எங்கள் நீண்ட நாள் கனவை நினைவாக்கியது,
இந்தியன் ரயில்வே.
நவ ஜோதிர் லிங்கத்தை தரிசிக்க,
ரயிலில் முன்பதிவு செய்துவிட்டு,
உடலையும், உள்ளத்தையும் தூய்மை படுத்திக் கொண்டோம்.
பயணத் தேதி 1/08/2018 . நாங்கள் ராமநாதபுரம் என்பதால்
50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராமேஸ்வரம் சென்று,
ராமநாத சுவாமி தரிசனம் பண்ணி
9 தீர்த்த பாட்டில்கள் வாங்கிக் கொண்டு
ரயில் ஏறினோம்..
முதல் வகுப்பு ஏசி பெட்டி உடலோடு சேர்ந்து உள்ளமும் குதூகலித்தது..
ஆந்திர மாநிலம், "ஸ்ரீசைலம்" சென்று பேருந்துக்கு மாறி,
ஏழு மணிநேர மலை பயணம்..
செல்லும் வழியில், சிறுத்தை ஒன்று கண்ணில் பட,
ஒரு நிமிடம் எகிறியது இதயம்..
அதிகாலை 5 மணிக்கு மல்லிகார்ஜுனாவை தரிசனம் செய்தோம்...
அடுத்து நர்மதை நதிக்கரையில் அமைந்துள்ள
ஓம்காரேஷ்வரர் ஐ நோக்கிய பயணம்,
ஆடி பதினெட்டு நர்மதையில்,
நீராடும் பாக்கியம் பெற்றோம்..
நதி உடலை நினைக்கையில் உள்ளம் சிலிர்த்தது..
சிவனை தரிசிக்கும் தீவிரத்தில்,
பணப்பையை தவற விட்டு, மீண்டும் அது கிடைத்த தருணம்,
அவன் அருளை அன்றே உணர்ந்தேன்.
அடுத்து மாகாளேஸ்வரரை, மனதார வேண்டிக் கொள்ள,
மத்திய பிரதேசம் நோக்கி பயணம்..
அங்குள்ள சிவலிங்கங்களை தொட்டு,
தன் கையால் கொண்டு சென்ற தீர்த்தத்தினால்
அபிஷேகம் செய்யும் பாக்கியம் பெற்றோம்..
அடுத்ததாக குஜராத் மாநிலத்தில் உள்ள சோம்நாத் ஆலயம்,
பழைய மற்றும் புதிய ஆலயம்
கடற்கரையோரம் அமைந்த அற்புதம்..
சோமநாதரை தரிசித்த அசதியில்
அன்றிரவு ரயில் பெட்டியில் அருமையான உறக்கம் அற்புதமான உணவு பல்வேறு மொழிபேசும் மக்களை பார்த்துக்கொண்டே,
அடுத்த நாள் பயணம் பீம் சங்கரை தரிசிக்க சென்றோம்.
குளிரோடு பனியும்,
மழையும் போட்டி போட்டு அடித்து நொறுக்க,
சிவனை காணும் எண்ணத்தில்
அவற்றை அலட்சியப்படுத்தி படியிறங்கி,
மீண்டும் படியிறங்கி, அப்பப்பா.......
நானா இவ்வளவு செய்தேன் என்று எண்ணும் அளவு இருந்தது..
பீம் ஷங்கரை, என் கையால் தொட்ட கணம்,
மனம் கரைந்து, காற்றில் மிதந்தது...
திருக்கம்பேஷ்வர், மற்றும் கிருஷ்நேஷ்வர் ஆலய தரிசனம் முடித்து, திருநாகேஸ்வரம் சென்றோம்...
அங்கே ஒருவர் மட்டும் செல்லும் பள்ளம் ,
மனதில் அச்சத்தோடு உள்ளே இறங்கினால்,
அங்கே சிவன் என்னை இரட்சிக்க
அவர் மீது சிரம் தாழ்த்தி தொட்டு வணங்கி
ஒரு பக்தர் துணையோடு மேலேறி வந்தோம்...
காசி மற்றும் கேதார்நாத் தவிர்த்து,
10 சிவ தலங்களை தரிசித்தது...
நர்மதையின் குளித்தது...
பழக்கப்படாத உணவுகளை உண்டது....
பலதரப்பட்ட மக்களிடம் பழகியது
ரயில் சினேகிதம் கொண்டது....
தவறவிட்ட பணம் திரும்பக் கிடைத்தது...
சிறுத்தையை நேரில் பார்த்தது...
தானே தன் கையால் சிவனுக்கு அபிஷேகம் ஆராதனை பண்ணியது... அனைத்தும் மனதில் அசைபோட, 15 நாள் போனது தெரியாமல் மதுரை வந்து இறங்கினோம்..
தென்னிந்திய கோவில்களை ஒப்பிடும்போது
வெளிப்புற தூய்மை வட இந்திய கோவில்களில் குறைவு,
ஆனால் ஆலயத்திற்குள் சென்று வந்தால்,
நம் மனம் தூய்மை மற்றும் அமைதி அடைவது நிச்சயம், என்று இக்கட்டுரையின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன்.
"சர்வம் சிவமயம்"
K.Umarani karunamoorthy,
Inner wheel club of Ramnad,
321.
PH.No. 9487754727
No comments:
Post a Comment