Thursday, December 9, 2010

உன்னுள் கண்டேன்

[ தன் பையனே உலகம் என்று எண்ணிய‌
தாய் அவன் வேறு பெண்ணை விரும்பியதும்
அதை எண்ணி புலம்பியது ]

எனக்கோர் புது உலகம்
உன்னில் நான் கண்டேன்.

என்னுயிரின் மறுபாதி
உன்னுடலில் உலவக்கண்டேன்...

ஆறடி உயரத்தில்
அடை மழை நான் கண்டேன்...

அதில் துளியூண்டும் குறையாது
அனுதினம் நனையக்கண்டேன்...

அங்கேயும் ஒரு இதயம்
எனக்காகத் துடிக்க கண்டேன்...

அதில் அணுவெல்லாம்
துகள் துகளாய் என் நினைவு தான் என்றேன்...

அதில் ஆக்ஸிஜன் குறைகையில்
என் மூச்சு திணறக்கண்டேன்...

உறவுகளை மதியாது
உலகத்தை ஒதுக்கி வைத்தேன்...

நீ ஒருவன் போதுமென்று
புது உலகம் நான் செய்தேன்.....

அதை உற்று பார்க்கையில் தான்
உன் குரல் கேட்க கண்டேன்...

உனக்கென்று ஒரு மனம்
இருப்பதை உணர்ந்து கொண்டேன்...

அதில் விருப்பொன்றும் வெறுப்பொன்றும்
இருப்பது தெரியக் கண்டேன்...

சடுதியில் என் உலகம்
சரியக் கண்டேன்...

ஊரார் கை கொட்டி சிரித்திடும்
கரகோசம் கேட்க கண்டேன்...

காண்பது கனவா என்று
கண் கலங்கி ஒதுங்கி நின்றேன்....

Monday, November 8, 2010

மௌனத்தின் தாக்கம்


அழகு விள‌க்கொன்று எரிய‌
அதை விளையாட்டாய் என் விரல் தடவ‌
ஒரு முறை சுட்ட காயத்தில்
ஓராயிரம் ஓட்டைகள்
என் இதயத்தில்...

பேசியே பழி வாங்கும் உலகத்தில்
பேசாது பைத்தியமாக்க‌
எங்கு நீ கற்று கொண்டாய் ?
வைத்தியத்திற்கு வழியின்றி
வாய் மூடி அழுகின்றேன்...

நெருப்பைக் காதலிக்க‍‍‍‍‍‍‍‍_ நான்
நெருப்புக் கோழியுமில்லை
நெருப்பென்று விலகிச் செல்ல_என்
நெஞ்சிலே துணிவுமில்லை...

சுட்டிடும் சூரியனை
சுற்றிடும் பூமியாக‌
எட்ட நின்றேனும் பார்த்திடுவேன்
ஏங்கிடும் இதயத்தை
தாங்கிக் கொண்டே.....

Wednesday, October 13, 2010

காதலுக்கே காதல் பரிசு


( நம் வாழ்வில் நடந்தால் மட்டும் தான் கவி எழுதமுடியுமா?
பிறரையும் என்னைப் போல் எண்ணியதால் எழுதியது தான் இந்த கவிதை)


என்னை தெய்வம் என்றாள்
என் தாய்...
தேரில் வந்த தேவதை என்றார்
என் தந்தை....
தேன் மதுர கவி என்றாள்
தோழி....
எதிலும் அசையாத என் மனம்
நீ "உயிரே" என்ற போது
உருகி ஓடியது ஒரு நொடி...

அன்றிலிருந்து
பறந்தேன் ..பறந்தேன்
பரவசத்தில் விண்ணை த்தாண்டி மிதந்தேன்..

விண்மீனை உமக்கு பரிசளிக்க‌
மீண்டும் மண் நோக்கி தவழ்ந்தேன்...

வழிபோக்கன் சொல் கேட்டேன்
வராதே பெண்ணே
நிஜம் வேறு நிழ‌ல் வேறு
நிஜம் நிஜமாகி விட்டது
நீ வெறும் நினைவாகி விட்டாய் என்று...

நொறுங்கிப் போனேன் நான்
அழுதேன் அரற்றினேன்
பித்து பிடித்து பேதலித்தேன்..

தெளிகையில் மனம்
தெளிவாய் சொன்னது
உன்னை உயிரென்ற உடல்
அதன் உயிரோடு சேர்ந்தது
உன் காதல் உண்மையெனில்
விட்டு கொடு " உன் உயிருக்காக"என்று..

இடிந்து போன என் இதயம்
இறுக மூடி க்கொண்டது
இம்மையில் மட்டுமல்ல‌
மறுமையிலும் எவரும் நுழையாதிருக்க.....

Monday, September 6, 2010

மறுக்கப்பட்டக்காதல்


நாம் பேசாத நாளெல்லாம்
கனவினில் நீ வந்து
என் கால்களை தடவிப் பார்
தழும்புகளின் எண்ணிக்கை
எகிறி போயிருக்கும்
என் இதய துடிப்பை போல...


தீராத மோகத்தில்
தீயும் முத்தமிட‌
தங்க நிற தோலிலே
கருப்பு நிற வட்ட நிலா...
வருடிக்கொண்டே வாழ்ந்திடுவேன்
உன் நினைவின் பதியமென்று...

என்றாவது ஒரு நாள்
என் மரணச் செய்தி
கேட்க நேர்ந்தால்
மறுக்காது ஒத்துக்கொள்
விதைத்தது நீயென்று...

மறுஜென்ம விதியிருப்பின்
விதிவிலக்காய் வேண்டிடுவேன்
வீணாய் போன மனிதனை விட‌
மந்தியாய் பிறப்பெடுக்க..
மறுக்கப்பட்ட காதலது
மறுபடியும் துளிராதிருக்க‌.........

Thursday, August 12, 2010

எரி தழல் ஏந்தி வா.....


விண்ணும் விரிசல் விழ‌
விளைநிலமெல்லாம் வீடாக‌
வியர்வையை முத்தாக்கி
விளைவித்த நெல்மணியை
தன் சொத்தாக்கி
சோறு போட்ட விவசாயி
வாழ்வில் சோகம் போக்கிட‌
எரிதழல் ஏந்தி வா.....

பள்ளிச் செல்லும் பட்டாம்பூச்சி
பசியினை பகடையாக்கி
பிஞ்சு பொன்விரல்கள்
கன்றி தழும்பேற,
கட்டிய கனவுக்கோட்டையை
காற்றில் சுக்கு நூறாக்கும்
சுய நல அரக்கனை அழிக்க‌
எரிதழல் ஏந்தி வா....

அன்னையால் பிறந்தும்
தங்கையோடு வளர்ந்தும்
தாரமாய் வந்தவளின்
தங்க குணம் பாராது
தங்கத்தை எடைபோட்டு
அவள் அங்கத்தை பஷ்பமாக்கும்
வரதட்சணை அரக்கனை
வேரோடு அழிக்க‌
எரிதழல் ஏந்தி வா....

கருவிலே உருவாக்கி
உயிரையே திரியாக்கி
ஊண் உருக உனை வளர்க்கும்
உன்மத்த பெற்றோரின்
உள்ளம் தகர்த்து
முதியோர் இல்லம் அனுப்பும்
முட்டாள்களை மூழ்கடிக்க‌
எரிதழல் ஏந்தி வா...

Thursday, August 5, 2010

தோல்வியிலும் வென்ற காதல்

பல்லவர் காலத்தில்
பதியம் போட்டு
பாதியில் பறித்தெரியப்பட்ட‌
பாராசீக ரோஜா
வீதியில் வீழும் முன்னே
வீழ்ந்தது உன் விழியில்
புதைந்தது உன் மனதில்...

தொல் பொருள் ஆராய்சியாளர்
தோண்டி தோண்டி பார்த்தாலும்
தோராயமாக கூட
ஆராய முடியாது
புதைந்து போயும்
சிதைந்து போகாத‌
சிற்பமான என் உருவம்......‌

எண்ணூறு ஆண்டுகள்
என்னைச் சுமந்த உன்னை
இந்நூற்றாண்டில் உணருகையில்
உச்சி முதல் பாதம் வரை
உதறல் கண்டே
உள்ளிருப்பு போராட்டம்
தொடர்ந்து கொண்டேன்...

தோல்வி நம்மை தொடரும் வரை
தோற்று போவது நாமல்ல,
வேற்றுக்கிரகம் போனாலும்
நம்மை வேரறுக்க யாருமல்ல,
ஊணில் உயிரில் கலந்த பின்னே
விடும் மூச்சுக் காற்றும் வேரல்ல,
நம் மூச்சு நின்று போனாலும்
முற்றும் போடும் உறவும் அல்ல.....‌

தாய் பாலின் மகத்துவம்


தாய் வழி பிள்ளைக்கு
தானாக தேனாக‌
தங்க பஸ்பமாக‌
ஊணாக உயிராக‌
இரத்தமெல்லாம் பாலாக‌
பாசத்தின் உச்சமாக‌
பாலூட்டும் போழ்தினிலே
பாவையரெல்லாம்
பாரினிலே
பரமனை விட உயர்ந்து விட்டோம்....

பிள்ளை கனியமுதை
அள்ளி அணைத்து
அமுதூட்டும் நேரமெல்லாம்
அதனோடு கை கோர்த்து
துளியூண்டு பசி போகும்
மலையளவு பாசமேவும்...

நோய்க்கு விடை சொல்லும்
நோய் எதிர்ப்பு திரவம்
தினம் தினம் தாய் தரும்
தாய் பாலின் வடிவம்...
தாய்மையின் புனிதத்தை
தானாக நிறுத்திடாது
தாராளமாக கொடுத்திடுக‌
கொஞ்சும் குழவி வளரும் வரை

Wednesday, July 14, 2010

கலைந்திடும் கனவு.....



கனவு கோட்டைக்குள்
காதல் தூளிக் கட்டி
காலமெல்லாம் ஆடி களிக்க‌
அப்பாவி ஒரு கிளி ஆசை பட,
ஆண்டவன் சிரித்துக் கொண்டான்
ஆடு பெண்ணே ஆடு ‍_உன்
அல்பாயுள் முடியும் வரை ஆடு..

நிஜம் எரித்து
நிழல் நிர்மூலம் ஆன போது
உறைத்தது உண்மை
யாரோ எழுதிய பாடல் வரியில்..
கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்...

Saturday, July 10, 2010

காதல் விஸ்வரூபம்

கானல் நீரான காதலை
கண் முன்னே காணுகையில்
கற்பனை வளமென்று
கண் மூடி யோசித்தேன்....

உன் பாச வெள்ளத்தில்
பாதி மூழ்கி போன போதும்
பார்ப்பது கனவென்று
பக்கத்தில் பேசிக்கொண்டேன்...

ஈராண்டு தேக்கத்தை
இரு வரியில் இயம்புகையில்
இதயச் சுவரெல்லாம்
இரத்தச் சுனாமி கண்டேன்...

வெறி பிடித்த வேங்கையாய்
என்னை வேட்டையடி வெல்லுகையில்
வேறெதும் தோணாது
அன்பில் கூட அஹிம்சை கண்டேன்...

அண்ணாந்து நான் பார்க்க‌
விண் முட்ட உன் உருவம்
உன்னுள்ளே எனைக் காண‌
எமனையும் எதிர்க்கும் கர்வம் கொண்டேன்.

காதல் வளர்த்தேன்

காதலியே காதலி என்றாய்
காதல் கொண்டேன்
நானும் உன் மேல்....

கசடில்லா காதலோடு
கையை பிடித்தாய்,
கட்டியணைத்தாய்,
கைப்பிள்ளையாய் எனை மாற்றி
கன்னம் சுவைத்தாய்,
கண்களது கள்வெறி கொள்ள‌
அன்பனைத்தும் அள்ளி குடித்தாய்,
அன்றே
என் ஆணிவேரை
அசைத்து பார்த்த‌
உன் உள்ளத்தை காதலித்தேன்,
உணர்வை காதலித்தேன்,
உன்னுள் இருக்கும்
என்னை காதலித்தேன்,
எனக்காக துடிக்கும்
இன்னொரு இதயம் என்ற‌
இறுமாப்புடன் இறுதியில்
உன்னை நான் காதலித்தேன்.....

தமிழ் ஊறிய சமூகத்தில்
பெண்ணாகிய பாவத்தால்
மண்ணாகி மறையும் வரை
மனம் குளிர காதலித்தேன்
காதலிக்கிறேன்
காதலித்துக்கொண்டே இருப்பேன்.......

எனக்கே எனக்கு


நாய் பெற்ற‌
தெங்கம்பழம் அல்ல நீ
நான் கேளாது பெற்ற
தங்க வரம்.....

வரம் கொடுத்த சாமியே
வந்து நின்று கேட்டாலும்
வன்மையாய் மறுத்திடுவேன்
தண்மையாய் உணர்த்திடுவேன்........

தாயான பின்பு
நான் கேட்ட‌
முதல் தாலாட்டு கவிதை நீ......

தான் தோன்றி சுயம்புவாய்
என்னுள் வளர்ந்த‌
காதல் சொரூபம் நீ......

சொக்கப்பனை சாம்பலை
பூக்கச் செய்த‌
சோலை நிலவொளி நீ....

பாலைவன மனதை
பரவசப்படுத்திய‌
பசுந்தளிர் நீ....

உன்னை பகிர்ந்தளிக்க முடியாது
பரிதவிக்கும் எனக்கு
நாய் பெற்ற‌
தெங்கம்பழம் தான் நீ.....

Monday, June 14, 2010

நிஜத்தின் நினைவுகள்


காலை பனியிலே பனித்துளி
மாலை பூவிலும் மழைத்துளி

உலகம் உறங்கையில்
உன்னுள் கேட்கும்
என் மன ஒலி....

இமைகள் தழுவையில்
எனக்குள்ளும்
அதன் எதிரொலி......

பாதி ஜாமம் விழிக்கையில்
என் செவியிரண்டில்
உன் சிரிப்பொலி......

மறுபடியும் உறங்கையில்
உணருகிறேன்
உள்ளமெங்கும் புது வலி.....

உயிரும் உணர்வும் கலக்கையில்
உன்னை என்னை கேளாது
உடல்கள் இயங்கும் தனி வழி.....

நினைவு

மூடுபனியால் மூழ்கி
உறை பனியால் உறைந்து
ஊணும் உடலும்
விரைத்து விட்ட போழ்தினில்
உள்ளம் மட்டும்
வியர்த்துக் கொட்டி போனதடா
உள்ளிருக்கும் உன் நினைவால்

Sunday, June 13, 2010

மூணார்


மூன்று நாட்களாக தேடியும்
முழுவதும் தெரியவில்லை
முற்றிலும் மூடப்பட்ட‌
மூணாரின் முகவரி...

தேயிலையின் மலை குடைந்து
தேரென ஊர்ந்து சென்று
'தெய்வத்தின் திருநகரின்'
வீதி வரைச் சென்று விட்டோம்...

விடிந்த பின்னும்
விலகவில்லை
விண்முட்டும் பனிப்புகையும்
வியப்பூட்டும் மழைதுளியும்....

வியந்து வியந்து பார்த்தாலும்
விளங்காத அழகுடன்
விடியலிலும் விண்மீன்கள்
மின்மினியெனும் பெயரோடு...

கண்மணி என் கண்களது
கலர் குருடு ஆனது போல்
காணும் இடமெல்லாம்
பச்சை வண்ணம் படமெடுக்க‌
மீதி வண்ணம் தேடி நின்றேன்
மீண்டும் மலையிறங்கி
மதி மயக்கம் தீரும் வரை.....

Thursday, June 3, 2010

நண்பர்

[எனது நண்பர் தினேஷ் பாபு விற்காக எழுதிய கவிதை]


அறிமுகமோ பல வருடம்
அருகாமையோ சில வருடம்,
ஆண்களென்றால் ஆண்டவனாம்
அகராதி பிடித்த உலகத்தில்.....

உன்னில் நான் கண்டேன்
உவர்ப்பில்லா ஒரு உள்ளம்,
பார்வையில் தெரிந்த உன் உருவம்
பழகி பார்கையில் மழலை வடிவம்....

குழம்பியது மனம்
புலம்பியது தினம் தினம்,
தாலாட்ட தாய் வேண்டாம்
தட்டிக் கொடுக்க நீ போதும்...

தாளாது அழும் வேளை
நான் சாய உன் தோள் போதும்...

எழுத நினைக்கையில் எல்லாம்
ஊற்றெடுக்கும் வார்த்தைகள்
உன்னைப்பற்றி நினைக்கையில் மட்டும்
கறைபுரண்டோடியதே...
ஓ..... இது தான் "நட்பீர்ப்பு " சக்தியோ???

Sunday, May 23, 2010

நரக சுகம்

ஊர் உறங்க‌
உலகம் அடங்க‌
என்னுள்
அடங்கா மிருகம் ஒன்று
அசை போட்டு எழும்ப‌
எகிறி குதித்த இதயத்தில்
ஏறி இறங்கியது
இரத்தம்‍_அதன்
அணுவெல்லாம் உனது
சத்தம்.......

சத்தத்தின் சங்கீதமா
இரைச்சலின் இம்சையா,
இரண்டுக்கும் இடைப்பட்ட
இனிய அவஸ்தையா,
ஹார்மோனின் நர்தனத்தில்
நடு இரவு நரக சுகமா?....

நானறியா நாரத கலகம்
ஐம்புலனில் அரங்கேர,
அசைவற்று கிடக்கிறேன்
ஆறாவது புலனில்
உன்னை சுமந்து....

Thursday, April 1, 2010

தெளிவு கொள்....

நிலவினில் வாழும்
நிலா பெண் நீ,
நட்சத்திரத்தை நம்பி
நலிவடைந்து போகாதே....

விண்மீன்கள் வியந்திடும்
செங்காந்தல் மலர் நீ,
உன் கூந்தல் மணம் சேர்க்க‌
மின் மினி பூ போதாதே...

செந்தூரான் சேவடியில்
பொற்றாமரை மலர் நீ,
சேற்றுக்குள் மூழ்கிடும்
செந்தாமரை ஆகாதே...

புரிந்து கொள் பெண்ணே!
புன்னகைக்கும் புது மலர் நீ,
மணம் வீசும் மனம் கொள்
மனம் கொல்லும் குணம் கொல்லாதே....

பூவுக்குள் பூகம்பம்
மனதுக்குள் எரிமலை
மழை நீராய் உன் நெஞ்சம்‍‍_அதில்
கலந்திட்டதே காதலென்ற துளி நஞ்சும்...

தூசி தட்டி எழுந்திடு
சூரிய கதிர் பிடித்திடு
தூரிகையாய் நினைத்திடு
தூயவளாய் உனை வரைந்திடு...

Tuesday, January 12, 2010


மண்ணோடு மண‌ம் புரிந்தும்
விண்ணேடு கரம் சேர்க்கும்
முறையில்லா ம‌ர‌ங்களுக்கு
பெயர் கூட தெரியவில்லை..

வெட்டி வைத்த‌
கேக் துண்டுகளாய்
வட்ட வட்ட
தேயிலைகள்....

விமான பயணம்...


அன்று
அண்ணாந்து பார்த்த‌
ஆகாய பறவை,
இன்று
என் அரையடி தொலைவில்..

ஆனந்த அதிர்வில்
அதனுள் அமர‌
சூரியகதிரோடு கைகோர்த்து
கடலை பார்த்து
கண் சிமிட்டியது..

மேகத்தை முத்தமிட்டே
மேல் நோக்கிச் செல்ல செல்ல‌
மேனியெல்லாம் சில்லிட‌
எட்டி பார்க்க எத்தனிக்கையில்
பூளோகமே ஒரு புள்ளியானது..

நாற்பது நிமிடம்
நானிலம் மறந்தேன்
நானென்பதும் மறந்தேன்
வின்னிலே மிதந்தேன்
இலங்கையை அடைந்தேன்...

மண்ணை
தொட்டன எம் கால்கள்
முத்தமிட்டன அவர் உதடுகள்..
பிறந்த மண்ணை
பிரிந்த துயரில்
இறுகிய அவர் இதயம்
இணைந்த மகிழ்வில்
இளகி கசிந்தது..

அசோக வனம்...


அழகிய வனம்
அதிலொரு பயணம்
அடர்ந்த காட்டுக்குள்
அசோக வனம்...

அழகின் உச்சமென‌
அதிலொரு குளம்
ஆற்றின் மறுபக்கம்
அனுமனின் பாதம்...

உள்ளம் களிகொள்ள‌
உலகம் மறந்தேன்
உறைந்திடும் பனி நீரில்
பாதம் நனைத்தேன்...

சுட்டது தண்ணீர்
சுருக்கென பட்டது மனதில்,
இது தண்ணீரல்ல‌
சீதை அழுத கண்ணீர்...

கண்ணனின் காதலி‍‍-என்
கண்களில் நீர் துளி,
காதலின் பிரிவெண்ணி
ஆற்றில் கலந்தது
மீண்டும் என் நீர் துளி.....