Thursday, March 9, 2023

நான் படித்த பட்டம்..





உமாராணி என்ற என் பெயருக்கு பின்னால், 

கவிதாயினி என்று போட்டவர்கள்,

நான் படித்த பட்டத்தை ஏன் போடவில்லை தெரியுமா?? 


அதை போட்டால் இன்விடேஷனில் இடம் இருக்காது என்பதனால்.

என் படிப்பை பற்றி இங்கு சொல்கிறேன் 📢..


பள்ளிப்படிப்பை முடித்த நான் பட்டம் படிக்க முயற்சித்தேன்..


வாழ்க்கை பாடம் வாசிக்க, 

வளர்த்தவர்கள் வாதிடவே, 

வளைந்து கொடுத்தேன் 

அன்னையின் வார்த்தைக்கு ..


அன்று முதல் படிக்கத் தொடங்கினேன்.. 


அடுத்தவர் எழுதி அச்சிட்ட வார்த்தைகளை அல்ல.. 


அனுபவம் கற்றுக் கொடுத்த வாழ்க்கையினை..


மணாளனிடம் மங்கையானேன்.. 

என் மகளிடமே மழலையானேன்... 

சொந்தங்களை ,

சேர்த்து சேர்த்து சோர்ந்து போனேன்... 


இன்று நட்புக்களின் தயவால் நிமிர்ந்து நின்றேன்... 


எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும் 

ஓராயிரம் பாடங்கள்... 


2000 வரை பூட்டிய வீட்டிற்குள் 

இன்னொரு நீலாம்பரியானேன்..😀 


2001ல் அழகு கலை கற்க, அடி எடுத்து வைத்தேன்,

 அடுத்தடுத்து அழகிய நிகழ்வுகள்..


தொலைதூரக் கல்வியில்,

 தமிழ் என்னை அரவணைக்க, 

அங்கும் கொஞ்சம் தமிழ் படித்தேன்... 


அதன் விளைவோ என்னவோ.. 

 தமிழரசி அன்னையின் ,

அருள் கரம் என்னை அணைத்துக் கொள்ள

என் அணுக்களில், 

அவரது அதிர்வலைகள்..



அதன்பின்னே மனிதம் படித்தேன்.. 


மானுட மனதின் கருணை படித்தேன்... 


கயவனை அவன் கண் கொண்டே படித்தேன்.. 


ஏழையிடம் எளிமை படித்தேன்.. 


ஏங்கும் மனதின் ஏக்கம் படித்தேன், 

அதை தேற்றும் 

வழியும் படித்தேன்... 


வார்த்தைகள் கொண்டு, 

பிறரை வாழ வைக்கும் 

வித்தையும் படித்தேன்.. 


இவை அனைத்தையும் அருளிய 

வித்யா தேவியின் பரிவோடு,

 என் தோழி வித்யா பிரியதர்ஷினியின்

 நட்பையும் படித்தேன்.❤️ என்று உரைத்து 

நன்றி கூறி நகர்கிறேன்🙏

 உமாராணி கருணா மூர்த்தி

No comments: