மூணார்
மூன்று நாட்களாக தேடியும்
முழுவதும் தெரியவில்லை
முற்றிலும் மூடப்பட்ட
மூணாரின் முகவரி...
தேயிலையின் மலை குடைந்து
தேரென ஊர்ந்து சென்று
'தெய்வத்தின் திருநகரின்'
வீதி வரைச் சென்று விட்டோம்...
விடிந்த பின்னும்
விலகவில்லை
விண்முட்டும் பனிப்புகையும்
வியப்பூட்டும் மழைதுளியும்....
வியந்து வியந்து பார்த்தாலும்
விளங்காத அழகுடன்
விடியலிலும் விண்மீன்கள்
மின்மினியெனும் பெயரோடு...
கண்மணி என் கண்களது
கலர் குருடு ஆனது போல்
காணும் இடமெல்லாம்
பச்சை வண்ணம் படமெடுக்க
மீதி வண்ணம் தேடி நின்றேன்
மீண்டும் மலையிறங்கி
மதி மயக்கம் தீரும் வரை.....
No comments:
Post a Comment