஙகி விட்ட
உனக்கு மட்டும் கூறுகின்றேன்
ஊணுக்கும் தெரியாது
என்னுள்ளம் எரிகிறது
ஏனென்று புரியாது
ஐம்புலனும் அழுகிறது...
ஒருவரும் அறியது
ஓசையின்றி வந்து விடு...
மயானத்தில் மட்டுமாவது
மறுபடியும் சந்திப்போம்....

சோக கீதம்...

காலையில் எழுந்ததும்
காதினில் ஒலித்தது
சோலை குயிலின்
சோக கீதம்....
பின்பு தான் தெரிந்தது
அது சோலை குயிலல்ல,
என் போல் கூட்டு குயிலென்று...

கீரீடம்.....

மலைகளின் இளவரசிக்கு
இயற்கை அன்னை
வைத்தள்
மூடுபனியால் மணி மகுடம்.....

குங்குமம்.....

பத்தினி பெண்ணின்
நெற்றி திலகம்
பாதை மாறிய பார்வைக்கு
ஒரு டிராபிக் சிக்னல்......

ஹைகூ....

நீ பூப்பெய்தியவுடன்
உன் தாய் கலங்குவதேன்
அவள் மூப்பெய்திய
கவலையிலா?



ஆண்களே!

இம்சை செய்து மங்கையரை
'மேக்மா' வாக்காமல்
அகிம்சையை ஆதரித்து
மகாத்மா ஆக்கிடுங்கள்...



இறந்து விட்ட இதயம்
இன்னமும் துடிக்கிறது
இறங்காத உன் நினைவால்....




முள்ளில்லா ரோஜா
என் மனதில்
முள்ளாய் குத்துகிறது
உன் நினைவு........



உறைய வைத்த ஒற்றை பார்வை
உறங்கையில் வலிக்கிறது
உள்ளமெங்கும்.....



பார்வையால் உயிர் பறிக்க
பாசமென்ன பாசக்கயிறா?



கவியென்னும் கயிறு கொண்டு
கட்டி வைத்தாய் இரு விழிக்குள்......



உருவில்லா உன் மனதை
உற்றுக் கேள்
உள்ளச் சிணுங்களில்
உறைந்திருக்கும் என் குரலும்......


Wednesday, April 18, 2007

ஹைகூ..............

கண்ணாடி காட்டாத
என் பிம்பம், அதை
உன் முன்னாடி நிற்கையில்
காண்கின்றேன்............


கல் நெஞ்சுக்காரி தான் நான்
உன்னை என்னுள்
செதுக்கியதால்......



என்னோடு இருக்கையில்
எழுதவில்லை ஒரு வரியும்,
மண்ணோடு மறைந்த பின்
பிதற்றுகின்றேன் பிழைகளாக....

நட்பு.................

சாதியில்லை மதமில்லை
காதலுக்கு மட்டும் சொல்லவில்லை

காதலில்லை கர்வமில்லை
கண்களிலோ காமமில்லை,

காசில்லை பணமில்லை
அழகொன்றும் தேவையில்லை,

தொட்டதில்லை கை பட்டதில்லை
சோகத்தில் மடி சாய்ந்தலும்,

தோழனே அதில் ஒன்றும்
தவறே இல்லை,

விழியிலே நதியில்லை
மனதிலே சுமையில்லை

பிரிவொன்று நேர்ந்தாலும்
நம் நட்பு என்றும் அழிவதில்லை.

Saturday, April 14, 2007

எச்சரிக்கை...............

பூவையரை பூக்களென
புலவர்கள் புகழ்ந்ததால்
பூவினவள் வாசத்தை
நுகரத் துடிக்கும் ஆண்களே
பூ ஒன்று புயலாகி
பூகம்பம் ஏற்பட்டால்
புஜ் நகரம் போல்
பொடிப் பொடியாய்ப்
போவீர்கள்.