Thursday, November 16, 2017

நானும் சர்க்கரையும்.


சர்க்கரை
எண்ணும் போதே
எச்சில் ஊறும்
ஏகாந்த போதை,
போகிற போக்கில்
ஆளை புரட்டிடும் பாறை..

சர்க்கரை ருசியில்
சலசலக்கும் ரத்தம்,
எதிர்கால சந்ததியரோடு
எதற்கு இந்த யுத்தம்?..

உண்ணாதே என்றுரைக்கவில்லை
உண்ணாதிருத்தல் நலனென்ற‌
நல்லெண்ணத்தில் நவில்கிறேன்
நயமுடன் நான் ..

நீரிழிவு உன்னை நீங்கிட‌
வெறுத்திடு வெள்ளை அரக்கனை,
கலந்திடு கரும்பு சர்க்கரையை
உணவே  என்றும் மருந்தாக...

நீயும் நானும்
நாளை வரும் நம்  தலைமுறையும் ,
ஆரோக்கியமாய் வாழ‌
தவிர்க்க வேண்டிய முதல் உணவு,
எதிக்க வேண்டிய முதல் எதிரி
சர்க்கரை என்னும் சாத்தானை..

                   இனிப்பை தவிர்த்து
                   இனிதே வாழ்வோம்.
                                                           

( ஆரோக்கியா மருத்துவமனையில் நடந்த கவிதை போட்டிக்கு எழுதி அனுப்பினது )

Thursday, October 12, 2017

மரபு

மாந்தர் நாம் விட்டுச்செல்வோம்
மரபின்  தடம்  நம் மக்களுக்கு..

திருவள்ளுவர் அருளிய
முப்பாலை அருந்தி
மூச்சு வளர்த்த மூத்த குடியினர்-

 நம் முதன்மை மரபான
தாய்மை போற்றுதல் முதல்
தனிமனித  ஒழுக்கம் வரை

நாடி பார்த்தல் முதல்
மூலிகை மருத்துவம் வரை,

மாப்பிள்ளை சம்பா முதல்
சித்ரகார் அரிசி வரை,

அவரைக்காய்,கீரை முதல்
ஆடு,மாடு வளர்ப்பு வரை,

அன்னியரை நாடாது
அனைத்தையும் பெறும் தந்திரம்
நம் மரபெனும் மந்திரம்...

மனித குலம் செழிப்புற
உரமின்றி வாழும் உக்தியும்,
மருந்தின்றி பெறும் சக்தியும்
நம் மரபின் உச்சமென்று
உணர்த்திடுவோம் உலகிற்கு.
வாழ்க வளமுடன்.
           
K.Umarani,    
ISO,
Inner Wheel Club or Ramnad,
 IW- 321
 ( Tamil nadu and kerala state level competition la !st priz vangiyathu )

Sunday, August 27, 2017

இறைவனுக்கு நன்றி.


முழுமதி நான்  திருமதியாகி
முப்பது வருடம் முந்திக் கடந்தன
மூச்சு விடும் நேரத்தில்.
முக்தி பெற்றது வாழ்வு,
முருகனின் அருளோடு...

பதினேழில் கரம் பிடித்து,
பக்குவமாய் எனை மாற்றி,
பாசத்தை பதியமிட்டு,
பல வண்ண ரோஜா நான்கு பெற்று,
நாளும் பொழுதும் எமைக் காத்த,
நற்றுணை நாயகனே!

நானிலமே எதிர்த்தாலும்
நானிருக்கேன் என்று
எதிர் வந்த ஏகலைவனே!
எத்தனை பிறவி எடுத்தாலும்,
அத்தனையிலும்,
உன்  உறவாக‌,உயிராக‌,
உடன் வர வேண்டுமென்று
உளமாற வேண்டிவேன்
செந்தூரான் சேவடியில்.

Monday, July 24, 2017

பிறந்தநாள் வாழ்த்துகள் ஆராதனா . (24/7/17)



என் நரம்புகளில் நாணேற்றி
இதயத்தில் இன்னிசை மீட்டும் இனியவளே,
இன்று உன் பிறந்தநாள்...

எண்ணத்தை சலவை செய்து
என்னுள் மனிதியை
வெளி கொணர்ந்த ஓவியமே,
இன்று உன் பிறந்தநாள்...

அச்செடுத்த அழகு தமிழ் மொழியை,
பிச்சுப்பிச்சு பேசிடும்
பச்சை பைங்கிளியே,
இன்று உன் பிறந்தநாள்...

ஓம்கார ஒலியாய் ஓங்கி ஒலித்திடும்
ஆராதனா காவியமே,
கற்பனைக்கு தப்பிய ஓவியமே,
இன்று உன் பிறந்தநாள்....

என் அணுவெல்லாம்
நுளைந்தோடும்
தார்ப்பரிய உயிர் மூச்சே,
இன்று உன் பிறந்தநாள்....

இல்லை இல்லை..
இன்று எந்தன் பிறந்தநாள்,
என் இதயம் மலர்ந்த நாள்.

என் உயிரின் உறைவிடமே,
உன்னை ஒன்று கேட்கிறேன்
மறுபிறவி ஒன்றிருந்தால்
என் அன்னையாக வேண்டாம்,
அன்பு தோழியாகும் வரம் வேண்டி
ஆண்டவனிடம் பிராத்திப்போம்.

                         வாழ்க வளமுடன்.

                                   

விழித்தெழு பெண்ணே !



பேதைப்பெண்ணே நீ
போதை பொருளாய் இருந்தது போதும்,
பாரதி கண்ட புரட்சிப்பெண்ணாய்
பொங்கியெழு...

புதுமையை
ஆடைகுறைப்பில் காட்டாதே,
ஆளவந்தவளாய் உனை மாற்று..
சமமாய் தண்ணையடிப்பதில் காட்டாதே
சாதனை புரிவதில் நீ காட்டு..

அன்னை தெரசாவாய் மாறி
அன்பினை காட்டு,அனாதைகளுக்கு,
அப்துகலாமாக மாறி 
ஆக்கம் பல புரி பாரதத்திற்கு..

கொலுபொம்மையாக மட்டும்
இருந்து விடாதே,
கோபுர கலசமாக உயர்ந்து நில்,
நாளைய உலகம் நம‌து கையில்.
          
           உமா கருணாமூர்த்தி

Tuesday, June 27, 2017

பர்வீன் சுல்த்தானா.


பார்க்கும் பார்வையிலே
தெறிக்கும் பட்டாசு,
உதிர்க்கும் வார்த்தைகளோ
வண்ண மத்தாப்பு..

அன்று கோவையில்
பெண் என்ற கர்வத்தை
என்னுள் விதைத்த‌
விவசாயத்தோழி,
அறுவடை நாளில்
இன்று என் அருகில்...

ஆம்,
பெண்ணான பெருமையை- இங்கு
புரிந்தேன் உம்மால்...

சாமானியனையும்
சாதிக்க தூண்டும்
தூண்டா மணிவிளக்கு உம் மொழிகள்,
மறைந்த பாரதியும்
மகிழ்ந்து வாழ்த்தும்  உம் வாழ்க்கை வழிகள்..
அகமகிழ்கிறது நெஞ்சம் உம் பேச்சில் ,
உலகமே   என்றும்   தஞ்சம்..

பச்சிளம் குழந்தையும் ,பார்த்து வியந்திடும்
தோழி பர்வீன் புகழ் மேன்மேலும்
பர‌ந்து விரியட்டும் பாருக்கு நிகராக .
                              வாழ்க வளமுடன்.
                                                                                       அன்பு தோழி,
                                                                                           உமா கருணாமூர்த்தி.

Friday, June 23, 2017

வாழ்த்து கவிதை.


1989 ஆம் ஆண்டு
எல்லாம் வல்ல இறைவன் துணையோடு,
பட்டயத்தலைவர்
திரு. ர‌விச்சந்திர ராமவண்ணி
தலைமையில்
தளிர் கொடியாய் தலை தூக்கி
உறுப்பினர்கள் உதவியோடு
உலாவந்த ரோட்டரி சங்கம் -இன்று
எட்டு வைக்கப் போகிறது
28 வது வருடம்...

முகவையின் முத்துச்சுடர்
மருத்துவர்களின் மாணி மகுடம்
கருணையை தன் கண்மணியில் கலந்திட்ட
நம்  கவர்னர் திரு.சின்னதுரை அப்துல்லா
தயவோடும்,
சேவையே சுவாசமென
சுற்றித்திரியும் சேனைகளின்
துணையோடும்,
தீயென சுழல காத்திருக்கும் காரியதரிசி
திரு பூபதி தலைமையில்
ரோட்டரி  சங்கம் ரோஜா வனமாக‌
சேவை மனம் பரப்பும் என‌
நம்புவோம் நங்கூரமாக..

                                     வாழ்த்தும் தோழி,
                                                 உமா கருணாமூர்த்தி

இசைக்குடும்பம்

எங்கோ பிறந்தோம்
எங்கோ வளர்ந்தோம்
இங்கு இணைந்தோம்
இசையின்  தயவால்...
இசையை வாசித்தோம்
இசையை நேசித்தோம்
இசையை சுவாசித்தோம்
அதையே யாசித்தோம்
இன்றும் இறைவனிடம்..

பல தோட்டத்து
பன்னீர் பூக்கள் நாங்கள்...
பருவம் வேரான
 கஸ்தூரி மான்களும் நாங்கள்..
இசையென்னும் வயிற்றில் பிறந்த‌
உன்னத உறவுகள் நாங்கள்...
ஊர் வேறாய் வாழும்
ஈசன் அடிமையும் நாங்கள்....
 இணைந்தோம் இன்று
 இறைவனின் அருளால்
பல தேசம் தாண்டி தரணியில் இங்கு..

தாலாட்டு இசைத்தது
 வெவ்வேறு தாயெனினும்,
இணைந்து ருசித்தது
இசையென்னும் தாய் பாலை.

ஆதி சிவன் அருளோடு
ஆன்மீக பொருளேடு
சத்குருவின் நெறிகள்
சாமானியனை ச்சென்றடைய‌
சரிகமபதநி சுவரங்களும்
எங்கள் சாரீரங்களும்
சமரசம் செய்தே,
சங்கீதச்சாரலாய்
சங்கமிக்கப்போகிறது.

Isha sivan {  smule Ram }  க்கு எழுதி கொடுத்த கவிதை

Thursday, April 27, 2017

சிவனே போற்றி.


ஆதி மூலமே,அதிசய ரூபமே,
அகிலத்தை ஆட்சி செய்யும்
அண்ணாமலையாரே!
ஆறடி உயரமும்,அரையடி இதயமும்
இளகி உருகுமய்யா
அர்த்தநாரிஷ்வரா-உன்
ஆத்மார்த்த அதிர்வலையில்..

திரித்த ஜடையும்,திண்ணென்ற தோள்களும்
திரிசங்கு கழுத்திலே
தரித்தாடும் சர்ப்பமும்,
தண்டை எதிரொலிக்க‌
தகதிமி நீ ஆட...
அண்ட சராசரமும்,அடிமையாகிடுமே
ஆதியோகி உன் அசைவில்...

அறுபத்துமூன்று நாயன்மார்களை
நயமுடன் ஏற்றுகொண்ட‌
நடுவனே !நஞ்சுண்ட நாயகனே
பூத கணங்கள் புடைசூழ‌
என் பாவ கணக்கை சரிபார்த்து
பூர்வஜென்ம வினை தீர்ப்பாய்-உன்
பாலகனாய் எனை ஏற்பாய்...

சுடுகாட்டு சாம்பலும்
சுட்டெடுத்த மண்டையோடும்
மாலையாய் சூடி கொண்டே
சூத்திரதாரி நீயிருக்க‌
பற்றுதய்யா என் மனம்
சுயம்பு லிங்கம் உன்னை சுற்றி..

ஆதிசேஷன் துப்பிய ,ஆலகாலவிஷத்தை
அள்ளி பருகிய நீலகண்டேஷ்வரா!
நின் தயவால் நீர் நில உயிரெல்லாம்
உயிர்பிச்சை கொண்டதய்யா..

Friday, March 31, 2017

அப்பாவிற்கு ஓர் கவிதை

தாய் வழி தமிழை
தந்தை வழி கற்பித்து
தரணியில் நான் உயர‌
வாழ்வனைத்தும் தந்தவரே...

மணமகளாய் நான் மாறி
மறு வீடு சென்ற பின்னே
நீவீர் மனமுடைந்து அழுத சேதி
அக்கா வழி கேட்ட போதும்..

வெள்ளந்தி மனதோடு
வெண்பொங்கல் எடுத்து வந்து
வயிற்று பிள்ளைக்காரி எனக்கு
வாஞ்சையோடு  கொடுத்த போதும்...
உணரவில்லை உம் அன்பை, நீர்
உயிரோடு இருக்கும் வரை.

மழை தரும் மேகமாய்
மனம் கனத்த வேளையில்
அதை சருகாக்கும் சாகசத்தை
சடுதியில் கற்று தந்தவரே,

தாளாத மனதோடு
தாலாட்டு இசைக்கின்றேன்,
தாயாக நான் மாறி
தந்தையே நீ தூங்கு..
மறுபிறவி உண்டென்றால்
மனதார வேண்டுகின்றேன்
மறுபடியும் பிறந்திடுவாய்
மகனாக என் வயிற்றில்.

Saturday, March 25, 2017

யாழினி என் தேவதை.



விடியல் வேளையில்
விடிவெள்ளியாய்
மண்ணில் தோன்றிய‌
முழுமதி முகத்தவளே...

உன்னை முழுமையாய் கண்ட நொடி
மூச்சு விட மறந்தேனடி,
அள்ளி கொஞ்சிய
அடுத்த நொடி,இதயம்
அனிச்சையாய் துடித்ததடி...

கூவும் குயிலிசையும்
புல்லரிக்கச் செய்யும்
புல்லாங்குழலிசையும்,
பூரித்துப்போகும்
யாழி நீ இசைக்கும் யாழிசையில்...

யட்சக‌ன் அருளிய
எல்லோரா ஓவியமே,  - கீர்த்தி
யாசித்து பெற்றெடுத்த‌
ஆறாம் காப்பியமே...

கண்ணனின் கருணை உனை நனைக்க,
பாபுவின் பார்வையோ அரவணைக்க,
அன்னையின் அன்பிலே அமுதாகி
ஆண்டு பல கோடி அழகி நீ வாழ‌
ஆச்சி எந்தன் ஆழ்மன வாழ்த்துகள்