Sunday, August 4, 2024

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்ல குட்டி ❤️..

கண்ணிமைக்கும், 

இரு நொடியில ஈராண்டு முடிந்து,, முத்தாய்ப்பாய் 

மலர்ந்தது, மூன்றாம் ஆண்டு... 


உன் சிங்கார சிரிப்பொலியில் சில்வண்டும் சிலிர்க்கிறது... 


ருத்ராவின் குரலொலியில், ருத்ரவீணையும் வியக்கிறது.. 


உன் இதழ் சிந்தும்  சில வரிகள், இன்ஸ்ட்டாவில் சிக்கியது...


கண்மூடி தீண்டலில், உணர்கிறேன் நான்,, 

உன் உருவில் என் தந்தை... 


மும்மூர்த்திகளின் அருளோடு மூச்சு விடும் ஓவியமே !


நீ  இன்னும் 300 ஆண்டுகள், வளமோடு வாழ வாழ்த்துகிறேன்🥰🥰

         என்றும்          அன்புடன்,

 ராணியாச்சி👑

வாழ்த்துக்கு நன்றி


அன்பு பாசம்  கருணை அக்கறை அனைத்தும் ஒன்றிணைந்த பரிமாணம் காதல். 

விசா இன்றி விண்ணில் மிதந்து, அன்னிய மண்ணில் இறங்கி ,
என் வாட்ஸப் கதவை தட்டியது உங்கள் காதல் .

வரலாரும் கண்டிடாத வாஞ்சை மிகு வார்த்தைகள் வாழ்த்து வடிவில்...

இத்தனை மனிதர்களை எனகளித்த இறைவனுக்கு தான், 
என் மீது எத்துணை காதல் ❤️.

நினைக்கையில்,
இதயம் நிறைந்து,
விழியில் கறைந்தது,
ஆனந்த கண்ணீராய் 😇,

வானவில்லின் 🌈
வண்ணத்தை கடன் வாங்கி, உங்கள் வாழ்த்துக்கு,
நன்றி வரைகிறேன்🙏.
என்றும் அன்புடன்,
 உமாராணி 
கருணாமூர்த்தி*

கர்மா

Saturday, August 3, 2024

நட்பிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐



தங்கத் தலைவி, உன் வளையத்தில்,

சங்கத் தலைவியாய்,

என்னை இணைத்த இறையருளுக்கு, இணையில்லை... மகிழ்கிறேன் நான் உன்னை பெற்றதற்கு😊 


நம் முதல் சந்திப்பிலேயே, என்னுள் முற்பிறவி நினைவலைகள்... 


முகம் பாரா நட்பு கொண்ட, கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார் நாமிருவர் தானோ வென்று❤️❤️


கோஹினூர் வைரமும் வணங்கி வழிவிடும், கோல இளமையில் உன் குளிர் முக புன்னகையில்... 


பெண்ணை பெறுவதற்கே, பெருந்தவம் செய்திட வேண்டுமெனில்,

பேசும் பதுமை உன்னை பெற்றிட, 

உன் தாய் என்ன வரம் பெற்றாரோ?? 


 திரு. நடராஜர் கரம் கோர்த்த நலம் கொண்ட நாயகியே, 

நீ நானிலம் புகழ, நல்வாழ்வு தினம் வாழ, 

நல் இதயத்தோடு வாழ்த்துகிறேன்🍫 


"வாழ்க வளமுடன்" 

      மாறா நட்புடன்,

 உமாராணி கருணாமூர்த்தி ❤️

Wednesday, October 11, 2023

 


 


 


 


ஆண் தேவதை

எழில் கொஞ்சும் அழகோடு, 

எட்டு அழகிய பெண் தேவதைகள் , 

ஏற்கனவே என் வீட்டில்..


அவர்களோடு   

அணி சேர, 

எம்பிரான் ஈசன் அருளோடு, 

எட்டுத்திக்கும் எதிரொளிக்க, 

எல்லோரா குகை ஓவியமாய், 

எட்டு வைத்து இணைந்தது,

 இன்று ஒரு அழகிய ஆண் தேவதை 🤴👩‍🍼. ( 24/06/23 )

வாழ்த்துக்கள் ஆதிக்.

 ஆதி சிவன் அருளோடு, 

ஆதிக் என்னும் பெயரோடு 

அழகிய பூ🌹 ஒன்று மலர்ந்து 

மாதம் 36 ஆனது.... 


அதை காணும் ஆவலில் 

ஆங்காங்கிருந்து 

அழகிய பட்டாம்பூச்சிகளின் 

அணிவகுப்பு....

 

10 நிமிடத்தில் அரங்கேறியது, 

பளபளக்கும் பானி பூரி🧆,

 பக்கத்தில் சமோசா, 

இரண்டுக்கும் இடையே, 

நீயா, நானா என்ற போட்டி... 


நடுவர் என்ற கர்வத்தோடு நாமெல்லாம்..🤣🤣, 


பார்க்கும் பொழுதே சுவை நா ( நாக்கு) உணர 

போட்டி டிரா வில் முடிந்தது..


அடுத்ததாக அரங்கத்தை அலங்கரித்தது, 

கேக் வெட்டும் படலம்.... 

பஞ்சு போன்ற கேக்கின் சுவை 😋, அப்பப்பா.. 

பண்ணி கொடுத்த மெர்லின் விரலுக்கு 

பத்து மோதிரங்கள் பரிசளிக்கவும்.. 


 Newbury வந்த முதல் நாள் தயக்கம், 

இன்று முற்றிலும் போனது என்னை விட்டு, 

எல்லோரும் என் பிள்ளைகளாய்...

என் தோழர்களாய்..


நித்யா, 

சுனிதா, 

உமா, 

சுவாதி,

ரம்யா, 

லதா,

சிந்து,

ஜாய்,

அமலா  இவர்களோடு இருக்கையில், 

20 வயது குறைந்தது போல் ஒரு குதூகலம் என் மனதில்..


நேற்று தமிழ் பள்ளி விழாவில் 

ஒரு குழந்தை பாடிய " இளமை திரும்புதே" என்னும் பாடல் 

இரவெல்லாம் எனக்குள் 

ரீங்காரித்துக் கொண்டிருந்தது..


Joy debin  இசையோடு, 

நடனமும் நம் கண்ணுக்கு விருந்தாக, 

இரவு உணவோடு, விடைபெற்றோம், 

வீடு செல்ல மனமின்றி...


இந்த அழகிய தருணத்தை ஏற்படுத்திக் கொடுத்த 

ஆதிக் மற்றும் பிரபு , அமலாவிற்கு 

மனமார்ந்த வாழ்த்துக்கள்💐 

                               அன்புடன்,        

                              உமாராணி கருணாமூர்த்தி

சந்திரயான்3.

 கவிஞரின் கற்பனையில் 

உலா வந்த நிலாவில், 

இன்று வலம் வருகிறது  சந்திரயான்3.

                ----------------------------

அந்நிய தேசமே அதிசயத்து பார்க்கிறது,

நிலவில் பதிந்த, 

அசோகச் சக்ராவின் 

அழகிய தோற்றத்தை.


              ------------------------------

சாதித்த தமிழர்களின் இனம் என்ற  கர்வம், 

தரையிறங்கிய பின் தான் தோன்றியது,

இது தமிழரின் தனி முயற்சியல்ல, 

இந்தியரின் கூட்டு முயற்சி என்று.

K. உமாராணி

வியப்பூட்டும் விமான பயணம்..

 


எண்ணம் பல என்னுள் எதிரொலிக்க, 

இங்கிலாந்து நோக்கி என் பயணம்... 


பறந்து விரிந்த தரை தளத்தில்,

 தானியங்கி

பறவை கூட்டம்...


இயக்கிடும் இறைவனாய், 

ஆங்காங்கே பைலட்டுகள்... 


இன்முக தேவதைகளின், 

இனிய விருந்தோம்பல்... 


இறுக்கி கட்டிய இருக்கை பட்டியோடு,

இரண்டு நிமிட அறிவிப்பை தாண்டி, 

இலகுவாகப் பறந்தது இயந்திரப் பறவை🛫.. 


ஈர்ப்பு விசைக்கு எதிரான எதிர் விசை... 

எண்ணி எண்ணி வியந்தேன்   

ரைட் சகோதரர்கள் அறிவு எண்ணி.... 


மிதந்திடும் மேகங்களோடு☁️☁️

மோகம் கொண்டு, இணையாக மிதந்தது

இயந்திரப் பறவை✈️.. 


என் பரந்த விழிகள் கீழே  நோக்க, 

என் காலடியில் பூலோக சொர்க்கம்... 


காதுகள் சற்றே அடைக்க,

மிடறு விழுங்கியே,

இறை உணர்ந்தேன், 

இரண்டொரு நிமிடம்... 


இறக்கைகள் 

இரண்டும் காற்றைக் கிழித்து, 

என் இதய கவலை கழித்தது...


சில,பல மணித்துளியில்,

ஓடுகளம் தாண்டி, விமானம்

தரை தொட, 


பாதுகாப்பு சோதனையில் நடந்த,

 "பாஷை" போராட்டத்தில், 

பாதி வெற்றியோடு,

 பத்திரமாக வெளியேறினேன்💪


பிள்ளைகளை பார்க்க போகும்,

பரவச மனதோடு😇


சிந்தை தெளிந்தது

பற்று வைத்த பலனால், பித்து பிடித்தலைந்தேன்...

சித்தம் தெளிந்த சிறு கணம் ,

சிந்தையில் உதிர்த்த சில வரிகள்..


உயிர் என்றெண்ணிய உறவுகளே, 

உன்னை விட்டு விலகிய பிறகு,

 விலகிடும்  எதுவும் உனக்கானதல்ல.


ஆழம் விழுதுகள் என்றும் 

அதன் வேரினை தாங்கியதுமில்லை 

அதை எண்ணி வேர்கள் அழுததும் இல்லை..


உன்னை வேண்டாம் என உதறிய உறவுகளிடம், 

பகை என்னும் பற்றெதற்கு??

உணர்ந்து விலகிடு, 

விண்ணுக்கும் மண்ணுக்கு 

இடையிருக்கும் இடைவெளியாய், 

நிம்மதி நிச்சயம்..


 K.Umarani .

எண்ணம்

 எண்ணம் சொல்லாகும்..

சொல் செயலாகும்.. 

செயல் கர்மவினையாகும்.. 

கர்மவினை,

நம் எண்ணம், சொல்,

செயல்களை பொறுத்து உருவாகும்..

எண்ணத்தை எளிதாக்கி, 

மனதால் மகிழ்ந்திருப்போம்.

    K.Umarani

வார்த்தையின் வசியம்.

 உன்னிலிருந்து வெளியேறும், 

ஒவ்வொன்றும் கழிவுகளே, 

ஒன்றைத் தவிர...


நல்லெண்ணத்தோடு,

 நறுமண வார்த்தை,

நீ உதிர்க்க, 

அந்த ஒற்றைச் சொல்லில், 

ஒருவரின் ஓய்ந்த மனம்,

ஓரளவு மூச்சு விடும்... 


கவலைகள், சற்றே கரை ஒதுங்கும்... 

கண்ணீர் கூட கணநேரம் ஓய்வெடுக்கும்.. 

நீ விதைத்த நம்பிக்கை,

 நரம்புகளில் துளையிட்டு, 

நாளங்களில் இசை பாடும்... 


இதயம் இளகி புத்துணர்வு புதுப்பிக்கும்..

இறுதியில் நீயே அங்கு இறைவனாவாய்.🙏

    K.Umarani

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சஹானா🍫

 நீரும் நீ, 

நெருப்பும் நீ , நிதானமாய் கையாண்டால் குளிரும் பனியும் நீ. ... 


வெளிச்சப் பூவும் நீ, வெள்ளி நீரோடை நீ, 

உன்னை வெறுப்பேற்றுபவருக்கு, 

வேரருக்கும் புயலும் நீ. ... 


தேரினை அலங்கரிக்கும் தேன்மலர் நீ,

அந்த தேரில் கொலுவிருக்கும்,

தெய்வமும் நீ. ...


குலதெய்வ அருளால் என் மடியில் சேயும் நீ, 

குழப்பம் என நான் வந்தால், 

அதைக் குன்றில் ஏறி தகர்க்கும் தாயும் நீ. ...


நீண்ட வளங்கள் பெற்று நீடூடி வாழ 

அந்த குன்றத்து முருகனை வேண்டுகிறேன்🙏.


அன்புள்ள அம்மா🥰,( 17/08/23 )



Thursday, March 9, 2023

நான் படித்த பட்டம்..





உமாராணி என்ற என் பெயருக்கு பின்னால், 

கவிதாயினி என்று போட்டவர்கள்,

நான் படித்த பட்டத்தை ஏன் போடவில்லை தெரியுமா?? 


அதை போட்டால் இன்விடேஷனில் இடம் இருக்காது என்பதனால்.

என் படிப்பை பற்றி இங்கு சொல்கிறேன் 📢..


பள்ளிப்படிப்பை முடித்த நான் பட்டம் படிக்க முயற்சித்தேன்..


வாழ்க்கை பாடம் வாசிக்க, 

வளர்த்தவர்கள் வாதிடவே, 

வளைந்து கொடுத்தேன் 

அன்னையின் வார்த்தைக்கு ..


அன்று முதல் படிக்கத் தொடங்கினேன்.. 


அடுத்தவர் எழுதி அச்சிட்ட வார்த்தைகளை அல்ல.. 


அனுபவம் கற்றுக் கொடுத்த வாழ்க்கையினை..


மணாளனிடம் மங்கையானேன்.. 

என் மகளிடமே மழலையானேன்... 

சொந்தங்களை ,

சேர்த்து சேர்த்து சோர்ந்து போனேன்... 


இன்று நட்புக்களின் தயவால் நிமிர்ந்து நின்றேன்... 


எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும் 

ஓராயிரம் பாடங்கள்... 


2000 வரை பூட்டிய வீட்டிற்குள் 

இன்னொரு நீலாம்பரியானேன்..😀 


2001ல் அழகு கலை கற்க, அடி எடுத்து வைத்தேன்,

 அடுத்தடுத்து அழகிய நிகழ்வுகள்..


தொலைதூரக் கல்வியில்,

 தமிழ் என்னை அரவணைக்க, 

அங்கும் கொஞ்சம் தமிழ் படித்தேன்... 


அதன் விளைவோ என்னவோ.. 

 தமிழரசி அன்னையின் ,

அருள் கரம் என்னை அணைத்துக் கொள்ள

என் அணுக்களில், 

அவரது அதிர்வலைகள்..



அதன்பின்னே மனிதம் படித்தேன்.. 


மானுட மனதின் கருணை படித்தேன்... 


கயவனை அவன் கண் கொண்டே படித்தேன்.. 


ஏழையிடம் எளிமை படித்தேன்.. 


ஏங்கும் மனதின் ஏக்கம் படித்தேன், 

அதை தேற்றும் 

வழியும் படித்தேன்... 


வார்த்தைகள் கொண்டு, 

பிறரை வாழ வைக்கும் 

வித்தையும் படித்தேன்.. 


இவை அனைத்தையும் அருளிய 

வித்யா தேவியின் பரிவோடு,

 என் தோழி வித்யா பிரியதர்ஷினியின்

 நட்பையும் படித்தேன்.❤️ என்று உரைத்து 

நன்றி கூறி நகர்கிறேன்🙏

 உமாராணி கருணா மூர்த்தி

கனவு மெய்ப்படவில்லை


எண்ணத்து எதிரொளியை,

வண்ணத் தூரிகையால்,


கனவில் நான் வரைந்த, கரிசல் காட்டு ஓவியம்.. 


பல்லவன் பேருந்தில், 

படிக்கட்டு ஓரத்தில்... 


பார்த்து மகிழ்ந்து, பக்கத்தில் செல்கையில், 


காற்றில் பறந்தது,

கள்ளச் சிரிப்புடன்.. 😞.


 க.உமாராணி

பெண்மையின் மகத்துவம்



சிற்றுளியால் ,

சிந்தை செதுக்கி, 

சீர் பட்ட நினைவில் 

உன்னை தேரினில் ஏற்று... 


தேன்மலர் சொல்லெடுத்து, 

அகிலத்தில் அன்பு தேனூட்டு, 


தேம்புகின்ற இதயத்தை 

இறைவியாகி தாலாட்டு. 


இளவேனிற் காற்றாகி.... 


இதம் தரும் பாட்டாகி... 


பகலவன் ஒளியாகி...


குளிர்ந்திடும் நிலவாகி, 


நித்தம் தெளிவாகு, 

நெருப்பில் பூக்கும் பூவாகி, 


அமுதூடூட்டும் 

உமையம்மை தாயே ! 


அசுரனை அழித்த , 

ஆதி சக்தியும் நீயே...


நிலம் கிழித்தும் நீர் கொடுக்கும் 

புவிப் பெண்ணே ! 


அகிலம் கொடுக்கும் அழுத்தத்தை, 

அணுவென உடைத்து வெளியேறு, 


நெருப்பில் பிறந்த திரௌபதியாய், 

நித்தமும் மெருகேறு....




அன்புடன், உமாராணி கருணா மூர்த்தி

Tuesday, February 28, 2023

மௌனம்



தமிழுக்கு நிகரான 

தலைசிறந்த ஒரே  மொழி மெளனம்... 


மணிப்பொழுது பேசி 

விளங்கா வாக்கியம், 

கணநேரத்தில் விளக்கிடும் 

வித்தை மௌனம்... 


உறவுகளை இழுத்துக்கட்டும் 

மந்திர கயிறு மௌனம்... 


வீணர்களின் விதண்டாவாதத்தை 

விண்டு தகர்த்திடும் 

ஒற்றை நாண் 🏹 மௌனம்.. 


ஆழ்கடல் அமைதியை 

அடி நெஞ்சில் தேக்கியே 

ஆன்ம ஞானம் அளித்திடும் மௌனம்... 


நம் ஆன்மாவுடன், 

நாம் பேசும் ஒரே பாஷை மௌனம்.. 


ஓம்கார ஈசரோ, 

உலகளந்த நாதரோ,

அல்லா தூதுவரோ, 

ஆண்டவர் இயேசுவோ  

அனைவரையும் உருக்கும் ஒரே மொழி,

அன்போடு நாம் பேசும் மௌன மொழி 🙏.


அன்புடன் க.உமாராணி

கனவு மெய்ப்படவில்லை

எண்ணத்து எதிரொளியை,

வண்ணத் தூரிகையால்,


கனவில் நான் வரைந்த, 

கரிசல் காட்டு ஓவியம்.. 


பல்லவன் பேருந்தில், 

படிக்கட்டு ஓரத்தில்... 


பார்த்து மகிழ்ந்து, 

பக்கத்தில் செல்கையில், 


காற்றில் பறந்தது,

கள்ளச் சிரிப்புடன்.. 😞.


 க.உமாராணி

சதுரங்கம்.

 என் வாழ்க்கை என்னும் சதுரங்கத்தில், 

படைத்தவன், பல வருடமாக 

பகடை ஆடிக் கொண்டிருக்கிறார்.


👨மன கூட்டல்(+) கழித்தல்(-) 

விகிதமறியா வினைப் பயனால்,  

விழிப்புற்ற நிலையிலும், 

அவனிடம் தோற்கின்றேன்.

       K.Umarani

வலி

எட்டி உதைக்க கால்கள் வேண்டாம் 

எலும்பில்லா நாக்கு போதும்...



மனம் வருடும் வார்த்தையெல்லாம், 

உன்னை மகிழ்வூட்டும் போது, 

வலிதரும் வார்த்தை  

ஏன் உன்னை வலிமையாக்காது?

 க.உமாராணி

ஐம்பதில் வரும் காதல்

 ஐம்பதில் வரும் காதல், 

அழகினால் வருவதில்லை.... 

ஆசையினால் வருவதில்லை...

 காமத்தினால் வருவதில்லை... 

அதிகாலைக் கனவினாலும் வருவதில்லை...

 கன்றிப்போன  அவள் மனதில், 

நான் ஒளடதம் தடவியதால்,

அவள் தடம் பதித்தாள் என்னுள்..

இது நட்பா காதலா??

 பட்டிமன்றம் வைத்தாலும் 

விளங்கிடாத உறவிது... 

வாழ்வின் எல்லை வரை 

விலகிடாது தொடர்ந்திடும் .🙏

ஈவுத்தொகை

காதலில் ஈர்ப்பு விகிதம், 

ஈக்குவலாக ( = ) இருந்தால்தான்

 ஈவுத்தொகை,( success ) 

மீதமின்றி கிடைக்கும்...

 

விளக்கம் 

Love பண்ற இருவருக்கும், அன்பு ஒரே அளவில் இருந்தால் தான் love சக்சஸ் ஆகும்.

Wednesday, December 14, 2022

அன்னை நினைவு நாள்..🙏

 தன்னம்பிக்கையை 

எனக்கு தாரை வார்த்து, 

தரணியில் தனித்து போராட, 

என் எதிரே நின்று வழி காட்டும், 

அரூப சுந்தரிக்கு இன்று நினைவு நாள்..🙏


உன் ஊண் விடுத்து, 

உயிர் பிரிந்தாலும், 

உழளுகிறாய் என்னுள் 

எல்லாமுமாய்..



ஆண்டவனை காண 

ஆலயம் செல்லுகையில், 

அனிச்சையாய் மனம், 

அன்னை முகம் காண 

அங்கலாய்கிறது ...


தாயே! 

உன் விழியால், 

ஒருவர் வாழ்வு 

ஒளி வீசும் இவ்வேளை வரை, 

உன் மரணம் இன்னும் நிச்சயிக்கப்படவில்லை,

வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறாய் 

யாரோ ஒருவருக்கு வழிகாட்டியாய்.


அன்னை நினைவோடு ,

அன்பு மகள் உமாராணி

சிறந்த பெண்மணி

 மனம் கவர்ந்த மங்கை


சாதனைப் பெண்கள் சிலர் பற்றி படித்ததுண்டு.. 

பலரை வாழ்வில் பார்த்ததுண்டு, 

ஆனால் நான் வாழ்ந்து பார்த்து அதிசயத்த பெண், என் அன்னையே. 


1939 ல், ஆகாயத்தாமரை ஒன்று மண்ணில் தோன்றிய தருணம், நாடே வெள்ளையனிடம் அடிமைப்பட்டு கிடந்த போது, அடித்தட்டு வர்க்கத்தில் முதல் பெண்ணாகப் பிறப்பெடுத்தார்..

பெற்றோரின் புரிதல் இன்றி பிறந்ததால், அடுத்தடுத்து நான்கு சகோதரர்கள். 


பாலப்பருவம் குடும்ப பாரம் சுமந்தே கரைந்தது...


ஒரு கை மாவாட்ட மறு கையில் புத்தகம்... மனப்பாடம் செய்தது அவர் மனம்... 

 

சேவை மனதோடு "செவிலியர்" துறையில் சேர்ந்து மனிதாபி மானத்தை மடியில் கட்டினார்... 


நான்கு பிள்ளைகளின் தலைமகள், தன்னை நம்பி வந்த நோயாளிகளின், "மலைமகள்" ஆனாள்.. 


அவள் கனிவான பேச்சில் கால்வாசியும், கண்டிப்பான கவனிப்பில் முக்கால்வாசியும், 

நலம் பெற்றனர்..


அன்னையின் அன்பிலும், அழகிலும் மயங்கி அவர் கரம் பிடித்து, இல்வாழ்க்கை தொடங்கிய என் தந்தையின் தயவால் பிறந்து, வானத்தில் பறந்தோமே தவிர, அவர் வறுமையை நாங்கள் உணரவில்லை.. மன்னிக்கவும், 

அவர்கள் எங்களுக்கு உணர்த்தவில்லை.


வேலை நிமிர்த்தமாக , தந்தை வெளியூர் சென்றதனால், தன்னந்தனியாக எங்களை வளர்க்க அவள் செய்த தியாகம் சொல்லில் அடங்காது.. 


அதிகாலை சூரியன் கூட ஆறு மணிக்கு தான் உதிக்கும், ஆனால் அன்னையோ, 

நாலு மணிக்கே உழைப்பை தொடங்குவார்..


ஒற்றை மகளை வளர்க்கவே இன்று பலர் மயங்கி நிற்கையில்.... 

அன்று அசால்ட்டாக நால்வரை வளர்த்து ஆளாக்கியவர் என் அன்னை.. தன்னுடைய வாழ்வையே எங்களுக்கு வளமாக வழங்கிய வள்ளல் அவள்...


எத்தனையோ முறை விழுந்து எலும்பு முறிந்தாலும், ஏன் இந்த வாழ்க்கை என்று எள் அளவும் எண்ணாது, எழுந்து நின்று எதிர்கொண்ட இரும்பு பெண்மணி 

என் தந்தை மறைந்த பின், முதுமை அவளை அணைத்து கொள்ள முடங்கியது முழு நிலவொன்று வீட்டிற்குள்... 


அதுவரை விண்மீன்களாய் சிறகடித்த எங்கள் பார்வை, அன்றுதான் விழுந்தது அவர் மேல்.. 


அன்னை என்னும் புத்தகத்தை படிக்கத் தொடங்கினோம்..

 

அந்த நொடியில் அவள் வறுமை உணர்ந்தோம்.. 

படிக்க வேண்டும் என்ற வெறி அறிந்தோம்.... 

 சகோதரம் போற்றிய தன்மை யறிந்தோம்... 


கனிவும் கண்டிப்பும் சேர்ந்த செவிலித்தாய் கண்டோம்... 


தனித்து என்னை வளர்த்த தன்னம்பிக்கை அறிந்தோம்... 

நான் தாயாகும் வரை தெரியாத என் தாயின் தாய்மை உணர்ந்தோம்...

 இத்தனையும் அறிந்து அவர் அருகே செல்லுகையில், 

எங்கள் வீட்டு அகல்விளக்கு அணைந்து, ஆகாய தீபம் ஆனது😭

23/11/2021 ல் அவர் உயிர் பிரிந்ததாக சொன்னார்கள் ..

ஆனால் கண் தானம் செய்து அவர் விழி வழியே யாரோ ஒருவர் இன்னும் இவ்வுலகில் வாழ்கிறார்கள் என்று நினைக்கும் போது, என் அன்னை இன்னும் மரிக்கவில்லை என்று மனதை தேற்றிக் கொண்டேன்...


ஏழ்மையில் பிறந்து, சகோதரருக்கு ஏணியாகி , ஏழை மக்களின் வலி நிவாரணையாகி தனித்துப் போராடி,

இரும்பு பெண் மணியாய்  எட்டா உயரத்தில் எங்களை வைத்த, மனம் கவர்ந்த மங்கை  மறு பிறவியில் என் மகளாக வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்🙏


                                              அன்புடன், 

                                                            உமாராணி கருணாமூர்த்தி


INNER WHEEL CLUB STATE LEVEL COMPETITION LA WIN PANNINA KAVITHAI.

Tuesday, July 26, 2022

Monday, July 4, 2022

Ramyapriya பதவியேற்பு விழா...

 பார்த்து பார்த்து செதுக்கிய 

பதவியேற்பு விழா...


 பட்டு பீதாம்பரத்தில் 

பவளங்களாய் பார்வையாளர்கள்..


பார்வை பறிக்கும் வைரமாய், 

விழா நாயகி... 


சிரிப்பு மழை பொழிந்த 

சிறப்புப் பேச்சாளர்...


இன்னும் சில மணித்துளிகள் 

சிறைப்பிடித்து இருக்கலாம் என்ற ஆசையுடன்.

அவர்தம் சிறையில் சிக்கிய 

சிறு பறவையாய் நாங்கள்..


உணவின் மணமும், நட்பின் மனமும் 

நாவில் பட்டு மனம் நிறைந்தது...


கூட்டிக் கழித்து, பெருக்கி 🔍 பார்த்தாலும், 

குண்டூசி முனை அளவு,  


குறை கூட தெரியவில்லை.💐

 

Happy (50)Birthday Dhinesh

கருணையைக் கண்ணிலும், 

கண்ணியத்தைப் பேச்சிலும் கொண்டு, 

ஜகம் ஆளப்பிறந்த ஜெகநாத புத்திரனுக்கு 

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்💐


அருணன்  அம்மாவிடம் பிரியத்தை அடகு வைத்தே... 

அன்பு கணை கொண்டு 

அகிலத்தில் போர்தொடுக்க.. 

போர்க்களமும் உனக்கு பூக்களமாய் மாறியது, 


நட்பின் இலக்கணத்தை நங்கூரமிட்டு, 

அகராதியில் நம் பெயர் பொறித்த

பொன்விழா நாயகனே !


சூழ்நிலை உன்னை சுழற்றி அடித்தாலும், 

சுற்றம் உன்னை சுருக்கிட்டு இழுத்தாலும், 

சோர்வுற்று சுருண்டிடாது 

சொல்லில் மெல்லினமும்,

 நெஞ்சில் வல்லினமும், 

வழிந்தோட... 

வரும் நாட்களிலும், 

வரலாறு பல படைத்து 

வாழும் கலை வளர்க்க,


உன் மணையாளே 

மனமுவந்து ஏற்றுக்கொண்ட,

உன் மகத்தான தோழி "நான்" 

என்ற மமதையில் வாழ்த்துகிறேன்.💐


என்றும் மாறா நட்புடன், உமாராணி


Monday, June 20, 2022

பேசு அல்லது பேச விடு.

வறண்ட மனதில் வண்ணம் தீட்டிய 

என் வைர தூரிகையே ❤..


நீ என் வாழ்வில் வந்தது வரமா?

 வாராது போனது பெரும் சாபமா??


சாலை எங்கும் உன் பிம்பம் 

காட்சிப்பிழையாய் 

கலங்கிய கண்ணுக்குள்...

 


உறவிருந்தும் உரிமையின்றி போனதால்,

 உயிரோடிருந்தும் ,

என் உடல் நடைபிணம் ஆகிறதே... 


உணர்வுக்கு உயிர் ஊட்ட 

உரசி சொல்லும் 

உன் ஒற்றைச்சொல் போதும்...


உயிரோடு தீ மூட்ட 

ஊமையான உன் மௌனமே போதும்....


 தேர்ந்தெடுக்கும் தகுதி 

தேனமுதே உன் கையில்.


ஓராயிரம் வார்த்தைகள் 

ஒருபோதும் வேண்டவில்லை,


பேதை மனம் பேதலிக்கும் முன்னை,

என் பெயர் அழைத்து, 

ஒற்றைச்சொல் பேசிவிடு..... 

அல்லது ஒருமுறை பேசவிடு 🙏


                      அன்பு மட்டுமே எதிர்பார்க்கும்

                                    #உமாராணி#

Thursday, May 26, 2022

Feelings

 உணர்வுகள் வெட்டப்பட்ட,

 ஒவ்வொரு தருணமும், 

ஓசையின்றி அழுத மனம், 

கடைசியில் இன்று கல்லாகிப் போனது.

 # K.Umarani #


மன்னிப்பு,

ஒரு மனம் திறக்கும் மந்திர சாவி 🔑, 

கேட்பவருக்கும், அளிப்பவருக்கும்...

அது ஏழைகளுக்கு (மனதளவில்) 

அவ்வளவு எளிதில் கிடைத்திடாது.

 #K.Umarani #


உன்னை விரும்பிய இதயம், 

விண்டு போனால், 

உனக்கு விழும் ஒவ்வொரு அடியும்

 அய்யனாரின் வீச்சரிவாளை விட 

வலிமையானது.

 #K.Umarani #


நட்பு 🪷 

உறையும் தனிமையை எரிக்கும் 🔥🔥.. 

எரிக்கும் கவலையை அணைக்கும்🌧️🌧️

# K. Umarani 

Wednesday, September 1, 2021

தாய் பாலின் மகத்துவம்.

 
தாய் வழி பிள்ளைக்கு
தானாக தேனாக‌
தங்க பஸ்பமாக‌
ஊணாக உயிராக‌
இரத்தமெல்லாம் பாலாக‌
பாசத்தின் உச்சமாக‌
பாலூட்டும் போழ்தினிலே
பாவையரெல்லாம்
பாரினிலே
பரமனை விட உயர்ந்து விட்டோம்....

பிள்ளை கனியமுதை
அள்ளி அணைத்து
அமுதூட்டும் நேரமெல்லாம்
அதனோடு கை கோர்த்து
துளியூண்டு பசி போகும்
மலையளவு பாசமேவும்...

நோய்க்கு விடை சொல்லும்
நோய் எதிர்ப்பு திரவம்
தினம் தினம் தாய் தரும்
தாய் பாலின் வடிவம்...
தாய்மையின் புனிதத்தை
தானாக நிறுத்திடாது
தாராளமாக கொடுத்திடுக‌
கொஞ்சும் குழவி வளரும் வரை.
உன்னை என்னை உலகறிய,

அன்னை ஊட்டிய அமுத உணவு,
ஆறு மாதம் தாண்டினால்,
ஆயுள் வரை தொடரும்
உடல் அஸ்திவாரக் கனவு...

தாய்ப்பால் ஊட்டும் மாந்தருக்கு,
தாமதமாக கூட வராது 

மார்பகப்புற்று,இதை மனதில் ஏற்றி
தாய்ப்பால் புகட்டிடுவோம்.
தாய்மையை போற்றிடுவோம் .
            

                  வாழ்க வளமுடன் .



 

#Rtn. UMARANI KARUNAMOORTHY#

ID:11065356

Rotary club of Ramnad,Ramnad 3212.

தாண்டிக்குடி வேல் ஃபார்ம் ஹவுஸ்

 
6 மணிக்கு தொடங்கிய அழகிய பயணம்,
6 மணி நேரம் தாண்டி, 

கால் வைத்தோம் தாண்டிக்குடியில் ..

அடர்ந்த காட்டுக்குள், 

அழகிய குடில் ஒன்று..

 குயிலின் இசையோடு, 

குரங்குகளின் ஆட்டம், 

குதூகலித்தது மனம் ...

உடலோடு உள்ளமும் குளிர, 

குட்டி நடைபோட்டு 

சுற்றி வந்தோம் பொடிநடையாய்..
அட்டைகளின் முத்தமழையில் 

ஆங்காங்கே காலில் ரத்த கோலம்..

அரை வயிற்று உணவு 

ஆயுளுக்கு நன்று, 

அங்குள்ள உணவோ 

ஆயுளுக்கே நன்று,
அகம் மகிழ இசையோடு 

அத்தனை சுவை நாவிற்கு...

நான்கடி நடந்தால் 

நளினமாய் ஒரு நீர்வீழ்ச்சி, 

வீழுகின்ற அழகிலே, 

விழுந்தது என் மனம் ,
விழியில் தெறித்தது சாரல்,
மேனி நனைத்தது சிறு தூறல்..

இன்னிசையோடு
இரவின் பனிமூட்டம், 

அதை விரட்ட
போடப்பட்டது நெருப்பு மூட்டம்..
ஆட்டம் பாட்டத்தோடு 

அன்றிரவு அடித்துப் போட்ட தூக்கம்..

மறுநாள் 

பாலமுருகன் பாதம் பணிந்தே 

பாதி மனதோடு பயணம் முடித்தோம்.

       #உமாராணி#

வாராயோ கண்ணா.

யசோதைக்கு மகனாகி,

யாதவர்களுக்கு வரமாகி,
பூதகிக்கு எமன் ஆகி,
எனக்கு எல்லாமும் ஆன 

கண்ணனே❤️

உன் கான குழலொலியில்
ஆவினமே🐑 அதிசயித்து, 

போதை கொள்கையில், 

இம் மானிடரின் மயக்கத்தை 

மாயன்  நீ அறியாயோ??

காரிகை என்நெஞ்சில் 

காதல் பெருகி,

கை வழியே கவிதையாய் வழிவதை, 

கார்முகிலோன் கண்கள் 

அறிந்திலையோ???

பாற்கடலில் பள்ளிகொண்ட 

பரந்தாமா !
உன் பாதம் வரைந்தே,

 பாதை நான் பார்த்திருக்க, 

பாரிஜாத மனம் வாடும் முன்னே, 

பல்லக்கிலேறி, வா கண்ணா❤️ 

       #உமாராணி#

Monday, August 16, 2021

"யாரை வெல்வீர் "


      
"யாரை வெல்வீர் "
மருத்துவ மணிமகுடம்
 திரு.ஜோசப் ராஜன் அவர்கள்,
எனக்கு அளித்த
மகத்தான தலைப்பு..

அகத்தோடு அகம் பேசி,
ஆத்மார்த்த சேவையில்,
அன்னை தெரசாவின்  " அன்பை "க் கூட,
ஆதியோகியின் அருளோடு
யாம் வெல்வோம்..

மண்ணுயிர் காக்க,
நுண்ணுயிரோடு போராடும்,
மருத்துவருக்கு சிரம் தாழ்த்தி,
மனித மனதின், மக்கிய " மமதையை "
யாம் வெல்வோம்..

தேனூறும் சொல்லில்
தெளிவாய் பேசியே,
காயம் கண்ட மனதை ,
" கருணையால் "
யாம் வெல்வோம்..

தட்டுத்தடுமாறி ,தன்னம்பிக்கை
தலைதூக்குகையில்,
தட்டிவிடும் " தயக்கத்தை "
தயங்காது
யாம் வெல்வோம்...

கண்ணன் உணர்வோடு,
கண்ணில் கருணையும்,
நெஞ்சில் தாய்மையும் வழிந்தோட,
காதலை தாண்டிய
" காமத்தை "
யாம் வெல்வோம்..
       
       அன்புடன்,
       உமாராணி கருணாமூர்த்தி.

Thursday, July 1, 2021

மார்பகப்புற்று .

 
சுயபரிசோதனை சுழற்சியில், 

நாமே மருத்துவராவோம் ,
மாதம் ஒருநாள்.. 

மருத்துவரை தோழியாக்குவோம் ,
வருடம் ஒருநாள்...

இதில்
தயங்கவோ, தவிர்க்கவோ 

தேவையில்லை..
பெற்ற பிள்ளைக்கு 

பால் ஊட்டும் பெண் கண்டு, 

பத்தடி பதுங்கி நிற்கும் 

மார்பகப்புற்று,,

தாய்ப்பால் ஊட்டிய தாய் மார்க்கு,

 தாமதமாக கூட வராது அதன் தொற்று..
மழலை மார்பு பற்றிட ,
புற்றின் வாய்ப்பும் அற்றிடும்.

அதையும் தாண்டி அருகில் வந்தால், 

அதற்கு வைத்திடுவோம் ஒரு முற்று.

    அன்புத்தோழி ,   உமாராணி கருணாமூர்த்தி

 

Innerwheel club of Ramnad kaha eluthiyathu.

Tuesday, May 11, 2021

வாசிப்பை சுவாசிப்போம் .


 
ஓலைச்சுவடி தொடங்கி, 

ஒளிநாடா வரை, 

இன்று புத்துயிர் பெற்றது, 

புத்தகத்தின் பரிணாமம்..

அகச்சுத்தம், அறிவுப்பசி, 

அடுக்கி வைத்த புத்தகமே ,

எனது ஆகாரம்...

கரிகாலன் கல்லணையும், 

ஆத்தங்குடி கல் வகையும், 

காட்டிக்கொடுத்தது புத்தகம்...

வெனிஸ் நகர வீதிகளையும், 

வேற்றுக்கிரகவாசிகளையும், 

வெளிக்கொணர்ந்தது புத்தகம்...

எல்லோரா சிற்பத்தையும், 

ஏகலைவன் தட்சணை யையும்,

 எடுத்துரைத்தது புத்தகம்..

ராணா பிரதாப் பின், "சேட்டாக்" குதிரையும், 

ராணி எலிசபெத்தின் ராஜிய வித்தையும், 

விதவிதமாய் சொல்லிவைத்தது புத்தகம்...

மனக் குழப்பத்தின் மருத்துவர், 

மனம் வருடும் மாயாவி, 

அறிவுத் தேடலின் திறவுகோல், 

அக இருள் போக்கும் அகல்விளக்கு,
அன்னையாய் என்னை அரவணைத்த 

அழகு பிள்ளை புத்தகம்...

 ஆதி முதல் அந்தம் வரை, 

எண்ணத்திற்கு ஒளியூட்டி, 

அக்னிச் சிறகளித்து  

ஆலயத்து அமைதியை 

அடிநெஞ்சில் அடக்கியது புத்தகம், 

அதனுள் அடங்கியது என் அகம்...

வாசிப்பை சுவாசமாக்கி, 

வாழும் கலை வளர்ப்போம்.. 

புத்தகம் பல படித்தே, 

புது உலகம் நாம் படைப்போம்..

அன்புடன்,

 உமாராணி கருணாமூர்த்தி

Tuesday, March 2, 2021

விடை தெரியா வினாக்கள்.

 
வாழ்வே தேடல் தானோ...
தேடல் முடிவில்,
நான் பெற்றதும் கோடி,
கற்றதும் பல கோடி,
 

கற்கண்டாய் இனித்த
கனவெல்லாம்,
கானல் நீராய்
கண்முன்னே
கரைவதை எண்ணி
அழுவதா?

காத்திருந்த காதல் ,
கை கூடியும்-அதன்
கனமறியாது
தினம் தினம் தொலைக்கும்
உன்னை எண்ணி சிரிப்பதா?

பத்து மாதம்,
வயிற்றில் சுமந்தவள்
தாயென்றால்,
இருபது வருடம்,
மனதில் சுமந்த நான் யார்?


மண்வளம் பார்த்து பயிறிட‌
மனிதனே நினைக்கையில்,
மன வளம் பார்த்து இணைத்திட தான்
மாயனவன் நினைத்தானோ ?

புரியாத சூத்திரம்...

 புல‌ம்பி என்ன பயன்.

Sunday, February 28, 2021

பெண்மை வெல்கவென கூத்திடுவோமடா .



காரியம் கை கூடுகையில், 

மெய் பட்டது பாரதியின் கனவு..


போதை பொருளாய் இருந்த பெண்கள், 

புரட்சிப் பெண்ணாய் மாறியபோதே, 

"பெண்மை வென்றது ".. 


சரி நிகர் சாமானத்தை 

சேலையில் மட்டுமல்ல, 

வேலையிலும் காட்டத் துணிந்து, 

இராணுவத்தளம் தொட்டபோதே,

 "பெண்மை வென்றது".. 


அன்னை தெரசாவாய், 

அன்பை விதைத்து, 

ஆத்திச்சூடி அவ்வையாய், 

பண்பை அறுவடை செய்யும்போதே 

"பெண்மை வென்றது"... 


அடுக்களை துடைத்த அம்மாக்கள், 

கல்பனா சாவ்லாவாய் 

ஆகாயம் தொட்ட போதே 

"பெண்மை வென்றது" ..


கொரானாவின் கோரத்தாண்டவத்தை, 

களத்தில் சந்திக்க, 

செவிலியர் துணிந்த போதே, 

"பெண்மை வென்றது".. 


அன்று பெண்மை வெல்கவென 

பாரதி விரும்பினார்.. 


இன்று பெண்மை வென்றது என, 

நாங்கள் விளம்பினோம்.


அன்புடன் ,


 உமாராணி கருணாமூர்த்தி.

130, அக்ரஹாரம் ரோடு,

 இராமநாதபுரம், 

இராமநாதபுரம் மாவட்டம்,

623501

கைப்பேசி எண்: 

9487754727

வரம்

 என் தேடல் முடிவுற்றது 

தேவன் உன் வரவால் ...


தேவை என்று எதுவும் இல்லை, 

பார்வை பரிமாற்றமே, 

என் பசிக்கு போதுமானது... 


போகப்போக கிடைக்கும் 

"போகம்" அனைத்தும் 

பொக்கிஷ நிமிடங்களே... 


உணர்வுக்கும், உணர்ச்சிக்கும், 

இடையில் நடக்கும் யுத்தத்தை, 

நான் வென்று வருடம் பல ஆகிவிட்டது...


உன் உலகம் எனக்கு வேண்டாம் ,

என் உலகம் உனக்கு வேண்டாம், 

ஆனால் நம் உலகில் நாம் வாழ வேண்டும்...

அதற்கு கடவுள் வரம் அருள வேண்டும்.

ஹைக்கூ

 உன்னை பார்த்ததும் காதல் வரவில்லை,

என் காதல் உன் உருவில் வந்தது..

         ======================

இருபது வருடங்களாக‌

மூடிகிடந்த விதையொன்று

முதல் விடியலிலேயே,

விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது.

       ======================

எதுகையாய் நானும்,

மோனையாய் நீயும் .

இருப்பதால் தானோ.

கவிதை  உருவானது?

              ===================



Friday, February 12, 2021

2021

மனது மழுங்கி,
அறிவு விழிப்புற்ற வருடம்..

நம் மனம் படிக்காதவன், 

மனதுக்குப் பிடித்தவனாயினும்,
மண்ணில் எறிவோம்

மறுபரிசீலனை இன்றி...

நம் உற்சாக சிறகினை, 

உரசிச் செல்லும் ஊரானை,
ஒதுக்கி வைப்போம், 

உள்ளமெனும் ஊரைவிட்டு...

நம் உணர்வு அறியாது, 

ஒதுக்கும் ஓரவஞ்சனை, 

ஒடித்தெறிவோம்
ஒரு நொடியில்...

காரியவாதிகளை
கச்சிதமாக கணக்கிட்டு, 

களை எடுப்போம், 

கணப் பொழுதில்...

கண்ணில் நிலவையும், 

சொல்லில் தேனையும், 

சமமாக கலந்தெடுத்து, 

சத்ரியனாய் வாழ்ந்திடுவோம்,

சிறிது சாணக்கிய தனத்துடன்.

 

தை மகளே நீ வருக

 போகி யன்று போர் குணம் போயிட,
ஆசை, கோபம்
அனைத்தையும்  அக்னியில் அழித்திட,
ஆனந்தமாய் ஆடிடுவோம்,
அகமகிழ வாழ்ந்திடுவோம்,
அடுத்த நாள் வரப்போகும்,
தை மகளை வரவேற்க...

வைகறையில் நீராடி
வாசலிலே கோலமிட்டு
வண்ண வண்ண பட்டுடுத்தி
புதுப்பானை பொங்கலிட்டு
பொங்கி வரும் புன்னகையுடன்
பூரணமாய் படையலிட்டு
பூமித்தாயை வணங்கி பின் 

கதிரவனுக்கு நன்றி சொல்லி 

களிப்புடனே வாழ்த்திடுவோம்..

வந்தனம் உழவுக்கு மட்டுமன்றி, 

உதவிய காளைக்கும் காட்டிடுவோம்..
களப்பணியாற்றிய, 

காளையுடன் களமிறங்கிய காளையர், 

கட்டிப்புரண்டு ஜல்லிக்கட்டு நடத்த,
காணும் இதயமெல்லாம் 

துள்ளிக்கிட்டு குதிக்கும்..

மனதில், துளிர் விட்ட மகிழ்வு, 

மடையென திறந்து பெருக, 

காணும் பொங்கலுடன் 

களிப்புடனே வரவேற்போம்...

" தை மகளே நீ  வருக'

          அன்புடன்,

          உமாராணி கருணாமூர்த்தி

Sunday, December 13, 2020

நவ ஜோதிர்லிங்க தரிசனம்.

எங்கள் நீண்ட நாள் கனவை நினைவாக்கியது, 

இந்தியன் ரயில்வே.
நவ ஜோதிர் லிங்கத்தை தரிசிக்க, 

ரயிலில் முன்பதிவு செய்துவிட்டு, 

உடலையும், உள்ளத்தையும் தூய்மை படுத்திக் கொண்டோம்.

பயணத் தேதி 1/08/2018 . நாங்கள் ராமநாதபுரம் என்பதால் 

50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராமேஸ்வரம் சென்று, 

ராமநாத சுவாமி தரிசனம் பண்ணி 

9 தீர்த்த பாட்டில்கள் வாங்கிக் கொண்டு 

ரயில் ஏறினோம்.. 

முதல் வகுப்பு ஏசி பெட்டி உடலோடு சேர்ந்து உள்ளமும் குதூகலித்தது.. 

ஆந்திர மாநிலம், "ஸ்ரீசைலம்" சென்று பேருந்துக்கு மாறி,  

ஏழு மணிநேர மலை பயணம்.. 

செல்லும் வழியில், சிறுத்தை ஒன்று கண்ணில் பட, 

ஒரு நிமிடம் எகிறியது இதயம்.. 

அதிகாலை 5 மணிக்கு மல்லிகார்ஜுனாவை தரிசனம் செய்தோம்...

அடுத்து நர்மதை நதிக்கரையில் அமைந்துள்ள 

ஓம்காரேஷ்வரர் ஐ நோக்கிய பயணம், 

ஆடி பதினெட்டு நர்மதையில்,

 நீராடும் பாக்கியம் பெற்றோம்..
நதி உடலை நினைக்கையில் உள்ளம் சிலிர்த்தது.. 

சிவனை தரிசிக்கும் தீவிரத்தில், 

பணப்பையை தவற விட்டு, மீண்டும் அது கிடைத்த தருணம், 

அவன் அருளை அன்றே உணர்ந்தேன்.

 அடுத்து மாகாளேஸ்வரரை, மனதார வேண்டிக் கொள்ள, 

மத்திய பிரதேசம் நோக்கி பயணம்.. 

அங்குள்ள சிவலிங்கங்களை தொட்டு, 

தன் கையால் கொண்டு சென்ற தீர்த்தத்தினால் 

அபிஷேகம் செய்யும் பாக்கியம் பெற்றோம்..

அடுத்ததாக குஜராத் மாநிலத்தில் உள்ள சோம்நாத் ஆலயம், 

பழைய மற்றும் புதிய ஆலயம் 

கடற்கரையோரம் அமைந்த அற்புதம்.. 

சோமநாதரை தரிசித்த அசதியில் 

அன்றிரவு ரயில் பெட்டியில் அருமையான உறக்கம் அற்புதமான உணவு பல்வேறு மொழிபேசும் மக்களை பார்த்துக்கொண்டே, 

அடுத்த நாள் பயணம் பீம் சங்கரை தரிசிக்க சென்றோம்.

குளிரோடு பனியும், 

மழையும் போட்டி போட்டு அடித்து நொறுக்க,

 சிவனை காணும் எண்ணத்தில் 

அவற்றை அலட்சியப்படுத்தி படியிறங்கி, 

மீண்டும் படியிறங்கி, அப்பப்பா....... 

நானா இவ்வளவு செய்தேன் என்று எண்ணும் அளவு இருந்தது..
பீம் ஷங்கரை, என் கையால் தொட்ட கணம், 

மனம் கரைந்து, காற்றில் மிதந்தது...

திருக்கம்பேஷ்வர், மற்றும் கிருஷ்நேஷ்வர் ஆலய தரிசனம் முடித்து, திருநாகேஸ்வரம் சென்றோம்... 

அங்கே ஒருவர் மட்டும் செல்லும் பள்ளம் , 

மனதில் அச்சத்தோடு உள்ளே இறங்கினால், 

அங்கே சிவன் என்னை இரட்சிக்க 

அவர் மீது சிரம் தாழ்த்தி தொட்டு வணங்கி 

ஒரு பக்தர் துணையோடு மேலேறி வந்தோம்...

காசி மற்றும் கேதார்நாத் தவிர்த்து,
10 சிவ தலங்களை தரிசித்தது... 

நர்மதையின் குளித்தது... 

பழக்கப்படாத உணவுகளை உண்டது.... 

பலதரப்பட்ட மக்களிடம் பழகியது 

ரயில் சினேகிதம் கொண்டது.... 

தவறவிட்ட பணம் திரும்பக் கிடைத்தது... 

சிறுத்தையை நேரில் பார்த்தது... 

தானே தன் கையால் சிவனுக்கு அபிஷேகம் ஆராதனை பண்ணியது... அனைத்தும் மனதில் அசைபோட, 15 நாள் போனது தெரியாமல் மதுரை வந்து இறங்கினோம்..

 தென்னிந்திய கோவில்களை ஒப்பிடும்போது 

வெளிப்புற தூய்மை வட இந்திய கோவில்களில் குறைவு, 

ஆனால் ஆலயத்திற்குள் சென்று வந்தால், 

நம் மனம் தூய்மை மற்றும் அமைதி அடைவது நிச்சயம், என்று இக்கட்டுரையின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன். 

         "சர்வம் சிவமயம்"

 K.Umarani karunamoorthy,
Inner wheel club of Ramnad,
321.
PH.No. 9487754727

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

ஒவ்வொரு மணியாக கோர்த்து, 

என்னை ஒரு மேகலையாக மாற்றியவர்,

 என் ஆசிரியர் திருமதி மணிமேகலை... 

தாய்ப்பால் ஊட்டி என் உடல் வளர்த்தது 

என்னைப் பெற்ற தாய் என்றால், 

தமிழ் பாலூட்டி என் உயிர் வளர்த்தது 

இவர் அன்றி யாருண்டு?? 

தலையில் தட்டி தட்டி, தமிழை என்னுள்ளே இறக்கி, 

இலக்கணம், இதிகாசம், இலக்கியம், 

இயல் இசை நாடகம், நடனம் மற்றும்  

அனைத்திலும் நாட்டம் கொள்ளச் செய்தவர்.. 

மூடிக் கிடந்த திறமைகளை 

வெளிக்கொணர்ந்த திறவுகோல்... 

அன்று அவரது முயற்சி 

மனதுக்கு அயர்ச்சி ஊட்டினாலும், 

இன்று நினைக்கையில் 

நிலையில்லா நிம்மதி கிடைக்கிறது... 

என் வாழ்வில் கிடைத்த ஒரு பொக்கிஷம் 

திருமதி மணிமேகலை ஆசிரியை👑 

அவர்களுக்கு என் நன்றி என்றும் உரித்தாகுக 🙏.. 

வாழ்க வளமுடன்.

K.Umarani
Innerwheel club of Ramnad,
Dist 321,
9487754727

மகளெனும் தேவதை

தேவன் நமக்கு அருளிய தேவதைகள், தேடினாலும் கிடைக்காத தங்கத்தாரகைகள்,
அவள் தத்தித் தத்தி நடக்கையில் 

மனதை கொத்திச் செல்லும் கொலுசொலி.... 

கொஞ்சி கொஞ்சி சிரிக்கையில் 

சிறிதாகும் மனவலி.... மகள்
"பேதை"
பெண்ணாகி போதை மொழி பேசி
"பெதும்பை" பருவத்தில் புதுமை பலசெய்து.... 

"மங்கை" மலராகி, மனதில் மகிழ்வோடு 

"மடந்தை" அவள் மணமாகி, 

மணாளன் கரம் கோர்த்து, 

மறுவீடு செல்லுகையில் 

நம் மனதில் வரும் உயிர்வலி..


"அரிவை" அவள் கையில் அடுத்தடுத்து, 

அச்செடுத்த பதுமைகள்... 

ஆண்டவனின் அருள் கொடையில் அன்றே மூழ்கி விட்டோம்..

 "தெரிவை" பருவத்தில் அவள் தேவதை ஆகி ,
"பேரிளம் பெண்ணாய் பார்போற்ற வாழ்ந்திடவே, 

மகள் பெற்ற நாமெல்லாம் மகராசிகளே 👍.

👆
பெண் குழந்தைகளைப் பெற்று 

அவர்களால் நாம் பட்ட சந்தோஷத்தையும்

 பெண்ணின் ஏழு பருவங்களான 

"பேதை பெதும்பை மங்கை மடந்தை அரிவை தெரிவை பேரிளம்பெண்" இவற்றை சேர்த்து கவிதையாக்க முயற்சித்து இருக்கிறேன்...

பெண் குழந்தைகளை பெற்ற அனைத்து அம்மாவிற்கு சமர்ப்பணம்🙏


    # உமாராணி கருணாமூர்த்தி #

முதுமையின் ஏக்கங்களும் தீர்வுகளும்.


முற்றிய கனி போன்ற அனுபவச் சாறு நிறைந்தது முதுமை. 

அதை முழுவதும் பயன்படுத்திக் கொண்டால், 

பலன் நமக்குத்தானன்றி கனிக்கு அன்று என்பதை, 

முழுமையாக உணர்ந்தவர்கள்
முதுமையை போற்றுவர்..

முட்டி முட்டி வெளிவரும் விருட்சமாய், 

ஊரோடும் உறவாடும் போராடி 

நம்மை உயர செய்தவர்களை ஊரில் விட்டு, 

வேலை தேடி வெளிநாடு சென்ற பின்னே, 

வெறிச்சோடி வீட்டில் அவர்கள், விட்டத்தை பார்த்து, 

வீற்றிருக்கும் மனவலி அப்பப்பா...

அதைவிடக் கொடியது,  
ஒரே வீட்டில் ஒரே அறையில் முடங்கி இருப்பது..... 

ஒருவாய் காபிக்கும், 

ஒருவேளை உணவுக்கும் 9 மணி வரை,

 பிறரை எதிர்பார்த்து காத்திருக்கும், 

முதிர்ந்த குழந்தையின், 

எண்ண ஓட்டத்தை எண்ணிப்பார்க்க மனம் வலிக்கிறது...

60  பேர் வந்தாலும் முகம் சுளிக்காமல் 

மூன்று வேளையும் உணவளித்த கைகளும் 

ஆறு கிலோமீட்டரை  அசால்டாக நடந்த கால்களும் 

இன்று வலுவிழந்து அறைக்குள் முடங்கி கிடப்பதை எண்ணி 

முதுமை மூச்சு முட்டி அழுகிறது...

"தனிமை தானே எடுத்தால் இன்பம் தரும், 

பிறர் கொடுத்தால் துன்பம் தரும்"
 
தனிமையை விரட்டும் தானியங்கி தேவதைகள் 👼 தன் பேரப் பிள்ளைகள்... அவர்கள் தாவி வந்து தன் மடி ஏறி,
பழங்கதை சொல்லச் சொல்லி கேட்கையில்,

 தன் தாயை பார்த்ததுபோல், 

தழுதழுத்து போகிறது பெரியவர்கள் மனது...

 மாதம் ஒருமுறையேனும் மகளோ, மகனோ தன்னை வந்து பார்க்க வேண்டி தவிக்கிறது தந்தை மனது... 

தாலாட்டி வளர்த்த தன் பிள்ளை தனக்கு சோறூட்ட சொல்லி துடிக்கிறது தாய் மனது...
சொர்க்கத்தில் நமக்கு தூளி கட்டிய ,
தூய மனம் இன்று துவளுகிறது தனிமை கண்டு...

முதுமை நோய் அல்ல முற்றிய அனுபவத்தின் பெட்டகம் 

அதை என்றும் பேணி காப்பது நமது கடமையாகும்.


Innerwheel competition ku yeluthiyathu.


 உமாராணி கருணாமூர்த்தி

Wednesday, July 22, 2020

ரோட்டரி சங்கம் வாழ்த்துக்கள்.💐

ஆழி பெருங்கடலை,
அசால்ட்டாக கடந்து,
அன்பை தெளிக்க,
ஆண்டவன் அருளிய
அருள் பெரும் கொடை
ரோட்டரி சங்கம்..

சுற்றும் பூமி சோர்ந்தாலும்,
சூழலும் இச்சக்கரம்,
சோர்வுற்றுப் போனதில்லை..

சோதனையை சாதனையாக்கி,
வேதனையை வேரறுக்க,
ஆரங்களாய் இணைந்த,
அச்சாணி நாங்கள்....

ஊரடங்கு உடலுக்கு தான் அன்றி,
உணர்வுக்கன்று என்ற உந்துதலுடன்,
கோரத் தாண்டவத்தில்,
கோவிலுக்குள் இறைவன்(Rotarians )
மாட்டிக் கொண்டாலும்,
கணினி வழியே காரியம் ஆற்ற வந்த
கந்தர்வ கூட்டம் நாங்கள்....

போக்கு காட்டிய போலியோவை
போதுமென வெருண்டோட,
புதிதாய் வந்த கோவிட்டுடன், 
கிரிக்கெட் ஆட போகும்,
ராகுல் டிராவிட் நாங்கள் 💪...

நாடு நகரம் கடந்து
மனிதம் இணைத்த மனிதரில்,
திரு பார்த்திபன் துணையோடு
பணியாற்ற வந்த
திருமதி கீதாவை,
கீதையின் நாயகன், வழிநடத்த,
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.💐

# உமாராணி கருணாமூர்த்தி#

பிறந்த நாள் வாழ்த்துகள் Ishwarya.

அழகிய உயிரோவியம்
உன்னைப் பற்றி,
எழுத நினைக்கையில்
வரிகளெல்லாம் வரிசைகட்டி
காததூரம் ஓடுவ "தேன்??

உன் கண் மலர் 
திறக்கக் கண்டு
அல்லிமலர் எல்லாம்
அழுது புலம்புவ"தேன்??

அமைதியின் அடுத்த வாரிசு
நீ என்று, சொற்களெல்லாம்
சொல்லாடல் நடத்துவ"தேன்??

செல்வத்தில் குளித்த,
குலமகள் உன்னை கண்டு ,
அந்த மலைமகளும் மலைப்ப"தேன்??

உயிர் ஓவியமா உன் மகள்
என் உயிர் வாங்கும் அழகோவியம்
என்று மதி அங்கலாய்ப்ப "தேன் ??

"தேன்" " தேன்" " தேன்" என
தேனூறும் கேள்விக்கெல்லாம்
நான் கூறும் ஒரே பதில்,,
எதிர்கொள்ள முடியா ஏகாந்தம் நீ..
எம்பிரான் அருள்பெற்ற
அன்பு ஊற்று நீ...

தேனூறும் வார்த்தைகளால்,
என் தேவதைக்கு,
வாழ்த்துப்பா பாடுகிறேன்
 "வாழ்க வளமுடன்" 

                 # உமாராணி #

உயிரின் மகத்துவம்.


உயிர் கொடுத்த தாயும்
உயிரான நட்பும் உடன் இருக்க,
உயிரைத் துச்சமென துப்பி விடாதே...

கொல்லவரும் கொரானாவே,
பல்கிப்பெருகி வளர்கையில்,
பல்லுயிர் காக்கும் தேவன் நீ
தெளிவு கொள்ள வேண்டாமா??

முடிவெடுக்கும் முன்
முழுவதும் யோசி..
உலையென கொதிக்கும்
உன் மனதை,
ஊரடங்கு நேரத்தில் உற்றுக் கேளு..

உன்னுள் ஊறும் அன்பு ஊற்றால்
அகிலத்தை குளிப்பாட்டு...
திறமையை திரியாக்கி
அறிவாற்றலால் ஒளி ஏற்று...
மனிதம் மரித்த மனிதர் மத்தியில்,
ஈதலினால் இறைவன் ஆகு...

இதையும் தாண்டி
உன்னை வெறுத்தவர்காக,
உயிர் கொடுக்கத் துணியும் முன்,
உன்னிடம் ஒரு வார்த்தை...

அன்னை மனதோடு
அன்புத்தோழி நானிருக்க,
என்னிடம் வந்து  ஒரு முறை பேசு..
மன அமைதிக்கு
அஸ்திவாரம் நான் அமைக்கிறேன்.

# உமாராணி#

காதலர் தின வாழ்த்துகள்.

என் இமை திறக்க
விழி நுழைந்து,
என் மனம் மதித்த
மகத்தான மானிடர்
அனைவருமே
என் காதலர்கள் தான்👩‍❤️‍👩👩‍❤️‍👩...


முதல் முத்தமிட்ட அன்னையே

என் முதல் காதல்❤️...

முற்பிறவி பயனாய்

நான் பெற்ற நாயகரே

இரண்டாவது காதல்💞...


முக்கோடி தேவர்கள் வாழ்த்திட

வந்திறங்கிய 4 தேவதைகளே

மூன்றாவது காதல்💕❤️....


நல்லோர் ஆசியால்

நான் பெற்ற நண்பர்கள்

நான்காம் காதல்💕💕 ...


சிரிக்கும் சித்திரமாய்

சிதறிய மொழிபேசும்

மாங்கனி மழலைகளே

ஐந்தாம் காதல்💘💘💘...


ஆதி முதல் அந்தம் வரை

என்னை அடிமையாக்கி

அன்பால் ஆட்டிப்படைக்கும்

அனைத்து காதலர்களுக்கும்,

இனிய காதலர் தின வாழ்த்துக்கள்.



#உமாராணி#

மருத்துவர் தினம் நல்வாழ்த்துகள்🌹.


மருத்துவராகும், என் கனவு
கலைந்தனாலோ என்னவோ,
மருத்துவர்கள் மீது எனக்கு
ஒரு மகத்தான மரியாதை உண்டு 👑...

மண்ணில் தோன்றிய
மாணிக்க தேவதைகள்,
மானிட ஜாதியின் ஜீவஜோதி,
சுடர்விடும் தளிர் கொடிகள் நீங்கள்...

வாரந்தோறும் விடுமுறையால்
நாம் விட்டத்தை பார்த்து வீட்டில் இருக்க..
உயிரின் உன்னதம் காக்க,
வீடு என்பதை துறந்து ,
விடிய விடிய போராடும்
மின்மினி பூச்சிகள் நீங்கள்.. 🩺

முகக் கவசம் இன்றி வீதியில் திரிந்து
யார் மூச்சடைத்து நின்றாலும்,
உயிர் கவசமாய் உடனிருந்து,
எம்மை காக்கும் இறைத் தூதுவர்கள் நீங்கள்.. 😇

கோவிட் அச்சத்தில் அந்தக் கடவுளே,
கருவறையில் கலங்கி நிற்கையில்,
களமிறங்கி களப்பணியாற்றும்,
புண்ணிய ஆத்மாக்கள்  நீங்கள்..🙇‍♂️

தேவன் என்றால்
தேரில் தான் வரவேண்டுமா என்ன...
தேவை அறிந்து தேடிச்சென்று,
சேவை புரியும் ஆண் தேவதைகளுக்கும்
சேர்த்து சொல்வோம்,
மருத்துவர் தின நல்வாழ்த்துக்களை 💐.

 #உமாராணி கருணாமூர்த்தி#

Thursday, May 21, 2020

நட்பு !

*சும்மா இரு சுகமாயிரு* .


வீதியில் இறங்கி வேடிக்கை பார்க்க
அது என்ன " *ராகுல் டிராவிட்"* டா?
விதியோடு உரச வந்த " *கோவிட்* "
என்பதை மனமே நீ உள்வாங்கு.
சும்மாயிரு சுகமாயிரு,
சாத்திய கதவுக்கு வெளியே காத்திருப்பது,
காத்தோ, கருப்போ அல்ல..
நம்மை காவு வாங்க வந்த
" *கொரோனா* "
கொஞ்சம் யோசி..
உலகை காக்க, உன்னை சிறை வை ..
வாழும் கடவுளாவாய்..
உனக்குள் நீ பேசு,
உன்னையே நீ உணர்,
உன்னவளின் உள்ளம் பார்..
உன் பிள்ளை மொழி கேள்...
உத்தமனாய் நீ மாற,
உனக்களித்த ஒரு வாய்ப்பு,
*சும்மா இரு சுகமாயிரு.*
🙏உங்களை வேண்டி கேட்பது,🙏
# உமாராணி #

Wednesday, May 20, 2020

அக(ல்) விளக்கு ஒளி

விளக்கேற்றுதலின்,
விளக்கம் அறியாது,
வியாக்கியானம் பேசும்
வெள்ளந்தி மனிதர்களே...
நாங்கள் ஏற்றியது
வெறும் அகல் ஒளியல்ல,
எங்கள் அகத்தின் ஒளி...
அந்நிய தேசமே அசந்து நிற்கும்
ஒற்றுமையின் ஒளி ....
அடுத்த வீட்டுக்காரனுக்கு ,
நம் நலனை பறைசாற்றி
அவர் மனதில் ஏற்றிய
நம்பிக்கை ஒளி....
அறிவியல் கைவிட்ட
"கோவிட்"அரக்கனை
ஆன்மீகத்தில் அகற்ற,
அறிவிற்கு அப்பாற்பட்ட,
ஆண்டவனின் துணை கேட்டு,
மரபுவழி ஏற்றிய
மங்கல விளக்கொளி...
திருக்கார்த்திகை திரு விளக்கும்,
தீபாவளி ஒளி விளக்கும் ,
விளக்கிய உண்மை
உணர்ந்திருந்தால்,
இன்று
நாங்கள் ஏற்றிய அகல் விளக்கின்🪔
அருமையும் நிச்சயம் நீ உணர்வாய்.

🏡 ஊரடங்கு 🏡

முழுநீள ஊரடங்கு,
விளைவு..
முற்றிலும் செதுக்கின்றோம் வாழ்வை...
முப்பது வருடம் கழித்து....
முள்ளில்லா
மலராய் 🌹 ..
முற்றிய
கதிராய் 🌾...
முக்கனி
சுவையாய்🥭...
முதுமையும் இனிக்க💞.

Thursday, February 13, 2020

நமது சங்கம். ( Innerwheel club )



"ரம்ய பிரியா" தலைமையில்,
 ரம்மியமாய் தொடங்கி,
 "லட்சுமி" கடாட்ச தோடு, 
"கவி"தையாய் தவழ்ந்தபடி,
"கீதம்" இசைத்து
 "கவி"பாடிய பண்பட்ட சங்கமிது...

"விசா"ல பார்வையோடு,
 "அனிதா" "செல்வி" அரவணைக்க,
"வித்யா" தேவி அருளோடு,
 "நர்மதா" நதி போல்
 நளினமாய் வளர்ந்துவந்த
நமது சங்கமிது..

 இன்று "கவிதா"வுடன் கரம் கோர்த்து,
 நமது தோழமை சக்திகளோடு
சாதனை புரிய, "லட்சுமிவர்தினியை"
 மகிஷாசுரமர்த்தினி யாக
உருவேற்றிய உயரிய சங்கமிது...

 நீயும் நானும் இணைந்து நாம் ஆகி,
 நம் உறவுக்கு உதவிட உலகிற்கு
அறிமுகமான அற்புத சங்கமிது...

ஆண்டாண்டு வளர்ந்திட
ஆண்டவனை வேண்டுகிறோம் .

Inner Wheel club ku yeluthinathu.
glitters la veli vanthathu.


இறைவனுக்கு நன்றி

.
கர்மாவோடு ஆடிய
கண்ணாமூச்சி ஆட்டத்தில்,
கண் மூடித் திறக்கையில் 
முன்னின்று காத்தது,
"கருப்பனும் "அவர் "தங்கையும்"
தானன்றி வேறாரும் நானறியேன்...
மனம் கனத்த வேலை
கல்லாக தோன்றிய கடவுள் இன்று, 
கண்முன் கரைவதை கண்கூடாக காண்கிறேன்...
கால தேவதை கரம் கோர்த்து 
காலார நடை பயில, 
காலாவதியாகும் உன் கன்றிப் போன நினைவுகள்.
வராகி தாயின் தயவோடு 
வசந்தம் உன்னை வாரி அணைக்க, 
வாஞ்சையோடு வாழ்த்துகிறேன்.

இறைவா!

இறைவா!
உறங்கச் செல்லும் முன்

உன்னிடம் ஒரு வார்த்தை..
நாளை எழுந்தால் 

என்னைத் தேடி நீ வா ..
எழவில்லை என்றால்

 உன்னைத்தேடி நான் வருகிறேன்.. 
எப்படியாயினும் 
என் உயிர் உழல போவது 
உன்னோடுதான்.. 
இப்பொழுது கொஞ்சம் உறங்கச் செல்கிறேன்.

                        Good Night

*இருபதில் இறைவனும் நானும்.💞..

பத்து எண்றதுக்குள்ள
19 கடந்து 20 வந்து இறங்கியது..
இதயத்தில் ஒரு நிறைவு,
 இருந்தும் ஒரு வெறுமை..
இனிக்கின்ற மனதுக்குள் 
இறக்க முடியா ரணம் ஒன்று...
ரகசியமாய் கேட்டேன் 
என் இரட்சகனிடம், (இறைவன்) 
ஓடிப் போகலாம் வாவென்று💞..
வாழாத வாழ்வும், வளமான நாளும், 
இன்னும் இங்கிருக்க என்னோடு வந்து ....😡
ஏனிந்த யோசனை என்று 
போதனை வேறு சொல்லி சென்றான்😞 ..
பொசுக்கென்று பொங்கிய கண்முன்னே கலங்கலாய், 
அத்தனையும் அவன் பிம்பம்..
நண்பனாய், என் நாயகனாய் , 
நலம் விரும்பியாய் 👼...
மனம் புல்லரித்து புத்துயிர் பெற
எனது ராஜ்ஜியத்தில்
நானே மீண்டும் ராணியானேன்👑.
_*அன்புடன்* *உமாராணி*

என் உயிர் எங்கு உள்ளது...


நான் இழுக்கும் 
மூச்சுக்காற்றிலா..
முழு வேகத்தில் ஓடும்
 ரத்த ஆற்றிலா??
அல்லது 
சத்தமின்றி துடிக்கும் 
இதய ஒலியிலா??
ஓசையின்றி பெருகும் 
ஹார்மோன் அலையிலா??
அனைத்திலும் அந்நியப்பட்டு
ஆண்டு பல கடப்பேன்..
ஆனால் 
அரைநொடி நீ எனை மறுத்தால், 
மறுநொடி நான் இறப்பேன்.

For My Loveable Aarama.