Tuesday, July 15, 2025

என் தந்தை



தாயின் தயவால் நான் பெற்ற தனம்..

எண்ணிரண்டு வயதில், 

என் ஏட்டுக்கல்வி  முடிந்தாலும், எழுதும் ஆற்றலை, 

எம் மரபணுவில்  ஏற்றி, 

என் எழுத்தின் ஊன்றுகோல் ஆனவர்..


சூரியனைச் சுற்றும் கோள்கள் போல், 

எம் நால்வரையும் சுற்றிய சூரியன் அவர்...


பாசத்தின் குத்தகைக்காரர், 

பங்கீடு செய்ய தெரியாது, தன்னுள்ளே அடக்கியவர்..


இன்று இறைவனிடம் இணைந்து, எம் குலம் காக்கும் இறைவனும் ஆனவர்.

  🙏அப்பா🙏

            க. உமாராணி✒️

தமிழ்ச் சங்க மகளிர் விழா.. 10/03/2025

 


மாலை 6:00 மணி அளவில்  அரவிந்த அரங்கத்தில் அடியெடுத்து வைக்க கோபியர் நடனத்தில் என் கோலவிழிகள் பூத்தது.... 


அடுத்து வந்த அவ்வையின் 

 அமுத மொழியில் , அடங்கி ஒடுங்கிய மனதை, 


மனம் என்னும் மேடையில் மலர் ஒன்று, தென்றலாய் தாலாட்ட, தன்னிலை மறந்து 

தனிமை உணர்ந்தேன் அரங்கத்தில்...

 


மணிகளில் மாணிக்கமாய், நறுக்குத்தரித்த, 

நல் வார்த்தை நான்கோடு நகர்ந்திட்ட, டாக்டர் பாத்திமா அம்மாவை தொடர்ந்து,


படபடக்கும் பட்டாசாய் சிந்தனை வெடி கொளுத்தி, மனதை  சிந்திக்கத் தூண்டிய முனைவர் நசீமா அம்மாவின் .. நல்வார்த்தைகளில்,

அரை வினாடி அப்துல் கலாம் ஐயாவை நான் கண்டேன்..


தன் பண்பட்ட அபிநயத்தால், பரதத்தில், மகாபாரதத்தை அரங்கேற்றிய, பாரதி யின் படைப்பு கண்டு, பாதி உறைத்த நெஞ்சம்,


 கண்ணாமூச்சி ஏனடா என்று பொய்யாக கடிந்து கொண்ட ,

கன்னியரின் களி நடனத்தில் காதல் கொண்டு, 

கண்கள், என் கண்ணாளனை தேடிச் செல்கையில், 


 தொலைதூரத்தில், தேவலோகம் ☁️..

 எங்கெங்கும் காணினும் சக்தியடா, 

விழிகள் விரிய வியந்து தரிசித்தோம்   பூலோகத்தில் அனுசியாவோடு அன்னையரை🙏 


அரை நொடி ஆகவில்லை, அதற்குள் ஒரு அபலையின் அழுகுரல், ஓரங்க நாடகத்தில் ஒருத்தி அழுது சண்டையிட அதைக்கண்டு அரங்கமே அதிர்ந்தது ஆண்களின் சிரிப்பொலியில்.. 


இன்னுமா முடியவில்லை என்ற செம்பு சண்டை, 

உஸ்ஸ் ...

அப்பா இப்பவே கண்ணை கட்டுதே என்று வடிவேலு குரலில் ஒருவர்  சாய்வு நாற்காலியில் சரிந்தமர, 


சட்டென பறந்து வந்து கட்டழகன் தொட்ட, *கன்னங்கருத்த கிளி கூட்டம் ,*ஒன்று காண்பவர் கண்களை களவாடி சென்றன❤️ 


திருடு போன இதயத்தை,

திருப்பிக் கொடுத்தது சித்த மருத்துவரின் கணீர் குரலும், சீரிய தமிழ் பாடல்களும் .


ஒரு மாதம் சிறகடித்த  நம் இதயத்தை ஒரே நாளில், ஒருங்கிணைத்து, முடிவுக்கு கொண்டு வந்த,  ஒருங்கிணைப்பாளர்கள், மற்றும் தோழிகளுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏


அன்புடன் ✒️ உமாராணி கருணாமூர்த்தி🥰

சிகரத்தில் சிதரம்.


அடி எடுத்து வைத்த நான், அசந்து விட்டேன்.. வந்தது கார்ல்டன் ஹோட்டலா, கந்தர்வ லோகமா?? அங்கொன்று இங்கொன்றுமாக, 

அழகிய ஆண், பெண் தேவதைகள்...


பணி மேவிய மலராய், மகிழ்வோடு மனமாய், தோழி ரம்யாவும், அவர் தம் நாயகனும் நயமாக வரவேற்று... 


நாவிற்கினிய உணவோடும், நல் ரோட்டரி உணர்வோடும் கற்றல் கருத்தரங்கம் கலை கட்டியது..


தோழி அணிவித்த ஏலக்காய் மாலையால், எதிர்மறை எண்ணம் எழுந்தோடிட, 

எம் மண்ணின் மைந்தர்கள் பேசிய உரையும், உண்மை கதையும் எம்மை உறைய வைத்தன.... 


வறுமையின் கொடுமையை, வாழ்வில் கற்றுக் கொடுத்த விதம் கேட்டு, உறைந்த 

என் உள்ளம், 

உருகி அழுதது...


பணியின் பொலிவோடும், இசையின் அதிர்வோடும், "இளமை திரும்புதே "

என தோழியரோடு குத்தாட்டம் போட்டு இரவினை கழித்தோம் இனிமையாக 🌜..


காலை புலர்ந்தது, கதிரவனோடு முதல்முறையாக செல்ஃபி🌞..


சுவைமிகு உணவு முடித்து, கலந்துரையாடல் 

தொடங்கிட, நிறைய கற்றுக்கொண்டோம்... 


இடையிடையே சிதரம் நாயகனும், அவர் தம் நாயகியும், 

ராஜ வலம் வந்தது சிறப்பு🤝. 


இறுதியில் என் நண்பரும் நல் அறுவடை நாயகனுமான,

 Mr. தினேஷ் பாபு பேசிய, மறுபிறவி நிகழ்வினை மனம் அதிர கேட்டு, 

மறு நொடி  நன்றியுரைத்தோம், இடியிலிருந்து காத்த இறைவனுக்கு🙏


கற்றல் நிகழ்விலும், கலந்துரையாடல் உரையிலும் கற்றுக்கொண்டோம்👍 


உன் அறுவடையில்  சிறு மழைத்துளியாய் இணைந்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.


என்றும் உன் தோழி, உமாராணி கருணாமூர்த்தி

கவிதா

 நிலவின் ஒளிக்கு வர்ணனை தேவையில்லை... இருப்பினும், கவிஞர்கள் வர்ணிப்பது இல்லையா???? அதுபோல இன்று நிலவென ஒளிரும் கவிதாவை வர்ணிக்கும் கவிஞராக உங்கள் முன் நான்...


கவிதா


இன்று என் கவிதையின் நாயகி... 


இவ்வருட இன்னர் வீல் சங்க கதாநாயகி... 


1988 ஆம் வருடம் தேனி மாவட்டம், பெரியகுளத்தில் பிறந்த ராணி தேனீ இவர்....


அத்தனை சுறுசுறுப்பு இவரிடம்....


2008 அவள் மனதை கொள்ளை அடித்து,

 Ramnad ல் குடி  வைத்தது, அவர் கணவர் செந்தில்குமார் என்னும்  ஆண் தேனீ...


பாரதியார் மீது பற்று, சற்று அதிகமானதாலோ என்னவோ, 


தான்  பெற்ற பெண்ணையே, பாரதியாக்கி பாலூட்டியவர்...


அடுத்ததாக Mr. சென் ஆசைக்கு இணங்கி, பிறந்தவர் தான் அர்ஜுன் சென்... 


MBA மனித வளத்துறை படித்ததாக சொன்னார்கள்,

 நான் நம்பவில்லை.... 


ஏனென்றால், அவர் மனித மனங்களை அல்லவா  படித்தார்... 


புத்தகம் படிப்பதும், பாடல் பாடுவதிலும், ரசனை மிக்கவர்.... 


தினசரி  செந்தில் தூங்குவதே இவருடைய பாடல் கேட்டு தானமே... அப்படியா?? 


விழா முடியும் நேரம், நமக்காகவும் இருவரி பாடிக் காட்டுவார்...


Lovely friends  குரூப்ல இணைந்து என் இருபது வயதை குறைத்து விட்ட குதூகுல

தாரகை....


இன்னர் வீல் சங்கத்தின் ஆபத்பாவன்...

இரண்டு முறை பிரசிடெண்ட்... இரண்டு முறை செக்ரட்டரி ... 

ISO, 

Treasurer என்று Inner wheel la அனைத்து பதவியிலும் கலக்கியவர்...


அனைவரையும் கட்டி வைக்கும் அன்பு கலந்த ஆளுமை... 


இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்... 


இவர் செக்கரட்டரி கிடைக்க, Inner wheel club  உறுப்பினர்கள் கொடுத்து வைத்தவர்கள் தான்... 


வருடம் சிறக்க வாழ்த்துகள்..

வாழ்க வளமுடன்🙏

கொடைக்கானல் வெல்கம் ஹோட்டல்.



மலைகளின் இளவரசிக்கு, ஒரு மணி மகுடம்.. 


நாவின் உணர்வறிந்து, 

நயமாக நீவீர் அளித்திடும் நளபாகமே, உந்தன் வளர்ச்சிக்கு ஒரு மைல் கல்...


அறுசுவையோடு, அன்பும் சேர்த்து பரிமாறும் உணவிலே, வயிறோடு மனமும் குளிர்கிறது...


தோசையின் மொறுமொறுப்பும், மட்டன் சுக்காவின் கமகமப்பும், மள மளவென பரிமாறும் சுறுசுறுப்புமே,

உன் வளர்ச்சியின் சூட்சமம்...


உந்தன் சாம்பாரின் அறுசுவைக்கு, 

அடிமை சாசனமே எழுதிடலாம்

அத்தனை ருசி . 


ஆண்டவனின் அருளோடு ஆண்டு பல கடந்தும் உம் சேவை தொடர, வாழ்த்துகிறோம்💐 

       அன்புடன்,

உமாராணி கருணா மூர்த்தி,

இராமநாதபுரம்.

செவிலியர் தின வாழ்த்துக்கள்

 தேவதைகள் 


என்னை பெற்றவளும் ஓர் தேவதை... போற்றி வளர்த்தவளும் ஒரு தேவதை... வாழ்வில் ஒளி ஏற்றியதும் ஒரு தேவதை... 


ஏன் இன்று உங்கள் முன் என்னை மேடையை ஏற்றியதும் ஒரு தேவதை👼... 

ஆம் என் தாயும் ஒரு செவிலியர் , என் சகோதரியும் ஒரு செவிலியர், 


தேவதைகளின் குடும்பத்தில் பிறந்து, இன்று செவிலியர்களின் சங்கமத்தில் இணைந்த நானும்,

ஒரு தேவதை தானே... 😇


எந்தன் பின்னால் ஒரு ஒளிவட்டம் தெரிகிறதா??? 

அது உங்கள் பிரகாசத்தில் எதிரொளியே....


சூரிய ஒளி வாங்கி ஒளிரும் நிலவின் பிரகாசம்... 


பிரம்மனின் படைப்பை, பூமியில் வரவேற்று காக்கும் விஷ்ணுவின் அவதாரம் நீங்கள்.... 


கொரோனாவின் கோர தாண்டவத்தில் அந்த கோவில் கருவறையில் அந்த கடவுளே கதவடைத்த வளை, வீதியில் களம் இறங்கி, அதனை விரட்டி அடித்த வீரமக்கள் நீங்கள்.... 


குடும்பத்தைக் கோவில் ஆக்கி, 

தன் குழந்தையோடு கணவனையும் கண்ணில் வைத்து காக்கும், கோவிலின் குலசாமியும் நீங்கள்.... 


பணம் காசினி தாண்டி, கருணை ஒன்றினை கையில் ஏந்தி, நோயோடு வருபவர்களின், 

உடல் பிணியோடு, மனபிணியையும் போக்கும், மகிஷாசுர வர்த்தினியும் நீங்கள்..... 


பிறர் தேவை அறிந்து சேவையாற்றும், செவிலியர் அனைவருக்கும், மக்களின் பிரதிநிதியான, என்னுடைய வாழ்த்துக்கள்💐 

         ✒️

உமாராணி கருணா மூர்த்தி

பாடம்

 நறுமணம் வீசும் 4000 மலர்கள் நானிலத்தில் நிறைந்திருக்க, 

காகிதப் பூவில் வாசமில்லையென கவலை கொண்டு வாடுவதேன்?? 


மலரின் தன்மை மணம், மனத்தின் தன்மை அவரவர் குணம்... 


வற்றிப்போன அன்பிற்கு அனைவரும் அன்னியரே... 

உன் அகங்காரத்திற்கு, 

காலம் கற்றுத் தரும் பாடம். ✒️

     க.உமாராணி