Sunday, December 13, 2020

நவ ஜோதிர்லிங்க தரிசனம்.

எங்கள் நீண்ட நாள் கனவை நினைவாக்கியது, 

இந்தியன் ரயில்வே.
நவ ஜோதிர் லிங்கத்தை தரிசிக்க, 

ரயிலில் முன்பதிவு செய்துவிட்டு, 

உடலையும், உள்ளத்தையும் தூய்மை படுத்திக் கொண்டோம்.

பயணத் தேதி 1/08/2018 . நாங்கள் ராமநாதபுரம் என்பதால் 

50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராமேஸ்வரம் சென்று, 

ராமநாத சுவாமி தரிசனம் பண்ணி 

9 தீர்த்த பாட்டில்கள் வாங்கிக் கொண்டு 

ரயில் ஏறினோம்.. 

முதல் வகுப்பு ஏசி பெட்டி உடலோடு சேர்ந்து உள்ளமும் குதூகலித்தது.. 

ஆந்திர மாநிலம், "ஸ்ரீசைலம்" சென்று பேருந்துக்கு மாறி,  

ஏழு மணிநேர மலை பயணம்.. 

செல்லும் வழியில், சிறுத்தை ஒன்று கண்ணில் பட, 

ஒரு நிமிடம் எகிறியது இதயம்.. 

அதிகாலை 5 மணிக்கு மல்லிகார்ஜுனாவை தரிசனம் செய்தோம்...

அடுத்து நர்மதை நதிக்கரையில் அமைந்துள்ள 

ஓம்காரேஷ்வரர் ஐ நோக்கிய பயணம், 

ஆடி பதினெட்டு நர்மதையில்,

 நீராடும் பாக்கியம் பெற்றோம்..
நதி உடலை நினைக்கையில் உள்ளம் சிலிர்த்தது.. 

சிவனை தரிசிக்கும் தீவிரத்தில், 

பணப்பையை தவற விட்டு, மீண்டும் அது கிடைத்த தருணம், 

அவன் அருளை அன்றே உணர்ந்தேன்.

 அடுத்து மாகாளேஸ்வரரை, மனதார வேண்டிக் கொள்ள, 

மத்திய பிரதேசம் நோக்கி பயணம்.. 

அங்குள்ள சிவலிங்கங்களை தொட்டு, 

தன் கையால் கொண்டு சென்ற தீர்த்தத்தினால் 

அபிஷேகம் செய்யும் பாக்கியம் பெற்றோம்..

அடுத்ததாக குஜராத் மாநிலத்தில் உள்ள சோம்நாத் ஆலயம், 

பழைய மற்றும் புதிய ஆலயம் 

கடற்கரையோரம் அமைந்த அற்புதம்.. 

சோமநாதரை தரிசித்த அசதியில் 

அன்றிரவு ரயில் பெட்டியில் அருமையான உறக்கம் அற்புதமான உணவு பல்வேறு மொழிபேசும் மக்களை பார்த்துக்கொண்டே, 

அடுத்த நாள் பயணம் பீம் சங்கரை தரிசிக்க சென்றோம்.

குளிரோடு பனியும், 

மழையும் போட்டி போட்டு அடித்து நொறுக்க,

 சிவனை காணும் எண்ணத்தில் 

அவற்றை அலட்சியப்படுத்தி படியிறங்கி, 

மீண்டும் படியிறங்கி, அப்பப்பா....... 

நானா இவ்வளவு செய்தேன் என்று எண்ணும் அளவு இருந்தது..
பீம் ஷங்கரை, என் கையால் தொட்ட கணம், 

மனம் கரைந்து, காற்றில் மிதந்தது...

திருக்கம்பேஷ்வர், மற்றும் கிருஷ்நேஷ்வர் ஆலய தரிசனம் முடித்து, திருநாகேஸ்வரம் சென்றோம்... 

அங்கே ஒருவர் மட்டும் செல்லும் பள்ளம் , 

மனதில் அச்சத்தோடு உள்ளே இறங்கினால், 

அங்கே சிவன் என்னை இரட்சிக்க 

அவர் மீது சிரம் தாழ்த்தி தொட்டு வணங்கி 

ஒரு பக்தர் துணையோடு மேலேறி வந்தோம்...

காசி மற்றும் கேதார்நாத் தவிர்த்து,
10 சிவ தலங்களை தரிசித்தது... 

நர்மதையின் குளித்தது... 

பழக்கப்படாத உணவுகளை உண்டது.... 

பலதரப்பட்ட மக்களிடம் பழகியது 

ரயில் சினேகிதம் கொண்டது.... 

தவறவிட்ட பணம் திரும்பக் கிடைத்தது... 

சிறுத்தையை நேரில் பார்த்தது... 

தானே தன் கையால் சிவனுக்கு அபிஷேகம் ஆராதனை பண்ணியது... அனைத்தும் மனதில் அசைபோட, 15 நாள் போனது தெரியாமல் மதுரை வந்து இறங்கினோம்..

 தென்னிந்திய கோவில்களை ஒப்பிடும்போது 

வெளிப்புற தூய்மை வட இந்திய கோவில்களில் குறைவு, 

ஆனால் ஆலயத்திற்குள் சென்று வந்தால், 

நம் மனம் தூய்மை மற்றும் அமைதி அடைவது நிச்சயம், என்று இக்கட்டுரையின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன். 

         "சர்வம் சிவமயம்"

 K.Umarani karunamoorthy,
Inner wheel club of Ramnad,
321.
PH.No. 9487754727

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

ஒவ்வொரு மணியாக கோர்த்து, 

என்னை ஒரு மேகலையாக மாற்றியவர்,

 என் ஆசிரியர் திருமதி மணிமேகலை... 

தாய்ப்பால் ஊட்டி என் உடல் வளர்த்தது 

என்னைப் பெற்ற தாய் என்றால், 

தமிழ் பாலூட்டி என் உயிர் வளர்த்தது 

இவர் அன்றி யாருண்டு?? 

தலையில் தட்டி தட்டி, தமிழை என்னுள்ளே இறக்கி, 

இலக்கணம், இதிகாசம், இலக்கியம், 

இயல் இசை நாடகம், நடனம் மற்றும்  

அனைத்திலும் நாட்டம் கொள்ளச் செய்தவர்.. 

மூடிக் கிடந்த திறமைகளை 

வெளிக்கொணர்ந்த திறவுகோல்... 

அன்று அவரது முயற்சி 

மனதுக்கு அயர்ச்சி ஊட்டினாலும், 

இன்று நினைக்கையில் 

நிலையில்லா நிம்மதி கிடைக்கிறது... 

என் வாழ்வில் கிடைத்த ஒரு பொக்கிஷம் 

திருமதி மணிமேகலை ஆசிரியை👑 

அவர்களுக்கு என் நன்றி என்றும் உரித்தாகுக 🙏.. 

வாழ்க வளமுடன்.

K.Umarani
Innerwheel club of Ramnad,
Dist 321,
9487754727

மகளெனும் தேவதை

தேவன் நமக்கு அருளிய தேவதைகள், தேடினாலும் கிடைக்காத தங்கத்தாரகைகள்,
அவள் தத்தித் தத்தி நடக்கையில் 

மனதை கொத்திச் செல்லும் கொலுசொலி.... 

கொஞ்சி கொஞ்சி சிரிக்கையில் 

சிறிதாகும் மனவலி.... மகள்
"பேதை"
பெண்ணாகி போதை மொழி பேசி
"பெதும்பை" பருவத்தில் புதுமை பலசெய்து.... 

"மங்கை" மலராகி, மனதில் மகிழ்வோடு 

"மடந்தை" அவள் மணமாகி, 

மணாளன் கரம் கோர்த்து, 

மறுவீடு செல்லுகையில் 

நம் மனதில் வரும் உயிர்வலி..


"அரிவை" அவள் கையில் அடுத்தடுத்து, 

அச்செடுத்த பதுமைகள்... 

ஆண்டவனின் அருள் கொடையில் அன்றே மூழ்கி விட்டோம்..

 "தெரிவை" பருவத்தில் அவள் தேவதை ஆகி ,
"பேரிளம் பெண்ணாய் பார்போற்ற வாழ்ந்திடவே, 

மகள் பெற்ற நாமெல்லாம் மகராசிகளே 👍.

👆
பெண் குழந்தைகளைப் பெற்று 

அவர்களால் நாம் பட்ட சந்தோஷத்தையும்

 பெண்ணின் ஏழு பருவங்களான 

"பேதை பெதும்பை மங்கை மடந்தை அரிவை தெரிவை பேரிளம்பெண்" இவற்றை சேர்த்து கவிதையாக்க முயற்சித்து இருக்கிறேன்...

பெண் குழந்தைகளை பெற்ற அனைத்து அம்மாவிற்கு சமர்ப்பணம்🙏


    # உமாராணி கருணாமூர்த்தி #

முதுமையின் ஏக்கங்களும் தீர்வுகளும்.


முற்றிய கனி போன்ற அனுபவச் சாறு நிறைந்தது முதுமை. 

அதை முழுவதும் பயன்படுத்திக் கொண்டால், 

பலன் நமக்குத்தானன்றி கனிக்கு அன்று என்பதை, 

முழுமையாக உணர்ந்தவர்கள்
முதுமையை போற்றுவர்..

முட்டி முட்டி வெளிவரும் விருட்சமாய், 

ஊரோடும் உறவாடும் போராடி 

நம்மை உயர செய்தவர்களை ஊரில் விட்டு, 

வேலை தேடி வெளிநாடு சென்ற பின்னே, 

வெறிச்சோடி வீட்டில் அவர்கள், விட்டத்தை பார்த்து, 

வீற்றிருக்கும் மனவலி அப்பப்பா...

அதைவிடக் கொடியது,  
ஒரே வீட்டில் ஒரே அறையில் முடங்கி இருப்பது..... 

ஒருவாய் காபிக்கும், 

ஒருவேளை உணவுக்கும் 9 மணி வரை,

 பிறரை எதிர்பார்த்து காத்திருக்கும், 

முதிர்ந்த குழந்தையின், 

எண்ண ஓட்டத்தை எண்ணிப்பார்க்க மனம் வலிக்கிறது...

60  பேர் வந்தாலும் முகம் சுளிக்காமல் 

மூன்று வேளையும் உணவளித்த கைகளும் 

ஆறு கிலோமீட்டரை  அசால்டாக நடந்த கால்களும் 

இன்று வலுவிழந்து அறைக்குள் முடங்கி கிடப்பதை எண்ணி 

முதுமை மூச்சு முட்டி அழுகிறது...

"தனிமை தானே எடுத்தால் இன்பம் தரும், 

பிறர் கொடுத்தால் துன்பம் தரும்"
 
தனிமையை விரட்டும் தானியங்கி தேவதைகள் 👼 தன் பேரப் பிள்ளைகள்... அவர்கள் தாவி வந்து தன் மடி ஏறி,
பழங்கதை சொல்லச் சொல்லி கேட்கையில்,

 தன் தாயை பார்த்ததுபோல், 

தழுதழுத்து போகிறது பெரியவர்கள் மனது...

 மாதம் ஒருமுறையேனும் மகளோ, மகனோ தன்னை வந்து பார்க்க வேண்டி தவிக்கிறது தந்தை மனது... 

தாலாட்டி வளர்த்த தன் பிள்ளை தனக்கு சோறூட்ட சொல்லி துடிக்கிறது தாய் மனது...
சொர்க்கத்தில் நமக்கு தூளி கட்டிய ,
தூய மனம் இன்று துவளுகிறது தனிமை கண்டு...

முதுமை நோய் அல்ல முற்றிய அனுபவத்தின் பெட்டகம் 

அதை என்றும் பேணி காப்பது நமது கடமையாகும்.


Innerwheel competition ku yeluthiyathu.


 உமாராணி கருணாமூர்த்தி