Sunday, December 13, 2020

நவ ஜோதிர்லிங்க தரிசனம்.

எங்கள் நீண்ட நாள் கனவை நினைவாக்கியது, 

இந்தியன் ரயில்வே.
நவ ஜோதிர் லிங்கத்தை தரிசிக்க, 

ரயிலில் முன்பதிவு செய்துவிட்டு, 

உடலையும், உள்ளத்தையும் தூய்மை படுத்திக் கொண்டோம்.

பயணத் தேதி 1/08/2018 . நாங்கள் ராமநாதபுரம் என்பதால் 

50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராமேஸ்வரம் சென்று, 

ராமநாத சுவாமி தரிசனம் பண்ணி 

9 தீர்த்த பாட்டில்கள் வாங்கிக் கொண்டு 

ரயில் ஏறினோம்.. 

முதல் வகுப்பு ஏசி பெட்டி உடலோடு சேர்ந்து உள்ளமும் குதூகலித்தது.. 

ஆந்திர மாநிலம், "ஸ்ரீசைலம்" சென்று பேருந்துக்கு மாறி,  

ஏழு மணிநேர மலை பயணம்.. 

செல்லும் வழியில், சிறுத்தை ஒன்று கண்ணில் பட, 

ஒரு நிமிடம் எகிறியது இதயம்.. 

அதிகாலை 5 மணிக்கு மல்லிகார்ஜுனாவை தரிசனம் செய்தோம்...

அடுத்து நர்மதை நதிக்கரையில் அமைந்துள்ள 

ஓம்காரேஷ்வரர் ஐ நோக்கிய பயணம், 

ஆடி பதினெட்டு நர்மதையில்,

 நீராடும் பாக்கியம் பெற்றோம்..
நதி உடலை நினைக்கையில் உள்ளம் சிலிர்த்தது.. 

சிவனை தரிசிக்கும் தீவிரத்தில், 

பணப்பையை தவற விட்டு, மீண்டும் அது கிடைத்த தருணம், 

அவன் அருளை அன்றே உணர்ந்தேன்.

 அடுத்து மாகாளேஸ்வரரை, மனதார வேண்டிக் கொள்ள, 

மத்திய பிரதேசம் நோக்கி பயணம்.. 

அங்குள்ள சிவலிங்கங்களை தொட்டு, 

தன் கையால் கொண்டு சென்ற தீர்த்தத்தினால் 

அபிஷேகம் செய்யும் பாக்கியம் பெற்றோம்..

அடுத்ததாக குஜராத் மாநிலத்தில் உள்ள சோம்நாத் ஆலயம், 

பழைய மற்றும் புதிய ஆலயம் 

கடற்கரையோரம் அமைந்த அற்புதம்.. 

சோமநாதரை தரிசித்த அசதியில் 

அன்றிரவு ரயில் பெட்டியில் அருமையான உறக்கம் அற்புதமான உணவு பல்வேறு மொழிபேசும் மக்களை பார்த்துக்கொண்டே, 

அடுத்த நாள் பயணம் பீம் சங்கரை தரிசிக்க சென்றோம்.

குளிரோடு பனியும், 

மழையும் போட்டி போட்டு அடித்து நொறுக்க,

 சிவனை காணும் எண்ணத்தில் 

அவற்றை அலட்சியப்படுத்தி படியிறங்கி, 

மீண்டும் படியிறங்கி, அப்பப்பா....... 

நானா இவ்வளவு செய்தேன் என்று எண்ணும் அளவு இருந்தது..
பீம் ஷங்கரை, என் கையால் தொட்ட கணம், 

மனம் கரைந்து, காற்றில் மிதந்தது...

திருக்கம்பேஷ்வர், மற்றும் கிருஷ்நேஷ்வர் ஆலய தரிசனம் முடித்து, திருநாகேஸ்வரம் சென்றோம்... 

அங்கே ஒருவர் மட்டும் செல்லும் பள்ளம் , 

மனதில் அச்சத்தோடு உள்ளே இறங்கினால், 

அங்கே சிவன் என்னை இரட்சிக்க 

அவர் மீது சிரம் தாழ்த்தி தொட்டு வணங்கி 

ஒரு பக்தர் துணையோடு மேலேறி வந்தோம்...

காசி மற்றும் கேதார்நாத் தவிர்த்து,
10 சிவ தலங்களை தரிசித்தது... 

நர்மதையின் குளித்தது... 

பழக்கப்படாத உணவுகளை உண்டது.... 

பலதரப்பட்ட மக்களிடம் பழகியது 

ரயில் சினேகிதம் கொண்டது.... 

தவறவிட்ட பணம் திரும்பக் கிடைத்தது... 

சிறுத்தையை நேரில் பார்த்தது... 

தானே தன் கையால் சிவனுக்கு அபிஷேகம் ஆராதனை பண்ணியது... அனைத்தும் மனதில் அசைபோட, 15 நாள் போனது தெரியாமல் மதுரை வந்து இறங்கினோம்..

 தென்னிந்திய கோவில்களை ஒப்பிடும்போது 

வெளிப்புற தூய்மை வட இந்திய கோவில்களில் குறைவு, 

ஆனால் ஆலயத்திற்குள் சென்று வந்தால், 

நம் மனம் தூய்மை மற்றும் அமைதி அடைவது நிச்சயம், என்று இக்கட்டுரையின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன். 

         "சர்வம் சிவமயம்"

 K.Umarani karunamoorthy,
Inner wheel club of Ramnad,
321.
PH.No. 9487754727

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

ஒவ்வொரு மணியாக கோர்த்து, 

என்னை ஒரு மேகலையாக மாற்றியவர்,

 என் ஆசிரியர் திருமதி மணிமேகலை... 

தாய்ப்பால் ஊட்டி என் உடல் வளர்த்தது 

என்னைப் பெற்ற தாய் என்றால், 

தமிழ் பாலூட்டி என் உயிர் வளர்த்தது 

இவர் அன்றி யாருண்டு?? 

தலையில் தட்டி தட்டி, தமிழை என்னுள்ளே இறக்கி, 

இலக்கணம், இதிகாசம், இலக்கியம், 

இயல் இசை நாடகம், நடனம் மற்றும்  

அனைத்திலும் நாட்டம் கொள்ளச் செய்தவர்.. 

மூடிக் கிடந்த திறமைகளை 

வெளிக்கொணர்ந்த திறவுகோல்... 

அன்று அவரது முயற்சி 

மனதுக்கு அயர்ச்சி ஊட்டினாலும், 

இன்று நினைக்கையில் 

நிலையில்லா நிம்மதி கிடைக்கிறது... 

என் வாழ்வில் கிடைத்த ஒரு பொக்கிஷம் 

திருமதி மணிமேகலை ஆசிரியை👑 

அவர்களுக்கு என் நன்றி என்றும் உரித்தாகுக 🙏.. 

வாழ்க வளமுடன்.

K.Umarani
Innerwheel club of Ramnad,
Dist 321,
9487754727

மகளெனும் தேவதை

தேவன் நமக்கு அருளிய தேவதைகள், தேடினாலும் கிடைக்காத தங்கத்தாரகைகள்,
அவள் தத்தித் தத்தி நடக்கையில் 

மனதை கொத்திச் செல்லும் கொலுசொலி.... 

கொஞ்சி கொஞ்சி சிரிக்கையில் 

சிறிதாகும் மனவலி.... மகள்
"பேதை"
பெண்ணாகி போதை மொழி பேசி
"பெதும்பை" பருவத்தில் புதுமை பலசெய்து.... 

"மங்கை" மலராகி, மனதில் மகிழ்வோடு 

"மடந்தை" அவள் மணமாகி, 

மணாளன் கரம் கோர்த்து, 

மறுவீடு செல்லுகையில் 

நம் மனதில் வரும் உயிர்வலி..


"அரிவை" அவள் கையில் அடுத்தடுத்து, 

அச்செடுத்த பதுமைகள்... 

ஆண்டவனின் அருள் கொடையில் அன்றே மூழ்கி விட்டோம்..

 "தெரிவை" பருவத்தில் அவள் தேவதை ஆகி ,
"பேரிளம் பெண்ணாய் பார்போற்ற வாழ்ந்திடவே, 

மகள் பெற்ற நாமெல்லாம் மகராசிகளே 👍.

👆
பெண் குழந்தைகளைப் பெற்று 

அவர்களால் நாம் பட்ட சந்தோஷத்தையும்

 பெண்ணின் ஏழு பருவங்களான 

"பேதை பெதும்பை மங்கை மடந்தை அரிவை தெரிவை பேரிளம்பெண்" இவற்றை சேர்த்து கவிதையாக்க முயற்சித்து இருக்கிறேன்...

பெண் குழந்தைகளை பெற்ற அனைத்து அம்மாவிற்கு சமர்ப்பணம்🙏


    # உமாராணி கருணாமூர்த்தி #

முதுமையின் ஏக்கங்களும் தீர்வுகளும்.


முற்றிய கனி போன்ற அனுபவச் சாறு நிறைந்தது முதுமை. 

அதை முழுவதும் பயன்படுத்திக் கொண்டால், 

பலன் நமக்குத்தானன்றி கனிக்கு அன்று என்பதை, 

முழுமையாக உணர்ந்தவர்கள்
முதுமையை போற்றுவர்..

முட்டி முட்டி வெளிவரும் விருட்சமாய், 

ஊரோடும் உறவாடும் போராடி 

நம்மை உயர செய்தவர்களை ஊரில் விட்டு, 

வேலை தேடி வெளிநாடு சென்ற பின்னே, 

வெறிச்சோடி வீட்டில் அவர்கள், விட்டத்தை பார்த்து, 

வீற்றிருக்கும் மனவலி அப்பப்பா...

அதைவிடக் கொடியது,  
ஒரே வீட்டில் ஒரே அறையில் முடங்கி இருப்பது..... 

ஒருவாய் காபிக்கும், 

ஒருவேளை உணவுக்கும் 9 மணி வரை,

 பிறரை எதிர்பார்த்து காத்திருக்கும், 

முதிர்ந்த குழந்தையின், 

எண்ண ஓட்டத்தை எண்ணிப்பார்க்க மனம் வலிக்கிறது...

60  பேர் வந்தாலும் முகம் சுளிக்காமல் 

மூன்று வேளையும் உணவளித்த கைகளும் 

ஆறு கிலோமீட்டரை  அசால்டாக நடந்த கால்களும் 

இன்று வலுவிழந்து அறைக்குள் முடங்கி கிடப்பதை எண்ணி 

முதுமை மூச்சு முட்டி அழுகிறது...

"தனிமை தானே எடுத்தால் இன்பம் தரும், 

பிறர் கொடுத்தால் துன்பம் தரும்"
 
தனிமையை விரட்டும் தானியங்கி தேவதைகள் 👼 தன் பேரப் பிள்ளைகள்... அவர்கள் தாவி வந்து தன் மடி ஏறி,
பழங்கதை சொல்லச் சொல்லி கேட்கையில்,

 தன் தாயை பார்த்ததுபோல், 

தழுதழுத்து போகிறது பெரியவர்கள் மனது...

 மாதம் ஒருமுறையேனும் மகளோ, மகனோ தன்னை வந்து பார்க்க வேண்டி தவிக்கிறது தந்தை மனது... 

தாலாட்டி வளர்த்த தன் பிள்ளை தனக்கு சோறூட்ட சொல்லி துடிக்கிறது தாய் மனது...
சொர்க்கத்தில் நமக்கு தூளி கட்டிய ,
தூய மனம் இன்று துவளுகிறது தனிமை கண்டு...

முதுமை நோய் அல்ல முற்றிய அனுபவத்தின் பெட்டகம் 

அதை என்றும் பேணி காப்பது நமது கடமையாகும்.


Innerwheel competition ku yeluthiyathu.


 உமாராணி கருணாமூர்த்தி

Wednesday, July 22, 2020

ரோட்டரி சங்கம் வாழ்த்துக்கள்.💐

ஆழி பெருங்கடலை,
அசால்ட்டாக கடந்து,
அன்பை தெளிக்க,
ஆண்டவன் அருளிய
அருள் பெரும் கொடை
ரோட்டரி சங்கம்..

சுற்றும் பூமி சோர்ந்தாலும்,
சூழலும் இச்சக்கரம்,
சோர்வுற்றுப் போனதில்லை..

சோதனையை சாதனையாக்கி,
வேதனையை வேரறுக்க,
ஆரங்களாய் இணைந்த,
அச்சாணி நாங்கள்....

ஊரடங்கு உடலுக்கு தான் அன்றி,
உணர்வுக்கன்று என்ற உந்துதலுடன்,
கோரத் தாண்டவத்தில்,
கோவிலுக்குள் இறைவன்(Rotarians )
மாட்டிக் கொண்டாலும்,
கணினி வழியே காரியம் ஆற்ற வந்த
கந்தர்வ கூட்டம் நாங்கள்....

போக்கு காட்டிய போலியோவை
போதுமென வெருண்டோட,
புதிதாய் வந்த கோவிட்டுடன், 
கிரிக்கெட் ஆட போகும்,
ராகுல் டிராவிட் நாங்கள் 💪...

நாடு நகரம் கடந்து
மனிதம் இணைத்த மனிதரில்,
திரு பார்த்திபன் துணையோடு
பணியாற்ற வந்த
திருமதி கீதாவை,
கீதையின் நாயகன், வழிநடத்த,
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.💐

# உமாராணி கருணாமூர்த்தி#

பிறந்த நாள் வாழ்த்துகள் Ishwarya.

அழகிய உயிரோவியம்
உன்னைப் பற்றி,
எழுத நினைக்கையில்
வரிகளெல்லாம் வரிசைகட்டி
காததூரம் ஓடுவ "தேன்??

உன் கண் மலர் 
திறக்கக் கண்டு
அல்லிமலர் எல்லாம்
அழுது புலம்புவ"தேன்??

அமைதியின் அடுத்த வாரிசு
நீ என்று, சொற்களெல்லாம்
சொல்லாடல் நடத்துவ"தேன்??

செல்வத்தில் குளித்த,
குலமகள் உன்னை கண்டு ,
அந்த மலைமகளும் மலைப்ப"தேன்??

உயிர் ஓவியமா உன் மகள்
என் உயிர் வாங்கும் அழகோவியம்
என்று மதி அங்கலாய்ப்ப "தேன் ??

"தேன்" " தேன்" " தேன்" என
தேனூறும் கேள்விக்கெல்லாம்
நான் கூறும் ஒரே பதில்,,
எதிர்கொள்ள முடியா ஏகாந்தம் நீ..
எம்பிரான் அருள்பெற்ற
அன்பு ஊற்று நீ...

தேனூறும் வார்த்தைகளால்,
என் தேவதைக்கு,
வாழ்த்துப்பா பாடுகிறேன்
 "வாழ்க வளமுடன்" 

                 # உமாராணி #

உயிரின் மகத்துவம்.


உயிர் கொடுத்த தாயும்
உயிரான நட்பும் உடன் இருக்க,
உயிரைத் துச்சமென துப்பி விடாதே...

கொல்லவரும் கொரானாவே,
பல்கிப்பெருகி வளர்கையில்,
பல்லுயிர் காக்கும் தேவன் நீ
தெளிவு கொள்ள வேண்டாமா??

முடிவெடுக்கும் முன்
முழுவதும் யோசி..
உலையென கொதிக்கும்
உன் மனதை,
ஊரடங்கு நேரத்தில் உற்றுக் கேளு..

உன்னுள் ஊறும் அன்பு ஊற்றால்
அகிலத்தை குளிப்பாட்டு...
திறமையை திரியாக்கி
அறிவாற்றலால் ஒளி ஏற்று...
மனிதம் மரித்த மனிதர் மத்தியில்,
ஈதலினால் இறைவன் ஆகு...

இதையும் தாண்டி
உன்னை வெறுத்தவர்காக,
உயிர் கொடுக்கத் துணியும் முன்,
உன்னிடம் ஒரு வார்த்தை...

அன்னை மனதோடு
அன்புத்தோழி நானிருக்க,
என்னிடம் வந்து  ஒரு முறை பேசு..
மன அமைதிக்கு
அஸ்திவாரம் நான் அமைக்கிறேன்.

# உமாராணி#

காதலர் தின வாழ்த்துகள்.

என் இமை திறக்க
விழி நுழைந்து,
என் மனம் மதித்த
மகத்தான மானிடர்
அனைவருமே
என் காதலர்கள் தான்👩‍❤️‍👩👩‍❤️‍👩...


முதல் முத்தமிட்ட அன்னையே

என் முதல் காதல்❤️...

முற்பிறவி பயனாய்

நான் பெற்ற நாயகரே

இரண்டாவது காதல்💞...


முக்கோடி தேவர்கள் வாழ்த்திட

வந்திறங்கிய 4 தேவதைகளே

மூன்றாவது காதல்💕❤️....


நல்லோர் ஆசியால்

நான் பெற்ற நண்பர்கள்

நான்காம் காதல்💕💕 ...


சிரிக்கும் சித்திரமாய்

சிதறிய மொழிபேசும்

மாங்கனி மழலைகளே

ஐந்தாம் காதல்💘💘💘...


ஆதி முதல் அந்தம் வரை

என்னை அடிமையாக்கி

அன்பால் ஆட்டிப்படைக்கும்

அனைத்து காதலர்களுக்கும்,

இனிய காதலர் தின வாழ்த்துக்கள்.



#உமாராணி#

மருத்துவர் தினம் நல்வாழ்த்துகள்🌹.


மருத்துவராகும், என் கனவு
கலைந்தனாலோ என்னவோ,
மருத்துவர்கள் மீது எனக்கு
ஒரு மகத்தான மரியாதை உண்டு 👑...

மண்ணில் தோன்றிய
மாணிக்க தேவதைகள்,
மானிட ஜாதியின் ஜீவஜோதி,
சுடர்விடும் தளிர் கொடிகள் நீங்கள்...

வாரந்தோறும் விடுமுறையால்
நாம் விட்டத்தை பார்த்து வீட்டில் இருக்க..
உயிரின் உன்னதம் காக்க,
வீடு என்பதை துறந்து ,
விடிய விடிய போராடும்
மின்மினி பூச்சிகள் நீங்கள்.. 🩺

முகக் கவசம் இன்றி வீதியில் திரிந்து
யார் மூச்சடைத்து நின்றாலும்,
உயிர் கவசமாய் உடனிருந்து,
எம்மை காக்கும் இறைத் தூதுவர்கள் நீங்கள்.. 😇

கோவிட் அச்சத்தில் அந்தக் கடவுளே,
கருவறையில் கலங்கி நிற்கையில்,
களமிறங்கி களப்பணியாற்றும்,
புண்ணிய ஆத்மாக்கள்  நீங்கள்..🙇‍♂️

தேவன் என்றால்
தேரில் தான் வரவேண்டுமா என்ன...
தேவை அறிந்து தேடிச்சென்று,
சேவை புரியும் ஆண் தேவதைகளுக்கும்
சேர்த்து சொல்வோம்,
மருத்துவர் தின நல்வாழ்த்துக்களை 💐.

 #உமாராணி கருணாமூர்த்தி#

Thursday, May 21, 2020

நட்பு !

*சும்மா இரு சுகமாயிரு* .


வீதியில் இறங்கி வேடிக்கை பார்க்க
அது என்ன " *ராகுல் டிராவிட்"* டா?
விதியோடு உரச வந்த " *கோவிட்* "
என்பதை மனமே நீ உள்வாங்கு.
சும்மாயிரு சுகமாயிரு,
சாத்திய கதவுக்கு வெளியே காத்திருப்பது,
காத்தோ, கருப்போ அல்ல..
நம்மை காவு வாங்க வந்த
" *கொரோனா* "
கொஞ்சம் யோசி..
உலகை காக்க, உன்னை சிறை வை ..
வாழும் கடவுளாவாய்..
உனக்குள் நீ பேசு,
உன்னையே நீ உணர்,
உன்னவளின் உள்ளம் பார்..
உன் பிள்ளை மொழி கேள்...
உத்தமனாய் நீ மாற,
உனக்களித்த ஒரு வாய்ப்பு,
*சும்மா இரு சுகமாயிரு.*
🙏உங்களை வேண்டி கேட்பது,🙏
# உமாராணி #

Wednesday, May 20, 2020

அக(ல்) விளக்கு ஒளி

விளக்கேற்றுதலின்,
விளக்கம் அறியாது,
வியாக்கியானம் பேசும்
வெள்ளந்தி மனிதர்களே...
நாங்கள் ஏற்றியது
வெறும் அகல் ஒளியல்ல,
எங்கள் அகத்தின் ஒளி...
அந்நிய தேசமே அசந்து நிற்கும்
ஒற்றுமையின் ஒளி ....
அடுத்த வீட்டுக்காரனுக்கு ,
நம் நலனை பறைசாற்றி
அவர் மனதில் ஏற்றிய
நம்பிக்கை ஒளி....
அறிவியல் கைவிட்ட
"கோவிட்"அரக்கனை
ஆன்மீகத்தில் அகற்ற,
அறிவிற்கு அப்பாற்பட்ட,
ஆண்டவனின் துணை கேட்டு,
மரபுவழி ஏற்றிய
மங்கல விளக்கொளி...
திருக்கார்த்திகை திரு விளக்கும்,
தீபாவளி ஒளி விளக்கும் ,
விளக்கிய உண்மை
உணர்ந்திருந்தால்,
இன்று
நாங்கள் ஏற்றிய அகல் விளக்கின்🪔
அருமையும் நிச்சயம் நீ உணர்வாய்.

🏡 ஊரடங்கு 🏡

முழுநீள ஊரடங்கு,
விளைவு..
முற்றிலும் செதுக்கின்றோம் வாழ்வை...
முப்பது வருடம் கழித்து....
முள்ளில்லா
மலராய் 🌹 ..
முற்றிய
கதிராய் 🌾...
முக்கனி
சுவையாய்🥭...
முதுமையும் இனிக்க💞.

Thursday, February 13, 2020

நமது சங்கம். ( Innerwheel club )



"ரம்ய பிரியா" தலைமையில்,
 ரம்மியமாய் தொடங்கி,
 "லட்சுமி" கடாட்ச தோடு, 
"கவி"தையாய் தவழ்ந்தபடி,
"கீதம்" இசைத்து
 "கவி"பாடிய பண்பட்ட சங்கமிது...

"விசா"ல பார்வையோடு,
 "அனிதா" "செல்வி" அரவணைக்க,
"வித்யா" தேவி அருளோடு,
 "நர்மதா" நதி போல்
 நளினமாய் வளர்ந்துவந்த
நமது சங்கமிது..

 இன்று "கவிதா"வுடன் கரம் கோர்த்து,
 நமது தோழமை சக்திகளோடு
சாதனை புரிய, "லட்சுமிவர்தினியை"
 மகிஷாசுரமர்த்தினி யாக
உருவேற்றிய உயரிய சங்கமிது...

 நீயும் நானும் இணைந்து நாம் ஆகி,
 நம் உறவுக்கு உதவிட உலகிற்கு
அறிமுகமான அற்புத சங்கமிது...

ஆண்டாண்டு வளர்ந்திட
ஆண்டவனை வேண்டுகிறோம் .

Inner Wheel club ku yeluthinathu.
glitters la veli vanthathu.


இறைவனுக்கு நன்றி

.
கர்மாவோடு ஆடிய
கண்ணாமூச்சி ஆட்டத்தில்,
கண் மூடித் திறக்கையில் 
முன்னின்று காத்தது,
"கருப்பனும் "அவர் "தங்கையும்"
தானன்றி வேறாரும் நானறியேன்...
மனம் கனத்த வேலை
கல்லாக தோன்றிய கடவுள் இன்று, 
கண்முன் கரைவதை கண்கூடாக காண்கிறேன்...
கால தேவதை கரம் கோர்த்து 
காலார நடை பயில, 
காலாவதியாகும் உன் கன்றிப் போன நினைவுகள்.
வராகி தாயின் தயவோடு 
வசந்தம் உன்னை வாரி அணைக்க, 
வாஞ்சையோடு வாழ்த்துகிறேன்.

இறைவா!

இறைவா!
உறங்கச் செல்லும் முன்

உன்னிடம் ஒரு வார்த்தை..
நாளை எழுந்தால் 

என்னைத் தேடி நீ வா ..
எழவில்லை என்றால்

 உன்னைத்தேடி நான் வருகிறேன்.. 
எப்படியாயினும் 
என் உயிர் உழல போவது 
உன்னோடுதான்.. 
இப்பொழுது கொஞ்சம் உறங்கச் செல்கிறேன்.

                        Good Night

*இருபதில் இறைவனும் நானும்.💞..

பத்து எண்றதுக்குள்ள
19 கடந்து 20 வந்து இறங்கியது..
இதயத்தில் ஒரு நிறைவு,
 இருந்தும் ஒரு வெறுமை..
இனிக்கின்ற மனதுக்குள் 
இறக்க முடியா ரணம் ஒன்று...
ரகசியமாய் கேட்டேன் 
என் இரட்சகனிடம், (இறைவன்) 
ஓடிப் போகலாம் வாவென்று💞..
வாழாத வாழ்வும், வளமான நாளும், 
இன்னும் இங்கிருக்க என்னோடு வந்து ....😡
ஏனிந்த யோசனை என்று 
போதனை வேறு சொல்லி சென்றான்😞 ..
பொசுக்கென்று பொங்கிய கண்முன்னே கலங்கலாய், 
அத்தனையும் அவன் பிம்பம்..
நண்பனாய், என் நாயகனாய் , 
நலம் விரும்பியாய் 👼...
மனம் புல்லரித்து புத்துயிர் பெற
எனது ராஜ்ஜியத்தில்
நானே மீண்டும் ராணியானேன்👑.
_*அன்புடன்* *உமாராணி*

என் உயிர் எங்கு உள்ளது...


நான் இழுக்கும் 
மூச்சுக்காற்றிலா..
முழு வேகத்தில் ஓடும்
 ரத்த ஆற்றிலா??
அல்லது 
சத்தமின்றி துடிக்கும் 
இதய ஒலியிலா??
ஓசையின்றி பெருகும் 
ஹார்மோன் அலையிலா??
அனைத்திலும் அந்நியப்பட்டு
ஆண்டு பல கடப்பேன்..
ஆனால் 
அரைநொடி நீ எனை மறுத்தால், 
மறுநொடி நான் இறப்பேன்.

For My Loveable Aarama.