Thursday, July 1, 2021

மார்பகப்புற்று .

 
சுயபரிசோதனை சுழற்சியில், 

நாமே மருத்துவராவோம் ,
மாதம் ஒருநாள்.. 

மருத்துவரை தோழியாக்குவோம் ,
வருடம் ஒருநாள்...

இதில்
தயங்கவோ, தவிர்க்கவோ 

தேவையில்லை..
பெற்ற பிள்ளைக்கு 

பால் ஊட்டும் பெண் கண்டு, 

பத்தடி பதுங்கி நிற்கும் 

மார்பகப்புற்று,,

தாய்ப்பால் ஊட்டிய தாய் மார்க்கு,

 தாமதமாக கூட வராது அதன் தொற்று..
மழலை மார்பு பற்றிட ,
புற்றின் வாய்ப்பும் அற்றிடும்.

அதையும் தாண்டி அருகில் வந்தால், 

அதற்கு வைத்திடுவோம் ஒரு முற்று.

    அன்புத்தோழி ,   உமாராணி கருணாமூர்த்தி

 

Innerwheel club of Ramnad kaha eluthiyathu.

Tuesday, May 11, 2021

வாசிப்பை சுவாசிப்போம் .


 
ஓலைச்சுவடி தொடங்கி, 

ஒளிநாடா வரை, 

இன்று புத்துயிர் பெற்றது, 

புத்தகத்தின் பரிணாமம்..

அகச்சுத்தம், அறிவுப்பசி, 

அடுக்கி வைத்த புத்தகமே ,

எனது ஆகாரம்...

கரிகாலன் கல்லணையும், 

ஆத்தங்குடி கல் வகையும், 

காட்டிக்கொடுத்தது புத்தகம்...

வெனிஸ் நகர வீதிகளையும், 

வேற்றுக்கிரகவாசிகளையும், 

வெளிக்கொணர்ந்தது புத்தகம்...

எல்லோரா சிற்பத்தையும், 

ஏகலைவன் தட்சணை யையும்,

 எடுத்துரைத்தது புத்தகம்..

ராணா பிரதாப் பின், "சேட்டாக்" குதிரையும், 

ராணி எலிசபெத்தின் ராஜிய வித்தையும், 

விதவிதமாய் சொல்லிவைத்தது புத்தகம்...

மனக் குழப்பத்தின் மருத்துவர், 

மனம் வருடும் மாயாவி, 

அறிவுத் தேடலின் திறவுகோல், 

அக இருள் போக்கும் அகல்விளக்கு,
அன்னையாய் என்னை அரவணைத்த 

அழகு பிள்ளை புத்தகம்...

 ஆதி முதல் அந்தம் வரை, 

எண்ணத்திற்கு ஒளியூட்டி, 

அக்னிச் சிறகளித்து  

ஆலயத்து அமைதியை 

அடிநெஞ்சில் அடக்கியது புத்தகம், 

அதனுள் அடங்கியது என் அகம்...

வாசிப்பை சுவாசமாக்கி, 

வாழும் கலை வளர்ப்போம்.. 

புத்தகம் பல படித்தே, 

புது உலகம் நாம் படைப்போம்..

அன்புடன்,

 உமாராணி கருணாமூர்த்தி

Tuesday, March 2, 2021

விடை தெரியா வினாக்கள்.

 
வாழ்வே தேடல் தானோ...
தேடல் முடிவில்,
நான் பெற்றதும் கோடி,
கற்றதும் பல கோடி,
 

கற்கண்டாய் இனித்த
கனவெல்லாம்,
கானல் நீராய்
கண்முன்னே
கரைவதை எண்ணி
அழுவதா?

காத்திருந்த காதல் ,
கை கூடியும்-அதன்
கனமறியாது
தினம் தினம் தொலைக்கும்
உன்னை எண்ணி சிரிப்பதா?

பத்து மாதம்,
வயிற்றில் சுமந்தவள்
தாயென்றால்,
இருபது வருடம்,
மனதில் சுமந்த நான் யார்?


மண்வளம் பார்த்து பயிறிட‌
மனிதனே நினைக்கையில்,
மன வளம் பார்த்து இணைத்திட தான்
மாயனவன் நினைத்தானோ ?

புரியாத சூத்திரம்...

 புல‌ம்பி என்ன பயன்.

Sunday, February 28, 2021

பெண்மை வெல்கவென கூத்திடுவோமடா .



காரியம் கை கூடுகையில், 

மெய் பட்டது பாரதியின் கனவு..


போதை பொருளாய் இருந்த பெண்கள், 

புரட்சிப் பெண்ணாய் மாறியபோதே, 

"பெண்மை வென்றது ".. 


சரி நிகர் சாமானத்தை 

சேலையில் மட்டுமல்ல, 

வேலையிலும் காட்டத் துணிந்து, 

இராணுவத்தளம் தொட்டபோதே,

 "பெண்மை வென்றது".. 


அன்னை தெரசாவாய், 

அன்பை விதைத்து, 

ஆத்திச்சூடி அவ்வையாய், 

பண்பை அறுவடை செய்யும்போதே 

"பெண்மை வென்றது"... 


அடுக்களை துடைத்த அம்மாக்கள், 

கல்பனா சாவ்லாவாய் 

ஆகாயம் தொட்ட போதே 

"பெண்மை வென்றது" ..


கொரானாவின் கோரத்தாண்டவத்தை, 

களத்தில் சந்திக்க, 

செவிலியர் துணிந்த போதே, 

"பெண்மை வென்றது".. 


அன்று பெண்மை வெல்கவென 

பாரதி விரும்பினார்.. 


இன்று பெண்மை வென்றது என, 

நாங்கள் விளம்பினோம்.


அன்புடன் ,


 உமாராணி கருணாமூர்த்தி.

130, அக்ரஹாரம் ரோடு,

 இராமநாதபுரம், 

இராமநாதபுரம் மாவட்டம்,

623501

கைப்பேசி எண்: 

9487754727

வரம்

 என் தேடல் முடிவுற்றது 

தேவன் உன் வரவால் ...


தேவை என்று எதுவும் இல்லை, 

பார்வை பரிமாற்றமே, 

என் பசிக்கு போதுமானது... 


போகப்போக கிடைக்கும் 

"போகம்" அனைத்தும் 

பொக்கிஷ நிமிடங்களே... 


உணர்வுக்கும், உணர்ச்சிக்கும், 

இடையில் நடக்கும் யுத்தத்தை, 

நான் வென்று வருடம் பல ஆகிவிட்டது...


உன் உலகம் எனக்கு வேண்டாம் ,

என் உலகம் உனக்கு வேண்டாம், 

ஆனால் நம் உலகில் நாம் வாழ வேண்டும்...

அதற்கு கடவுள் வரம் அருள வேண்டும்.

ஹைக்கூ

 உன்னை பார்த்ததும் காதல் வரவில்லை,

என் காதல் உன் உருவில் வந்தது..

         ======================

இருபது வருடங்களாக‌

மூடிகிடந்த விதையொன்று

முதல் விடியலிலேயே,

விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது.

       ======================

எதுகையாய் நானும்,

மோனையாய் நீயும் .

இருப்பதால் தானோ.

கவிதை  உருவானது?

              ===================



Friday, February 12, 2021

2021

மனது மழுங்கி,
அறிவு விழிப்புற்ற வருடம்..

நம் மனம் படிக்காதவன், 

மனதுக்குப் பிடித்தவனாயினும்,
மண்ணில் எறிவோம்

மறுபரிசீலனை இன்றி...

நம் உற்சாக சிறகினை, 

உரசிச் செல்லும் ஊரானை,
ஒதுக்கி வைப்போம், 

உள்ளமெனும் ஊரைவிட்டு...

நம் உணர்வு அறியாது, 

ஒதுக்கும் ஓரவஞ்சனை, 

ஒடித்தெறிவோம்
ஒரு நொடியில்...

காரியவாதிகளை
கச்சிதமாக கணக்கிட்டு, 

களை எடுப்போம், 

கணப் பொழுதில்...

கண்ணில் நிலவையும், 

சொல்லில் தேனையும், 

சமமாக கலந்தெடுத்து, 

சத்ரியனாய் வாழ்ந்திடுவோம்,

சிறிது சாணக்கிய தனத்துடன்.

 

தை மகளே நீ வருக

 போகி யன்று போர் குணம் போயிட,
ஆசை, கோபம்
அனைத்தையும்  அக்னியில் அழித்திட,
ஆனந்தமாய் ஆடிடுவோம்,
அகமகிழ வாழ்ந்திடுவோம்,
அடுத்த நாள் வரப்போகும்,
தை மகளை வரவேற்க...

வைகறையில் நீராடி
வாசலிலே கோலமிட்டு
வண்ண வண்ண பட்டுடுத்தி
புதுப்பானை பொங்கலிட்டு
பொங்கி வரும் புன்னகையுடன்
பூரணமாய் படையலிட்டு
பூமித்தாயை வணங்கி பின் 

கதிரவனுக்கு நன்றி சொல்லி 

களிப்புடனே வாழ்த்திடுவோம்..

வந்தனம் உழவுக்கு மட்டுமன்றி, 

உதவிய காளைக்கும் காட்டிடுவோம்..
களப்பணியாற்றிய, 

காளையுடன் களமிறங்கிய காளையர், 

கட்டிப்புரண்டு ஜல்லிக்கட்டு நடத்த,
காணும் இதயமெல்லாம் 

துள்ளிக்கிட்டு குதிக்கும்..

மனதில், துளிர் விட்ட மகிழ்வு, 

மடையென திறந்து பெருக, 

காணும் பொங்கலுடன் 

களிப்புடனே வரவேற்போம்...

" தை மகளே நீ  வருக'

          அன்புடன்,

          உமாராணி கருணாமூர்த்தி

Sunday, December 13, 2020

நவ ஜோதிர்லிங்க தரிசனம்.

எங்கள் நீண்ட நாள் கனவை நினைவாக்கியது, 

இந்தியன் ரயில்வே.
நவ ஜோதிர் லிங்கத்தை தரிசிக்க, 

ரயிலில் முன்பதிவு செய்துவிட்டு, 

உடலையும், உள்ளத்தையும் தூய்மை படுத்திக் கொண்டோம்.

பயணத் தேதி 1/08/2018 . நாங்கள் ராமநாதபுரம் என்பதால் 

50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராமேஸ்வரம் சென்று, 

ராமநாத சுவாமி தரிசனம் பண்ணி 

9 தீர்த்த பாட்டில்கள் வாங்கிக் கொண்டு 

ரயில் ஏறினோம்.. 

முதல் வகுப்பு ஏசி பெட்டி உடலோடு சேர்ந்து உள்ளமும் குதூகலித்தது.. 

ஆந்திர மாநிலம், "ஸ்ரீசைலம்" சென்று பேருந்துக்கு மாறி,  

ஏழு மணிநேர மலை பயணம்.. 

செல்லும் வழியில், சிறுத்தை ஒன்று கண்ணில் பட, 

ஒரு நிமிடம் எகிறியது இதயம்.. 

அதிகாலை 5 மணிக்கு மல்லிகார்ஜுனாவை தரிசனம் செய்தோம்...

அடுத்து நர்மதை நதிக்கரையில் அமைந்துள்ள 

ஓம்காரேஷ்வரர் ஐ நோக்கிய பயணம், 

ஆடி பதினெட்டு நர்மதையில்,

 நீராடும் பாக்கியம் பெற்றோம்..
நதி உடலை நினைக்கையில் உள்ளம் சிலிர்த்தது.. 

சிவனை தரிசிக்கும் தீவிரத்தில், 

பணப்பையை தவற விட்டு, மீண்டும் அது கிடைத்த தருணம், 

அவன் அருளை அன்றே உணர்ந்தேன்.

 அடுத்து மாகாளேஸ்வரரை, மனதார வேண்டிக் கொள்ள, 

மத்திய பிரதேசம் நோக்கி பயணம்.. 

அங்குள்ள சிவலிங்கங்களை தொட்டு, 

தன் கையால் கொண்டு சென்ற தீர்த்தத்தினால் 

அபிஷேகம் செய்யும் பாக்கியம் பெற்றோம்..

அடுத்ததாக குஜராத் மாநிலத்தில் உள்ள சோம்நாத் ஆலயம், 

பழைய மற்றும் புதிய ஆலயம் 

கடற்கரையோரம் அமைந்த அற்புதம்.. 

சோமநாதரை தரிசித்த அசதியில் 

அன்றிரவு ரயில் பெட்டியில் அருமையான உறக்கம் அற்புதமான உணவு பல்வேறு மொழிபேசும் மக்களை பார்த்துக்கொண்டே, 

அடுத்த நாள் பயணம் பீம் சங்கரை தரிசிக்க சென்றோம்.

குளிரோடு பனியும், 

மழையும் போட்டி போட்டு அடித்து நொறுக்க,

 சிவனை காணும் எண்ணத்தில் 

அவற்றை அலட்சியப்படுத்தி படியிறங்கி, 

மீண்டும் படியிறங்கி, அப்பப்பா....... 

நானா இவ்வளவு செய்தேன் என்று எண்ணும் அளவு இருந்தது..
பீம் ஷங்கரை, என் கையால் தொட்ட கணம், 

மனம் கரைந்து, காற்றில் மிதந்தது...

திருக்கம்பேஷ்வர், மற்றும் கிருஷ்நேஷ்வர் ஆலய தரிசனம் முடித்து, திருநாகேஸ்வரம் சென்றோம்... 

அங்கே ஒருவர் மட்டும் செல்லும் பள்ளம் , 

மனதில் அச்சத்தோடு உள்ளே இறங்கினால், 

அங்கே சிவன் என்னை இரட்சிக்க 

அவர் மீது சிரம் தாழ்த்தி தொட்டு வணங்கி 

ஒரு பக்தர் துணையோடு மேலேறி வந்தோம்...

காசி மற்றும் கேதார்நாத் தவிர்த்து,
10 சிவ தலங்களை தரிசித்தது... 

நர்மதையின் குளித்தது... 

பழக்கப்படாத உணவுகளை உண்டது.... 

பலதரப்பட்ட மக்களிடம் பழகியது 

ரயில் சினேகிதம் கொண்டது.... 

தவறவிட்ட பணம் திரும்பக் கிடைத்தது... 

சிறுத்தையை நேரில் பார்த்தது... 

தானே தன் கையால் சிவனுக்கு அபிஷேகம் ஆராதனை பண்ணியது... அனைத்தும் மனதில் அசைபோட, 15 நாள் போனது தெரியாமல் மதுரை வந்து இறங்கினோம்..

 தென்னிந்திய கோவில்களை ஒப்பிடும்போது 

வெளிப்புற தூய்மை வட இந்திய கோவில்களில் குறைவு, 

ஆனால் ஆலயத்திற்குள் சென்று வந்தால், 

நம் மனம் தூய்மை மற்றும் அமைதி அடைவது நிச்சயம், என்று இக்கட்டுரையின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன். 

         "சர்வம் சிவமயம்"

 K.Umarani karunamoorthy,
Inner wheel club of Ramnad,
321.
PH.No. 9487754727

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

ஒவ்வொரு மணியாக கோர்த்து, 

என்னை ஒரு மேகலையாக மாற்றியவர்,

 என் ஆசிரியர் திருமதி மணிமேகலை... 

தாய்ப்பால் ஊட்டி என் உடல் வளர்த்தது 

என்னைப் பெற்ற தாய் என்றால், 

தமிழ் பாலூட்டி என் உயிர் வளர்த்தது 

இவர் அன்றி யாருண்டு?? 

தலையில் தட்டி தட்டி, தமிழை என்னுள்ளே இறக்கி, 

இலக்கணம், இதிகாசம், இலக்கியம், 

இயல் இசை நாடகம், நடனம் மற்றும்  

அனைத்திலும் நாட்டம் கொள்ளச் செய்தவர்.. 

மூடிக் கிடந்த திறமைகளை 

வெளிக்கொணர்ந்த திறவுகோல்... 

அன்று அவரது முயற்சி 

மனதுக்கு அயர்ச்சி ஊட்டினாலும், 

இன்று நினைக்கையில் 

நிலையில்லா நிம்மதி கிடைக்கிறது... 

என் வாழ்வில் கிடைத்த ஒரு பொக்கிஷம் 

திருமதி மணிமேகலை ஆசிரியை👑 

அவர்களுக்கு என் நன்றி என்றும் உரித்தாகுக 🙏.. 

வாழ்க வளமுடன்.

K.Umarani
Innerwheel club of Ramnad,
Dist 321,
9487754727

மகளெனும் தேவதை

தேவன் நமக்கு அருளிய தேவதைகள், தேடினாலும் கிடைக்காத தங்கத்தாரகைகள்,
அவள் தத்தித் தத்தி நடக்கையில் 

மனதை கொத்திச் செல்லும் கொலுசொலி.... 

கொஞ்சி கொஞ்சி சிரிக்கையில் 

சிறிதாகும் மனவலி.... மகள்
"பேதை"
பெண்ணாகி போதை மொழி பேசி
"பெதும்பை" பருவத்தில் புதுமை பலசெய்து.... 

"மங்கை" மலராகி, மனதில் மகிழ்வோடு 

"மடந்தை" அவள் மணமாகி, 

மணாளன் கரம் கோர்த்து, 

மறுவீடு செல்லுகையில் 

நம் மனதில் வரும் உயிர்வலி..


"அரிவை" அவள் கையில் அடுத்தடுத்து, 

அச்செடுத்த பதுமைகள்... 

ஆண்டவனின் அருள் கொடையில் அன்றே மூழ்கி விட்டோம்..

 "தெரிவை" பருவத்தில் அவள் தேவதை ஆகி ,
"பேரிளம் பெண்ணாய் பார்போற்ற வாழ்ந்திடவே, 

மகள் பெற்ற நாமெல்லாம் மகராசிகளே 👍.

👆
பெண் குழந்தைகளைப் பெற்று 

அவர்களால் நாம் பட்ட சந்தோஷத்தையும்

 பெண்ணின் ஏழு பருவங்களான 

"பேதை பெதும்பை மங்கை மடந்தை அரிவை தெரிவை பேரிளம்பெண்" இவற்றை சேர்த்து கவிதையாக்க முயற்சித்து இருக்கிறேன்...

பெண் குழந்தைகளை பெற்ற அனைத்து அம்மாவிற்கு சமர்ப்பணம்🙏


    # உமாராணி கருணாமூர்த்தி #

முதுமையின் ஏக்கங்களும் தீர்வுகளும்.


முற்றிய கனி போன்ற அனுபவச் சாறு நிறைந்தது முதுமை. 

அதை முழுவதும் பயன்படுத்திக் கொண்டால், 

பலன் நமக்குத்தானன்றி கனிக்கு அன்று என்பதை, 

முழுமையாக உணர்ந்தவர்கள்
முதுமையை போற்றுவர்..

முட்டி முட்டி வெளிவரும் விருட்சமாய், 

ஊரோடும் உறவாடும் போராடி 

நம்மை உயர செய்தவர்களை ஊரில் விட்டு, 

வேலை தேடி வெளிநாடு சென்ற பின்னே, 

வெறிச்சோடி வீட்டில் அவர்கள், விட்டத்தை பார்த்து, 

வீற்றிருக்கும் மனவலி அப்பப்பா...

அதைவிடக் கொடியது,  
ஒரே வீட்டில் ஒரே அறையில் முடங்கி இருப்பது..... 

ஒருவாய் காபிக்கும், 

ஒருவேளை உணவுக்கும் 9 மணி வரை,

 பிறரை எதிர்பார்த்து காத்திருக்கும், 

முதிர்ந்த குழந்தையின், 

எண்ண ஓட்டத்தை எண்ணிப்பார்க்க மனம் வலிக்கிறது...

60  பேர் வந்தாலும் முகம் சுளிக்காமல் 

மூன்று வேளையும் உணவளித்த கைகளும் 

ஆறு கிலோமீட்டரை  அசால்டாக நடந்த கால்களும் 

இன்று வலுவிழந்து அறைக்குள் முடங்கி கிடப்பதை எண்ணி 

முதுமை மூச்சு முட்டி அழுகிறது...

"தனிமை தானே எடுத்தால் இன்பம் தரும், 

பிறர் கொடுத்தால் துன்பம் தரும்"
 
தனிமையை விரட்டும் தானியங்கி தேவதைகள் 👼 தன் பேரப் பிள்ளைகள்... அவர்கள் தாவி வந்து தன் மடி ஏறி,
பழங்கதை சொல்லச் சொல்லி கேட்கையில்,

 தன் தாயை பார்த்ததுபோல், 

தழுதழுத்து போகிறது பெரியவர்கள் மனது...

 மாதம் ஒருமுறையேனும் மகளோ, மகனோ தன்னை வந்து பார்க்க வேண்டி தவிக்கிறது தந்தை மனது... 

தாலாட்டி வளர்த்த தன் பிள்ளை தனக்கு சோறூட்ட சொல்லி துடிக்கிறது தாய் மனது...
சொர்க்கத்தில் நமக்கு தூளி கட்டிய ,
தூய மனம் இன்று துவளுகிறது தனிமை கண்டு...

முதுமை நோய் அல்ல முற்றிய அனுபவத்தின் பெட்டகம் 

அதை என்றும் பேணி காப்பது நமது கடமையாகும்.


Innerwheel competition ku yeluthiyathu.


 உமாராணி கருணாமூர்த்தி

Wednesday, July 22, 2020

ரோட்டரி சங்கம் வாழ்த்துக்கள்.💐

ஆழி பெருங்கடலை,
அசால்ட்டாக கடந்து,
அன்பை தெளிக்க,
ஆண்டவன் அருளிய
அருள் பெரும் கொடை
ரோட்டரி சங்கம்..

சுற்றும் பூமி சோர்ந்தாலும்,
சூழலும் இச்சக்கரம்,
சோர்வுற்றுப் போனதில்லை..

சோதனையை சாதனையாக்கி,
வேதனையை வேரறுக்க,
ஆரங்களாய் இணைந்த,
அச்சாணி நாங்கள்....

ஊரடங்கு உடலுக்கு தான் அன்றி,
உணர்வுக்கன்று என்ற உந்துதலுடன்,
கோரத் தாண்டவத்தில்,
கோவிலுக்குள் இறைவன்(Rotarians )
மாட்டிக் கொண்டாலும்,
கணினி வழியே காரியம் ஆற்ற வந்த
கந்தர்வ கூட்டம் நாங்கள்....

போக்கு காட்டிய போலியோவை
போதுமென வெருண்டோட,
புதிதாய் வந்த கோவிட்டுடன், 
கிரிக்கெட் ஆட போகும்,
ராகுல் டிராவிட் நாங்கள் 💪...

நாடு நகரம் கடந்து
மனிதம் இணைத்த மனிதரில்,
திரு பார்த்திபன் துணையோடு
பணியாற்ற வந்த
திருமதி கீதாவை,
கீதையின் நாயகன், வழிநடத்த,
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.💐

# உமாராணி கருணாமூர்த்தி#

பிறந்த நாள் வாழ்த்துகள் Ishwarya.

அழகிய உயிரோவியம்
உன்னைப் பற்றி,
எழுத நினைக்கையில்
வரிகளெல்லாம் வரிசைகட்டி
காததூரம் ஓடுவ "தேன்??

உன் கண் மலர் 
திறக்கக் கண்டு
அல்லிமலர் எல்லாம்
அழுது புலம்புவ"தேன்??

அமைதியின் அடுத்த வாரிசு
நீ என்று, சொற்களெல்லாம்
சொல்லாடல் நடத்துவ"தேன்??

செல்வத்தில் குளித்த,
குலமகள் உன்னை கண்டு ,
அந்த மலைமகளும் மலைப்ப"தேன்??

உயிர் ஓவியமா உன் மகள்
என் உயிர் வாங்கும் அழகோவியம்
என்று மதி அங்கலாய்ப்ப "தேன் ??

"தேன்" " தேன்" " தேன்" என
தேனூறும் கேள்விக்கெல்லாம்
நான் கூறும் ஒரே பதில்,,
எதிர்கொள்ள முடியா ஏகாந்தம் நீ..
எம்பிரான் அருள்பெற்ற
அன்பு ஊற்று நீ...

தேனூறும் வார்த்தைகளால்,
என் தேவதைக்கு,
வாழ்த்துப்பா பாடுகிறேன்
 "வாழ்க வளமுடன்" 

                 # உமாராணி #

உயிரின் மகத்துவம்.


உயிர் கொடுத்த தாயும்
உயிரான நட்பும் உடன் இருக்க,
உயிரைத் துச்சமென துப்பி விடாதே...

கொல்லவரும் கொரானாவே,
பல்கிப்பெருகி வளர்கையில்,
பல்லுயிர் காக்கும் தேவன் நீ
தெளிவு கொள்ள வேண்டாமா??

முடிவெடுக்கும் முன்
முழுவதும் யோசி..
உலையென கொதிக்கும்
உன் மனதை,
ஊரடங்கு நேரத்தில் உற்றுக் கேளு..

உன்னுள் ஊறும் அன்பு ஊற்றால்
அகிலத்தை குளிப்பாட்டு...
திறமையை திரியாக்கி
அறிவாற்றலால் ஒளி ஏற்று...
மனிதம் மரித்த மனிதர் மத்தியில்,
ஈதலினால் இறைவன் ஆகு...

இதையும் தாண்டி
உன்னை வெறுத்தவர்காக,
உயிர் கொடுக்கத் துணியும் முன்,
உன்னிடம் ஒரு வார்த்தை...

அன்னை மனதோடு
அன்புத்தோழி நானிருக்க,
என்னிடம் வந்து  ஒரு முறை பேசு..
மன அமைதிக்கு
அஸ்திவாரம் நான் அமைக்கிறேன்.

# உமாராணி#

காதலர் தின வாழ்த்துகள்.

என் இமை திறக்க
விழி நுழைந்து,
என் மனம் மதித்த
மகத்தான மானிடர்
அனைவருமே
என் காதலர்கள் தான்👩‍❤️‍👩👩‍❤️‍👩...


முதல் முத்தமிட்ட அன்னையே

என் முதல் காதல்❤️...

முற்பிறவி பயனாய்

நான் பெற்ற நாயகரே

இரண்டாவது காதல்💞...


முக்கோடி தேவர்கள் வாழ்த்திட

வந்திறங்கிய 4 தேவதைகளே

மூன்றாவது காதல்💕❤️....


நல்லோர் ஆசியால்

நான் பெற்ற நண்பர்கள்

நான்காம் காதல்💕💕 ...


சிரிக்கும் சித்திரமாய்

சிதறிய மொழிபேசும்

மாங்கனி மழலைகளே

ஐந்தாம் காதல்💘💘💘...


ஆதி முதல் அந்தம் வரை

என்னை அடிமையாக்கி

அன்பால் ஆட்டிப்படைக்கும்

அனைத்து காதலர்களுக்கும்,

இனிய காதலர் தின வாழ்த்துக்கள்.



#உமாராணி#

மருத்துவர் தினம் நல்வாழ்த்துகள்🌹.


மருத்துவராகும், என் கனவு
கலைந்தனாலோ என்னவோ,
மருத்துவர்கள் மீது எனக்கு
ஒரு மகத்தான மரியாதை உண்டு 👑...

மண்ணில் தோன்றிய
மாணிக்க தேவதைகள்,
மானிட ஜாதியின் ஜீவஜோதி,
சுடர்விடும் தளிர் கொடிகள் நீங்கள்...

வாரந்தோறும் விடுமுறையால்
நாம் விட்டத்தை பார்த்து வீட்டில் இருக்க..
உயிரின் உன்னதம் காக்க,
வீடு என்பதை துறந்து ,
விடிய விடிய போராடும்
மின்மினி பூச்சிகள் நீங்கள்.. 🩺

முகக் கவசம் இன்றி வீதியில் திரிந்து
யார் மூச்சடைத்து நின்றாலும்,
உயிர் கவசமாய் உடனிருந்து,
எம்மை காக்கும் இறைத் தூதுவர்கள் நீங்கள்.. 😇

கோவிட் அச்சத்தில் அந்தக் கடவுளே,
கருவறையில் கலங்கி நிற்கையில்,
களமிறங்கி களப்பணியாற்றும்,
புண்ணிய ஆத்மாக்கள்  நீங்கள்..🙇‍♂️

தேவன் என்றால்
தேரில் தான் வரவேண்டுமா என்ன...
தேவை அறிந்து தேடிச்சென்று,
சேவை புரியும் ஆண் தேவதைகளுக்கும்
சேர்த்து சொல்வோம்,
மருத்துவர் தின நல்வாழ்த்துக்களை 💐.

 #உமாராணி கருணாமூர்த்தி#

Thursday, May 21, 2020

நட்பு !

*சும்மா இரு சுகமாயிரு* .


வீதியில் இறங்கி வேடிக்கை பார்க்க
அது என்ன " *ராகுல் டிராவிட்"* டா?
விதியோடு உரச வந்த " *கோவிட்* "
என்பதை மனமே நீ உள்வாங்கு.
சும்மாயிரு சுகமாயிரு,
சாத்திய கதவுக்கு வெளியே காத்திருப்பது,
காத்தோ, கருப்போ அல்ல..
நம்மை காவு வாங்க வந்த
" *கொரோனா* "
கொஞ்சம் யோசி..
உலகை காக்க, உன்னை சிறை வை ..
வாழும் கடவுளாவாய்..
உனக்குள் நீ பேசு,
உன்னையே நீ உணர்,
உன்னவளின் உள்ளம் பார்..
உன் பிள்ளை மொழி கேள்...
உத்தமனாய் நீ மாற,
உனக்களித்த ஒரு வாய்ப்பு,
*சும்மா இரு சுகமாயிரு.*
🙏உங்களை வேண்டி கேட்பது,🙏
# உமாராணி #

Wednesday, May 20, 2020

அக(ல்) விளக்கு ஒளி

விளக்கேற்றுதலின்,
விளக்கம் அறியாது,
வியாக்கியானம் பேசும்
வெள்ளந்தி மனிதர்களே...
நாங்கள் ஏற்றியது
வெறும் அகல் ஒளியல்ல,
எங்கள் அகத்தின் ஒளி...
அந்நிய தேசமே அசந்து நிற்கும்
ஒற்றுமையின் ஒளி ....
அடுத்த வீட்டுக்காரனுக்கு ,
நம் நலனை பறைசாற்றி
அவர் மனதில் ஏற்றிய
நம்பிக்கை ஒளி....
அறிவியல் கைவிட்ட
"கோவிட்"அரக்கனை
ஆன்மீகத்தில் அகற்ற,
அறிவிற்கு அப்பாற்பட்ட,
ஆண்டவனின் துணை கேட்டு,
மரபுவழி ஏற்றிய
மங்கல விளக்கொளி...
திருக்கார்த்திகை திரு விளக்கும்,
தீபாவளி ஒளி விளக்கும் ,
விளக்கிய உண்மை
உணர்ந்திருந்தால்,
இன்று
நாங்கள் ஏற்றிய அகல் விளக்கின்🪔
அருமையும் நிச்சயம் நீ உணர்வாய்.

🏡 ஊரடங்கு 🏡

முழுநீள ஊரடங்கு,
விளைவு..
முற்றிலும் செதுக்கின்றோம் வாழ்வை...
முப்பது வருடம் கழித்து....
முள்ளில்லா
மலராய் 🌹 ..
முற்றிய
கதிராய் 🌾...
முக்கனி
சுவையாய்🥭...
முதுமையும் இனிக்க💞.

Thursday, February 13, 2020

நமது சங்கம். ( Innerwheel club )



"ரம்ய பிரியா" தலைமையில்,
 ரம்மியமாய் தொடங்கி,
 "லட்சுமி" கடாட்ச தோடு, 
"கவி"தையாய் தவழ்ந்தபடி,
"கீதம்" இசைத்து
 "கவி"பாடிய பண்பட்ட சங்கமிது...

"விசா"ல பார்வையோடு,
 "அனிதா" "செல்வி" அரவணைக்க,
"வித்யா" தேவி அருளோடு,
 "நர்மதா" நதி போல்
 நளினமாய் வளர்ந்துவந்த
நமது சங்கமிது..

 இன்று "கவிதா"வுடன் கரம் கோர்த்து,
 நமது தோழமை சக்திகளோடு
சாதனை புரிய, "லட்சுமிவர்தினியை"
 மகிஷாசுரமர்த்தினி யாக
உருவேற்றிய உயரிய சங்கமிது...

 நீயும் நானும் இணைந்து நாம் ஆகி,
 நம் உறவுக்கு உதவிட உலகிற்கு
அறிமுகமான அற்புத சங்கமிது...

ஆண்டாண்டு வளர்ந்திட
ஆண்டவனை வேண்டுகிறோம் .

Inner Wheel club ku yeluthinathu.
glitters la veli vanthathu.


இறைவனுக்கு நன்றி

.
கர்மாவோடு ஆடிய
கண்ணாமூச்சி ஆட்டத்தில்,
கண் மூடித் திறக்கையில் 
முன்னின்று காத்தது,
"கருப்பனும் "அவர் "தங்கையும்"
தானன்றி வேறாரும் நானறியேன்...
மனம் கனத்த வேலை
கல்லாக தோன்றிய கடவுள் இன்று, 
கண்முன் கரைவதை கண்கூடாக காண்கிறேன்...
கால தேவதை கரம் கோர்த்து 
காலார நடை பயில, 
காலாவதியாகும் உன் கன்றிப் போன நினைவுகள்.
வராகி தாயின் தயவோடு 
வசந்தம் உன்னை வாரி அணைக்க, 
வாஞ்சையோடு வாழ்த்துகிறேன்.

இறைவா!

இறைவா!
உறங்கச் செல்லும் முன்

உன்னிடம் ஒரு வார்த்தை..
நாளை எழுந்தால் 

என்னைத் தேடி நீ வா ..
எழவில்லை என்றால்

 உன்னைத்தேடி நான் வருகிறேன்.. 
எப்படியாயினும் 
என் உயிர் உழல போவது 
உன்னோடுதான்.. 
இப்பொழுது கொஞ்சம் உறங்கச் செல்கிறேன்.

                        Good Night

*இருபதில் இறைவனும் நானும்.💞..

பத்து எண்றதுக்குள்ள
19 கடந்து 20 வந்து இறங்கியது..
இதயத்தில் ஒரு நிறைவு,
 இருந்தும் ஒரு வெறுமை..
இனிக்கின்ற மனதுக்குள் 
இறக்க முடியா ரணம் ஒன்று...
ரகசியமாய் கேட்டேன் 
என் இரட்சகனிடம், (இறைவன்) 
ஓடிப் போகலாம் வாவென்று💞..
வாழாத வாழ்வும், வளமான நாளும், 
இன்னும் இங்கிருக்க என்னோடு வந்து ....😡
ஏனிந்த யோசனை என்று 
போதனை வேறு சொல்லி சென்றான்😞 ..
பொசுக்கென்று பொங்கிய கண்முன்னே கலங்கலாய், 
அத்தனையும் அவன் பிம்பம்..
நண்பனாய், என் நாயகனாய் , 
நலம் விரும்பியாய் 👼...
மனம் புல்லரித்து புத்துயிர் பெற
எனது ராஜ்ஜியத்தில்
நானே மீண்டும் ராணியானேன்👑.
_*அன்புடன்* *உமாராணி*

என் உயிர் எங்கு உள்ளது...


நான் இழுக்கும் 
மூச்சுக்காற்றிலா..
முழு வேகத்தில் ஓடும்
 ரத்த ஆற்றிலா??
அல்லது 
சத்தமின்றி துடிக்கும் 
இதய ஒலியிலா??
ஓசையின்றி பெருகும் 
ஹார்மோன் அலையிலா??
அனைத்திலும் அந்நியப்பட்டு
ஆண்டு பல கடப்பேன்..
ஆனால் 
அரைநொடி நீ எனை மறுத்தால், 
மறுநொடி நான் இறப்பேன்.

For My Loveable Aarama.

Saturday, July 20, 2019

வெள்ளி விழா வாழ்த்துகள்.

பள்ளியின் முதல் மாணவியல்ல‌
மூத்த மாண‌வி என்ற மமதையில் கூறுகிறேன்,
இப்பள்ளியின் வாசல்
எனக்கோ ஒரு பள்ளிவாசல்..
மகளை சேர்க்க வந்த நானே
ஒரு மாணவியானேன்..
படித்தது பால பாடம் அல்ல‌
வாழ்க்கை பாடம்.
மண்ணையும் மனிதனாக்கி,
கல்லையும் கவிதையாக்கும் வித்தை
உணர்ந்ததில்லை எவரும்,
இங்கோ உணர்த்தினார்கள் பலரும்...
தினகர் வளாகத்தில் ஏற்றிய தீபம்
எட்டு திசையும் ஒளிபரப்ப,
எங்கெங்கு நோக்கினும், எம் பள்ளி மாணவரே
விடி வெள்ளியாய் வழிநெடுக..
வெள்ளிவிழா காணும் இவ்வேளை
இதை விட சிறப்பு எது உள்ளது..
உள்ளார்ந்த மனதோடு உளமாற உறைக்கின்றேன்
என்னை பெற்றதோ ஒரு தாய்,
இங்கு நான் பெற்றதோ இரு தாய்,
அது சேவையின் செல்விசெய்யதாமேடம்,
நம் பள்ளியின் ராஜமாதா ராஜ முத்து மேடம்
என்பதை ராம்நாடே அறியும்..
நான் தடுமாறிய வேளையிலும்,
மனம் தடம் மாறிய வேளையிலும்
எனை தாங்கி பிடித்த கரமென்றால்
அது சங்கரலிங்கம் சாரென்று
சத்தியமாய் உரைத்திடுவேன்..
என் எண்ணங்களை எல்லாம் எடுத்துரைக்க‌
எழுத்துக்கள் போதவில்லை... என‌வே
ஏங்கும் மனதோடு
எழுந்து நின்று வணங்குகிறேன்.
இன்று
வெள்ளி விழா காணும் இப்பள்ளியை
பொன் விழா தாண்டி,
வைர விழாவில் வரவேற்க,
என்றும் காத்திருக்கும் எம் தலைமுறை.
வாழ்க வளமுடன்.
உமாராணி கருணாமூர்த்தி

Friday, July 19, 2019

காமராஜர்

 
ஆதியோகி நமக்களித்த
கர்மயோகியே!

ஆண்டவனை பார்த்திடாத
ஆத்திகனின் அருள் ஜோதியே!

பசித்த வயிறோ டிருந்தால்
படிப்பேறாது என்ற
மனோதத்துவம் அறிந்த
மகத்தான மருத்துவரே!

மதிய உணவளித்து
மாணவரை மாணிக்கம் ஆக்கிய
மனித கடவுளே!

ஏழை குழந்தைகள் எட்டிப் பிடிக்க
வானை வளைத்து ஏணியாக்கி
ஏற்றிவிட்ட எம்பிரானே!

உம்மிடம் ஒரு கேள்வி ..

எப்படி உதித்தது இப்பண்பு
எங்களுக்கும் வேண்டும்
இந்த இறையன்பு .

கல்வியை காசாக்கி
களிப்புறும் மானுடனே....
கற்றுக்கொள் இவரிடம்...
காசில்லா வேளையிலும்
கல்வி களப்பணியாற்றும்
வித்தையினை..

என் தலைமுறையில்
நாங்கள் தவறவிட்ட
தரமான அரசியல் தலைவனே!
உன் ஆட்சிக்காலம் ஒவ்வொன்றும்
அழகிய பொற்காலம், என
புலம்பி புலம்பி ஓய்கிறார்கள் இங்கே..

ஓய்வெடுத்தது போதும் எம்பிரானே!
எழுந்து வா..
உன் எண்ண கதிர் பரப்பி,
எழுச்சிபெறச் செய் இந்தியாவை..

என வேண்டும் இதயத்துடன்
இறைவனை பிரார்த்திக்கிறோம்.
   
                         என்றும் அன்புடன்,
                         உமாராணி கருணாமூர்த்தி.

Tuesday, June 4, 2019

குரல்கள் பலவிதம்.

சங்கீதம் சாரலானாலும் அழகு ...
கனத்த தூரலானாலும் அழகு...

ஜானகியம்மாவின் குரல்
இனிக்கும் ஜாங்கிரி என்றால்,
மாதங்கியின் குரலோ
மயக்கும் மத்தளம்...

சுபாவின் குரல்
புரட்டும் சுனாமி என்றால்,
சுசீலாம்மாவின் குரல்
அதை சுருட்டும் சுக்கான் ...

உமா ரமணன்
உற்சாகத் துள்ளல் என்றால்,
அனுராதா ஸ்ரீராம்
அழகிய ஆர்மோனியம்...

குயில்கள் மாறும்போது,
குரல்களும் வேறு ..
ரசிக்க பழகினால்,
ராகங்களும் நூறு நூறு..

( For smule singers )

நான் யார்?

உனக்கே உனக்காய் நான் இருக்க
எனக்காய் என்றேனும் ஏங்கியதுண்டா?

எட்டிய தூரம் எதிரில் நானிருந்தும்
ஏங்கும் இதயத்தின் எதிரொலி கேட்டதுண்டா?

உன் தாயாய் மாறிய பிறகு கூட,
இத் தாரத்திடம் பாசம் பகிர்ந்தது துண்டா?

உண்மை உரைக்கிறேன் கேள் நண்பா!

என் கவிதையின் கரு நீ ...
என் காதலின் உரு நீ...
என் கனவின் நிழல் நீ ...
என் காலத்தின் நிஜம் நீ ..
என் மகிழ்வின் பதாகை நீ..
என் வாழ்வின் பாதி நீ... பாசத்தின் மொத்தம் நீ..

ஆனால் இதில் பாதி கூட உணரவில்லை நீ ...

கருகும் இதயத்துடன் கண்ணீர் விட்டு கேட்கின்றேன்..

இத்தனை நாள்
உன் உணர்வில் கலந்தவர் யார்?

உன் உயிரில் நிறைந்தவர் யார் ?

ஊரும் உறவும் அறிந்திடாது உன் உள்ளே உறைந்தவர் யார்?

உருக்கமுடன் கேட்கிறேன்... உண்மை கூறு உத்தமனே!

உன்னில் நான் யார்?

Thursday, October 25, 2018

ME TOO வலைதளம்.

இது பழி வாங்கும் களம் அல்ல‌
பாதிக்கப்பட்ட மனதை
பதமாக்கும் தளம்..

முகமூடி மனிதனை
முச்சந்தியில் நிறுத்தி
வக்கிர சாத்தானை
தோலுரிக்கும் ஒரு தளம்..

பால்ய பருவதில்
பாலியலில் பாதிக்கப்பட்டு,
பட்டுபோன பிஞ்சு மனதுக்கு
வடிகாலாய் வந்த ஒரு தளம்..
இன்று
பாதிபேரின் பாப்புலாரிட்டிக்கு
பயன்படுவதால் அது
ஆனது ரண களம்...

MEE TOO பதிவுகள் பொய்யெனில்
TATTOO குத்தப்படும்
என்று  கூறி பாருங்கள்,
புகார்க‌ளில் பாதி காலாவதியாகும்...

காயம் பட்ட மனதின்
களிம்பான இத்தளத்தை
மலிவான  போர்களம்
ஆக்கிடாதீர் ...
என அன்போடு கேட்டு கொள்ளும் தோழி,
                                     
                                                  Umarani Karunamoorthy

Monday, June 11, 2018

புரிய வைப்போம் பூக்களுக்கு.

                                                                                                                                                              அண்ணல் காந்தியும் , அப்துல் கலாமும்
வாழ்ந்த புண்ணிய பூமியிது -இன்று
அழுக்கேறிய மனதோடு ,
அரக்கர் கூட்டமொன்று,அலைந்து  திரிவதை ,
அழகு தேவதைகளுக்கு
புரிய வைப்போம்...

தொட்டதும் சுருங்கும் ,
தொட்டாசிணுங்கியல்ல ..நீ
தொட்டவுடன் எரிக்கும் அக்னி பிழம்பென்று
அறிய வைப்போம்..

ஆசை மொழி பேசிய ஹாசினியும்,
அழகு பூங்கோதை ஆஸிபாவும்
அசுர சாத்தானின் ஆசை தீயில்
அழிந்து எரிந்தது, இதுவே கடைசியாகட்டும்...

எரிந்த சாம்பலில், எழுந்து வரும் பீனிக்ஸாய்
எண்ணங்களை உருவேற்றி, வலுவூட்டுவோம்
வாரிசுகளின் வாழ்க்கையினை..

காலுக்கு சலங்கை கட்டும் நேரத்திலே,
கைகளுக்கு கத்திச்சண்டையும்
கற்றுக் கொடுப்போம்...

பெற்றவரையும், கூட பிறந்தவரையும் தவிர‌
மற்றவனை எல்லாம்,மாற்றானாய்
ஒதுக்கச்சொல்வோம்...

மையேந்தும் விழியொன்றில் கருணையும்,
மற்றொன்றில் காமுகனை கண்டறியும் திறனையும்
வளர்த்திடுவோம்,,

மற்றவர்க்கு நடக்கும் அநீதியையும் அறுத்தெறிய‌
மழலை மனதில், மஹிஸாசுர‌வர்த்தினியை
குடியேற்றுவோம்...

தொடுதலின் வகையினை தொலை நோக்கு பார்வையில்
சொல்லிதந்து ,தன்னை காத்து தரணியில்
வாழும் கலை வளர்ப்போம்.
    வாழ்க வருங்காலம்..
                                                                     அக்கறையுடன்,
                                                  உமாராணி கருணாமூர்த்தி.

Sunday, April 1, 2018

மெளனத்தின் ஓசை.

நட்பென்றால் நாம் என்று
நானாக எண்ணியதால்
எண்ண‌த்தை சொல்லி விட்டேன்
எதார்த்த வார்த்தையினால்..
உன் உணர்வை உருகுலைக்க‌
ஒரு போதும் நினைத்ததில்லை,
உள் நெஞ்சில் உறுத்தியதை
உன்னிடம் மறைக்கவில்லை...
ஊசி முனை வார்த்தையினால்
ஏசி பிரிந்து விட்டாய்,
பேசி ப‌லனில்லை என்று
நானும் இருந்து விட்டேன்..
நட்பை யாசித்து பழகியிருந்தால்,
யோசித்து பேசியிருப்பேன்..
சுவாசித்து வாழ்ந்ததினால்
வார்த்தை ஜாலம் சேர்க்கவில்லை..
இனி விரிவாக பேச எதுவுமில்லை
விரிசலை பெரிதாக்க‌
விருப்பமில்லை..
சொன்ன சொல் விளக்காத‌
பொருலினையா
சொல்லாத என் மெள்னம்
விளக்கிட போகிறது...
விதி விட்ட வழி.

ஏக்கம்

இரு கைகளால் இறுக்கி பிழிந்திடினும்,
வாராத 'வலி'யது,
வந்து போகிறது ,
கண் பார்த்தும் கை தொட முடியா, கணினி திரையில், உன்னை காணுகையில்...
    By,
      Umarani

Tuesday, January 16, 2018

சொல்லடி அபிராமி.



தந்தையின் நினைவு நாளில்
தவிக்கிறது என் மனம்.
அவரின் மரணம் எண்ணியல்ல,
தம்பியின் மனதை எண்ணி..

சராசரி மானுடன் நான்...
அந்தாதி பாடி அந்த‌
அபிராமியிடம் நியாயம்
கேட்க முடியவில்லை...

இயல்பாக கேட்கிறேன்
உன்னை எண்ணி
உருகுபவருக்கு மட்டும்  தான்
உயிர்பிச்சை அளிப்பாயா?

காதணி வீசி காலனிடம் இருந்து
பட்டரை காத்த நீ
உள் அன்போடு உயர் சேவை செய்த‌
உள்ளத்தை மறந்தது ஏனோ??

காலம் காலமாய் மாறாத வடுவாகி
மனதை அறுக்கிறது
அவன் விட்ட கண்ணீர்,
அன்றிலிருந்து தான் தம்பிக்கும்
இன்னொரு தாயனேன்.

தளராத பக்தியோடு
தயை கூர்ந்து  வேண்டுகிறேன்
தந்தையின் ஆன்மா சாந்தி
அடைய செய்து விடு.

Thursday, November 16, 2017

நானும் சர்க்கரையும்.


சர்க்கரை
எண்ணும் போதே
எச்சில் ஊறும்
ஏகாந்த போதை,
போகிற போக்கில்
ஆளை புரட்டிடும் பாறை..

சர்க்கரை ருசியில்
சலசலக்கும் ரத்தம்,
எதிர்கால சந்ததியரோடு
எதற்கு இந்த யுத்தம்?..

உண்ணாதே என்றுரைக்கவில்லை
உண்ணாதிருத்தல் நலனென்ற‌
நல்லெண்ணத்தில் நவில்கிறேன்
நயமுடன் நான் ..

நீரிழிவு உன்னை நீங்கிட‌
வெறுத்திடு வெள்ளை அரக்கனை,
கலந்திடு கரும்பு சர்க்கரையை
உணவே  என்றும் மருந்தாக...

நீயும் நானும்
நாளை வரும் நம்  தலைமுறையும் ,
ஆரோக்கியமாய் வாழ‌
தவிர்க்க வேண்டிய முதல் உணவு,
எதிக்க வேண்டிய முதல் எதிரி
சர்க்கரை என்னும் சாத்தானை..

                   இனிப்பை தவிர்த்து
                   இனிதே வாழ்வோம்.
                                                           

( ஆரோக்கியா மருத்துவமனையில் நடந்த கவிதை போட்டிக்கு எழுதி அனுப்பினது )

Thursday, October 12, 2017

மரபு

மாந்தர் நாம் விட்டுச்செல்வோம்
மரபின்  தடம்  நம் மக்களுக்கு..

திருவள்ளுவர் அருளிய
முப்பாலை அருந்தி
மூச்சு வளர்த்த மூத்த குடியினர்-

 நம் முதன்மை மரபான
தாய்மை போற்றுதல் முதல்
தனிமனித  ஒழுக்கம் வரை

நாடி பார்த்தல் முதல்
மூலிகை மருத்துவம் வரை,

மாப்பிள்ளை சம்பா முதல்
சித்ரகார் அரிசி வரை,

அவரைக்காய்,கீரை முதல்
ஆடு,மாடு வளர்ப்பு வரை,

அன்னியரை நாடாது
அனைத்தையும் பெறும் தந்திரம்
நம் மரபெனும் மந்திரம்...

மனித குலம் செழிப்புற
உரமின்றி வாழும் உக்தியும்,
மருந்தின்றி பெறும் சக்தியும்
நம் மரபின் உச்சமென்று
உணர்த்திடுவோம் உலகிற்கு.
வாழ்க வளமுடன்.
           
K.Umarani,    
ISO,
Inner Wheel Club or Ramnad,
 IW- 321
 ( Tamil nadu and kerala state level competition la !st priz vangiyathu )

Sunday, August 27, 2017

இறைவனுக்கு நன்றி.


முழுமதி நான்  திருமதியாகி
முப்பது வருடம் முந்திக் கடந்தன
மூச்சு விடும் நேரத்தில்.
முக்தி பெற்றது வாழ்வு,
முருகனின் அருளோடு...

பதினேழில் கரம் பிடித்து,
பக்குவமாய் எனை மாற்றி,
பாசத்தை பதியமிட்டு,
பல வண்ண ரோஜா நான்கு பெற்று,
நாளும் பொழுதும் எமைக் காத்த,
நற்றுணை நாயகனே!

நானிலமே எதிர்த்தாலும்
நானிருக்கேன் என்று
எதிர் வந்த ஏகலைவனே!
எத்தனை பிறவி எடுத்தாலும்,
அத்தனையிலும்,
உன்  உறவாக‌,உயிராக‌,
உடன் வர வேண்டுமென்று
உளமாற வேண்டிவேன்
செந்தூரான் சேவடியில்.

Monday, July 24, 2017

பிறந்தநாள் வாழ்த்துகள் ஆராதனா . (24/7/17)



என் நரம்புகளில் நாணேற்றி
இதயத்தில் இன்னிசை மீட்டும் இனியவளே,
இன்று உன் பிறந்தநாள்...

எண்ணத்தை சலவை செய்து
என்னுள் மனிதியை
வெளி கொணர்ந்த ஓவியமே,
இன்று உன் பிறந்தநாள்...

அச்செடுத்த அழகு தமிழ் மொழியை,
பிச்சுப்பிச்சு பேசிடும்
பச்சை பைங்கிளியே,
இன்று உன் பிறந்தநாள்...

ஓம்கார ஒலியாய் ஓங்கி ஒலித்திடும்
ஆராதனா காவியமே,
கற்பனைக்கு தப்பிய ஓவியமே,
இன்று உன் பிறந்தநாள்....

என் அணுவெல்லாம்
நுளைந்தோடும்
தார்ப்பரிய உயிர் மூச்சே,
இன்று உன் பிறந்தநாள்....

இல்லை இல்லை..
இன்று எந்தன் பிறந்தநாள்,
என் இதயம் மலர்ந்த நாள்.

என் உயிரின் உறைவிடமே,
உன்னை ஒன்று கேட்கிறேன்
மறுபிறவி ஒன்றிருந்தால்
என் அன்னையாக வேண்டாம்,
அன்பு தோழியாகும் வரம் வேண்டி
ஆண்டவனிடம் பிராத்திப்போம்.

                         வாழ்க வளமுடன்.

                                   

விழித்தெழு பெண்ணே !



பேதைப்பெண்ணே நீ
போதை பொருளாய் இருந்தது போதும்,
பாரதி கண்ட புரட்சிப்பெண்ணாய்
பொங்கியெழு...

புதுமையை
ஆடைகுறைப்பில் காட்டாதே,
ஆளவந்தவளாய் உனை மாற்று..
சமமாய் தண்ணையடிப்பதில் காட்டாதே
சாதனை புரிவதில் நீ காட்டு..

அன்னை தெரசாவாய் மாறி
அன்பினை காட்டு,அனாதைகளுக்கு,
அப்துகலாமாக மாறி 
ஆக்கம் பல புரி பாரதத்திற்கு..

கொலுபொம்மையாக மட்டும்
இருந்து விடாதே,
கோபுர கலசமாக உயர்ந்து நில்,
நாளைய உலகம் நம‌து கையில்.
          
           உமா கருணாமூர்த்தி

Tuesday, June 27, 2017

பர்வீன் சுல்த்தானா.


பார்க்கும் பார்வையிலே
தெறிக்கும் பட்டாசு,
உதிர்க்கும் வார்த்தைகளோ
வண்ண மத்தாப்பு..

அன்று கோவையில்
பெண் என்ற கர்வத்தை
என்னுள் விதைத்த‌
விவசாயத்தோழி,
அறுவடை நாளில்
இன்று என் அருகில்...

ஆம்,
பெண்ணான பெருமையை- இங்கு
புரிந்தேன் உம்மால்...

சாமானியனையும்
சாதிக்க தூண்டும்
தூண்டா மணிவிளக்கு உம் மொழிகள்,
மறைந்த பாரதியும்
மகிழ்ந்து வாழ்த்தும்  உம் வாழ்க்கை வழிகள்..
அகமகிழ்கிறது நெஞ்சம் உம் பேச்சில் ,
உலகமே   என்றும்   தஞ்சம்..

பச்சிளம் குழந்தையும் ,பார்த்து வியந்திடும்
தோழி பர்வீன் புகழ் மேன்மேலும்
பர‌ந்து விரியட்டும் பாருக்கு நிகராக .
                              வாழ்க வளமுடன்.
                                                                                       அன்பு தோழி,
                                                                                           உமா கருணாமூர்த்தி.

Friday, June 23, 2017

வாழ்த்து கவிதை.


1989 ஆம் ஆண்டு
எல்லாம் வல்ல இறைவன் துணையோடு,
பட்டயத்தலைவர்
திரு. ர‌விச்சந்திர ராமவண்ணி
தலைமையில்
தளிர் கொடியாய் தலை தூக்கி
உறுப்பினர்கள் உதவியோடு
உலாவந்த ரோட்டரி சங்கம் -இன்று
எட்டு வைக்கப் போகிறது
28 வது வருடம்...

முகவையின் முத்துச்சுடர்
மருத்துவர்களின் மாணி மகுடம்
கருணையை தன் கண்மணியில் கலந்திட்ட
நம்  கவர்னர் திரு.சின்னதுரை அப்துல்லா
தயவோடும்,
சேவையே சுவாசமென
சுற்றித்திரியும் சேனைகளின்
துணையோடும்,
தீயென சுழல காத்திருக்கும் காரியதரிசி
திரு பூபதி தலைமையில்
ரோட்டரி  சங்கம் ரோஜா வனமாக‌
சேவை மனம் பரப்பும் என‌
நம்புவோம் நங்கூரமாக..

                                     வாழ்த்தும் தோழி,
                                                 உமா கருணாமூர்த்தி

இசைக்குடும்பம்

எங்கோ பிறந்தோம்
எங்கோ வளர்ந்தோம்
இங்கு இணைந்தோம்
இசையின்  தயவால்...
இசையை வாசித்தோம்
இசையை நேசித்தோம்
இசையை சுவாசித்தோம்
அதையே யாசித்தோம்
இன்றும் இறைவனிடம்..

பல தோட்டத்து
பன்னீர் பூக்கள் நாங்கள்...
பருவம் வேரான
 கஸ்தூரி மான்களும் நாங்கள்..
இசையென்னும் வயிற்றில் பிறந்த‌
உன்னத உறவுகள் நாங்கள்...
ஊர் வேறாய் வாழும்
ஈசன் அடிமையும் நாங்கள்....
 இணைந்தோம் இன்று
 இறைவனின் அருளால்
பல தேசம் தாண்டி தரணியில் இங்கு..

தாலாட்டு இசைத்தது
 வெவ்வேறு தாயெனினும்,
இணைந்து ருசித்தது
இசையென்னும் தாய் பாலை.

ஆதி சிவன் அருளோடு
ஆன்மீக பொருளேடு
சத்குருவின் நெறிகள்
சாமானியனை ச்சென்றடைய‌
சரிகமபதநி சுவரங்களும்
எங்கள் சாரீரங்களும்
சமரசம் செய்தே,
சங்கீதச்சாரலாய்
சங்கமிக்கப்போகிறது.

Isha sivan {  smule Ram }  க்கு எழுதி கொடுத்த கவிதை

Thursday, April 27, 2017

சிவனே போற்றி.


ஆதி மூலமே,அதிசய ரூபமே,
அகிலத்தை ஆட்சி செய்யும்
அண்ணாமலையாரே!
ஆறடி உயரமும்,அரையடி இதயமும்
இளகி உருகுமய்யா
அர்த்தநாரிஷ்வரா-உன்
ஆத்மார்த்த அதிர்வலையில்..

திரித்த ஜடையும்,திண்ணென்ற தோள்களும்
திரிசங்கு கழுத்திலே
தரித்தாடும் சர்ப்பமும்,
தண்டை எதிரொலிக்க‌
தகதிமி நீ ஆட...
அண்ட சராசரமும்,அடிமையாகிடுமே
ஆதியோகி உன் அசைவில்...

அறுபத்துமூன்று நாயன்மார்களை
நயமுடன் ஏற்றுகொண்ட‌
நடுவனே !நஞ்சுண்ட நாயகனே
பூத கணங்கள் புடைசூழ‌
என் பாவ கணக்கை சரிபார்த்து
பூர்வஜென்ம வினை தீர்ப்பாய்-உன்
பாலகனாய் எனை ஏற்பாய்...

சுடுகாட்டு சாம்பலும்
சுட்டெடுத்த மண்டையோடும்
மாலையாய் சூடி கொண்டே
சூத்திரதாரி நீயிருக்க‌
பற்றுதய்யா என் மனம்
சுயம்பு லிங்கம் உன்னை சுற்றி..

ஆதிசேஷன் துப்பிய ,ஆலகாலவிஷத்தை
அள்ளி பருகிய நீலகண்டேஷ்வரா!
நின் தயவால் நீர் நில உயிரெல்லாம்
உயிர்பிச்சை கொண்டதய்யா..

Friday, March 31, 2017

அப்பாவிற்கு ஓர் கவிதை

தாய் வழி தமிழை
தந்தை வழி கற்பித்து
தரணியில் நான் உயர‌
வாழ்வனைத்தும் தந்தவரே...

மணமகளாய் நான் மாறி
மறு வீடு சென்ற பின்னே
நீவீர் மனமுடைந்து அழுத சேதி
அக்கா வழி கேட்ட போதும்..

வெள்ளந்தி மனதோடு
வெண்பொங்கல் எடுத்து வந்து
வயிற்று பிள்ளைக்காரி எனக்கு
வாஞ்சையோடு  கொடுத்த போதும்...
உணரவில்லை உம் அன்பை, நீர்
உயிரோடு இருக்கும் வரை.

மழை தரும் மேகமாய்
மனம் கனத்த வேளையில்
அதை சருகாக்கும் சாகசத்தை
சடுதியில் கற்று தந்தவரே,

தாளாத மனதோடு
தாலாட்டு இசைக்கின்றேன்,
தாயாக நான் மாறி
தந்தையே நீ தூங்கு..
மறுபிறவி உண்டென்றால்
மனதார வேண்டுகின்றேன்
மறுபடியும் பிறந்திடுவாய்
மகனாக என் வயிற்றில்.

Saturday, March 25, 2017

யாழினி என் தேவதை.



விடியல் வேளையில்
விடிவெள்ளியாய்
மண்ணில் தோன்றிய‌
முழுமதி முகத்தவளே...

உன்னை முழுமையாய் கண்ட நொடி
மூச்சு விட மறந்தேனடி,
அள்ளி கொஞ்சிய
அடுத்த நொடி,இதயம்
அனிச்சையாய் துடித்ததடி...

கூவும் குயிலிசையும்
புல்லரிக்கச் செய்யும்
புல்லாங்குழலிசையும்,
பூரித்துப்போகும்
யாழி நீ இசைக்கும் யாழிசையில்...

யட்சக‌ன் அருளிய
எல்லோரா ஓவியமே,  - கீர்த்தி
யாசித்து பெற்றெடுத்த‌
ஆறாம் காப்பியமே...

கண்ணனின் கருணை உனை நனைக்க,
பாபுவின் பார்வையோ அரவணைக்க,
அன்னையின் அன்பிலே அமுதாகி
ஆண்டு பல கோடி அழகி நீ வாழ‌
ஆச்சி எந்தன் ஆழ்மன வாழ்த்துகள்

Friday, December 23, 2016

விசறு பிடித்த வித்வான்களுக்கு


தாய் வீட்டில் தளிர் கொடியாகி,
தமையன் தமக்கையோடு
வேர் விட்டு மரமாகி,

மணாளன் கரம் கோர்த்து
மருமகளாய் நான் மாற

பருவகால மாற்றத்தால்,
மாணிக்க கிளைகளாக
மகள்கள் மண்ணில் தோன்ற,

கிளைகளோடு இலைகளாக
மருமகன்களின் வரவினிக்க,

வசந்தகால பூக்களென
புவியிறங்கிய நான்கு தேவதைகளோடு,

விருட்சமென விரிந்து நிற்கிறது,
தளிர் கொடி இன்று காடடைக்கும் பெரும் மரமாய்..

பெருமை கொள்ளும் இவ்விடயம்,
பகடிக்க என்ன உளது??🤔🤔

முழுமை பெற்ற வாழ்வளித்த
இறைவனுக்கு கோடி நன்றி.
     
             

Monday, June 20, 2016

விடியலை நோக்கி விளை நிலங்கள்.


பேராசை பெரும் தீயில்
பச்சை மரங்கள் மழிக்கப்பட்டு,
காணி நிலமெல்லாம்
" கார்பரேட் " கம்பெனியாகி
கரிசல் காடுகளும்
களையிழந்து போனதுவே...

பச்சை பட்டுடுத்தி
பரந்து விரிந்த விளைநிலமும் வீடாகி,
காடெல்லாம் காட்சி ப்பொருளானால்,
நெல்மணி என்ன "நெட்"டில் கிடைக்குமா,
மழை என்ன மந்திரத்தில் பெய்யுமா?

பசுமை பாரதம் பட்டொளி வீசி
மண்முட்டும் விதைகள்
விண்முட்டி வளர,
விடியலை நோக்கி விரைந்திடுவோம்
விவசாயிகளோடு நாமும் கை கோர்த்து.

                                                 Uma karunamoorthy.

Thursday, August 27, 2015

எங்கள் திருமண நாள் கவிதை

எட்டு எட்டாய் நடை பயின்று,
பட்டு ரோஜா நாலு பெற்று,
பார் புகழ உயர வைத்தோம்,
இருபத்தியெட்டு ஆண்டுக்குள்ளே...

எத்தனையோ சண்டைகளில்,
எட்டிப் பார்த்த கோபங்களில்,
ஒளிந்து நின்ற பாசத்தை,
பாவை நான் பகுத்தறிய‌,
பாதி வாழ்க்கை க‌ழிந்தது...

கரி பூச எண்ணி
சதி செய்த சமூகத்தில்,
கறைபடாது எனை காத்த,
கல்லுக்குள் ஈரமாய்
கடவுளை நான் காண‌,
கால் நூறாண்டு கடந்தது...

பாசத்தின் கொள்ளளவை,
பாத்தியப் பட்ட நாம் உணர‌,
மீதி வாழ்வு வழங்கிடவே,
இறை வணங்கி
அருள் வேண்டிடுவோம்...

Wednesday, August 26, 2015

திருமண நாள் வாழ்த்துகள்


உன் மனதை
கொள்ளையிட்ட காரணத்தால்,
மன்றாடி கேட்டும்,
மனமிறங்க மாட்டாது
மன‌ச்சிறையில் பூட்டி வைத்து,
அன்பு கணையெடுத்து
அன்னாரை நோகடித்து,
நொடி பொழுதும் நீங்காது
நரம்பெல்லாம் நாண் ஏற்றும்
நாயகியே!
உன் ராமனின் ரத்தமெல்லாம்
மத்தளமாய் உன் நினைவு
சத்தமின்றி ஓடுவதை
சந்தேகமின்றி அறிவாயா?

தமயந்தி நளனை
தரணியில் யாம் கண்டதில்லை..
சத்தியவான் சவித்திரியை
சத்தியமாய் சந்திக்கவில்லை..
இருவரையும் பார்க்கிறேன் இன்று,
"காவேரி ராமன்" உம் வடிவில்..

தேவர்களின் தலைமகனை
கரம் பிடித்த தேவதையே!
தேனூறும் மனதோடு
"ராணி"நான் வாழ்த்துகிறேன்
வாழ்க பல்லாண்டு,
வளமோடும் நலமோடும்.
                 
                 அன்புடன்
                     உமா கருணாமூர்த்தி.

Thursday, July 23, 2015

ஆராதனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.




ஆண்டவன் அருளிய
ஆகாய தாமரை நீ,

' பாரதி ' வணங்கி நின்ற‌
பராசக்தியும் நீ..

' கம்பனின் ' கவி தொகுப்பில்
தப்பிய தாரகை நீ,

' வாலியின் ' வரிகளில்
பிரிந்து வந்த வாக்கியம் நீ...


' வைரமுத்து '  கண்டிடாத‌
வைர வரிகளும் நீ,

' தாமரையின்'  தலைமகளாம்
தமிழ் மொழியும் நீ..

'பழநி பாரதி ' பார்த்திடாத‌
'பா' க்களின் தொகுப்பு நீ,

கவிஞர் ' சுரதா 'வின்
சூரிய படைப்பும் நீ..

பாஷையின்றி பேசும்
' ஓஷோ 'வின் புது மொழி நீ

ஓசையின்றி கரைகிறது மனம்
ஓயாது ஒலிக்கும் உன் குரலில்..

ராணியின் ராஜ்ஜியத்தை
ஆள வந்த ஆராதனாவே

நீ ஆண்டு நூறு நலம் வாழ‌
நாளும் வேண்டுகிறோம் இறைவனிடம்..



Wednesday, January 14, 2015

தை மகளே வருக..



போகியன்று போர் குணம் போயிட,
ஆசை, கோபம்
அனைத்தையும் அக்னியில் அழித்திட,
ஆனந்தமாய் ஆடிடுவோம்,
அகமகிழ வாழ்ந்திடுவோம்,
அடுத்த நாள் வரப்போகும்,
தை மகளை வரவேற்க...

வைகறையில் நீராடி
வாசலிலே கோலமிட்டு
வண்ண வண்ண பட்டுடுத்தி
புதுப்பானை பொங்கலிட்டு
பொங்கி வரும் புன்னகையுடன்
பூரணமாய் படையலிட்டு
பூமித்தாயை வணங்கி பின் கதிரவனுக்கு நன்றி சொல்லி
களிப்புடனே வரவேற்போம்
தை மகளே நீ வருக..


                          அன்புடன் வாழ்த்தும்,
                              உமா கருணாமூர்த்தி

Thursday, December 25, 2014

சுனாமி.

காற்று வாங்கச் சென்றவரை
காவு வாங்கிய சுனாமி,
பூவோடு பிஞ்சையும்
புல்லென பிடிங்கிய‌
காலனின் பினாமி...

கருணையைக் கடலாக‌
கற்றவர்கள் சொன்னதுண்டு,
உப்பிட்டவரை மறவாதேயென‌
மற்றவரும் சொன்னதுண்டு...

மறக்குமா நெஞ்சம் இனி?
மனித உயிர் குடித்த‌
மகத்தான கடலலையே!
தெரியுமா உனக்கு...
நீ சுவைத்த எவரும்
உன்னை சுவைத்ததில்லை
ஒரு போதும்....

Tuesday, August 5, 2014

பூமராங் பூளோகம்...


அன்பு கணையெடுத்து
அகிலத்தில் போர் தொடுக்க,
எரிந்த வேகத்தில்
எதிர்கொள்ளும் ஏகாந்தம்..


விரவி நாம் ஏற்றும்
கல்வி அகல் விளக்கு,
புற்றீசல் படை போல
புரவியேறி நமை போற்றும்..


அக்னி பிழம்பென
ஒரு சொல் நீ மொழிய,
அமில மழையாய்
அது மாறி நமை
நனைக்கும்...


நன்மை தீமை
நாம் செய்தால் ஒரு முறை,
நாற்புறமும் எதிர் கொள்ளும்
நாளை வரும் நம் தலைமுறை...


பூமராங் புவியிலே,
பூவும் முள்ளும்
சொல்லும் கல்லும்
எரிந்தவரே எடுத்துக் கொள்வர்.

( பி.கு
கணை- அம்பு
ஏகாந்தம் -சொர்க்கம்

விரவி-விரைந்து
புரவி- குதிரை )