Sunday, December 13, 2020

முதுமையின் ஏக்கங்களும் தீர்வுகளும்.


முற்றிய கனி போன்ற அனுபவச் சாறு நிறைந்தது முதுமை. 

அதை முழுவதும் பயன்படுத்திக் கொண்டால், 

பலன் நமக்குத்தானன்றி கனிக்கு அன்று என்பதை, 

முழுமையாக உணர்ந்தவர்கள்
முதுமையை போற்றுவர்..

முட்டி முட்டி வெளிவரும் விருட்சமாய், 

ஊரோடும் உறவாடும் போராடி 

நம்மை உயர செய்தவர்களை ஊரில் விட்டு, 

வேலை தேடி வெளிநாடு சென்ற பின்னே, 

வெறிச்சோடி வீட்டில் அவர்கள், விட்டத்தை பார்த்து, 

வீற்றிருக்கும் மனவலி அப்பப்பா...

அதைவிடக் கொடியது,  
ஒரே வீட்டில் ஒரே அறையில் முடங்கி இருப்பது..... 

ஒருவாய் காபிக்கும், 

ஒருவேளை உணவுக்கும் 9 மணி வரை,

 பிறரை எதிர்பார்த்து காத்திருக்கும், 

முதிர்ந்த குழந்தையின், 

எண்ண ஓட்டத்தை எண்ணிப்பார்க்க மனம் வலிக்கிறது...

60  பேர் வந்தாலும் முகம் சுளிக்காமல் 

மூன்று வேளையும் உணவளித்த கைகளும் 

ஆறு கிலோமீட்டரை  அசால்டாக நடந்த கால்களும் 

இன்று வலுவிழந்து அறைக்குள் முடங்கி கிடப்பதை எண்ணி 

முதுமை மூச்சு முட்டி அழுகிறது...

"தனிமை தானே எடுத்தால் இன்பம் தரும், 

பிறர் கொடுத்தால் துன்பம் தரும்"
 
தனிமையை விரட்டும் தானியங்கி தேவதைகள் 👼 தன் பேரப் பிள்ளைகள்... அவர்கள் தாவி வந்து தன் மடி ஏறி,
பழங்கதை சொல்லச் சொல்லி கேட்கையில்,

 தன் தாயை பார்த்ததுபோல், 

தழுதழுத்து போகிறது பெரியவர்கள் மனது...

 மாதம் ஒருமுறையேனும் மகளோ, மகனோ தன்னை வந்து பார்க்க வேண்டி தவிக்கிறது தந்தை மனது... 

தாலாட்டி வளர்த்த தன் பிள்ளை தனக்கு சோறூட்ட சொல்லி துடிக்கிறது தாய் மனது...
சொர்க்கத்தில் நமக்கு தூளி கட்டிய ,
தூய மனம் இன்று துவளுகிறது தனிமை கண்டு...

முதுமை நோய் அல்ல முற்றிய அனுபவத்தின் பெட்டகம் 

அதை என்றும் பேணி காப்பது நமது கடமையாகும்.


Innerwheel competition ku yeluthiyathu.


 உமாராணி கருணாமூர்த்தி

No comments: