Friday, March 31, 2017

அப்பாவிற்கு ஓர் கவிதை

தாய் வழி தமிழை
தந்தை வழி கற்பித்து
தரணியில் நான் உயர‌
வாழ்வனைத்தும் தந்தவரே...

மணமகளாய் நான் மாறி
மறு வீடு சென்ற பின்னே
நீவீர் மனமுடைந்து அழுத சேதி
அக்கா வழி கேட்ட போதும்..

வெள்ளந்தி மனதோடு
வெண்பொங்கல் எடுத்து வந்து
வயிற்று பிள்ளைக்காரி எனக்கு
வாஞ்சையோடு  கொடுத்த போதும்...
உணரவில்லை உம் அன்பை, நீர்
உயிரோடு இருக்கும் வரை.

மழை தரும் மேகமாய்
மனம் கனத்த வேளையில்
அதை சருகாக்கும் சாகசத்தை
சடுதியில் கற்று தந்தவரே,

தாளாத மனதோடு
தாலாட்டு இசைக்கின்றேன்,
தாயாக நான் மாறி
தந்தையே நீ தூங்கு..
மறுபிறவி உண்டென்றால்
மனதார வேண்டுகின்றேன்
மறுபடியும் பிறந்திடுவாய்
மகனாக என் வயிற்றில்.

No comments: