Friday, March 31, 2017

அப்பாவிற்கு ஓர் கவிதை

தாய் வழி தமிழை
தந்தை வழி கற்பித்து
தரணியில் நான் உயர‌
வாழ்வனைத்தும் தந்தவரே...

மணமகளாய் நான் மாறி
மறு வீடு சென்ற பின்னே
நீவீர் மனமுடைந்து அழுத சேதி
அக்கா வழி கேட்ட போதும்..

வெள்ளந்தி மனதோடு
வெண்பொங்கல் எடுத்து வந்து
வயிற்று பிள்ளைக்காரி எனக்கு
வாஞ்சையோடு  கொடுத்த போதும்...
உணரவில்லை உம் அன்பை, நீர்
உயிரோடு இருக்கும் வரை.

மழை தரும் மேகமாய்
மனம் கனத்த வேளையில்
அதை சருகாக்கும் சாகசத்தை
சடுதியில் கற்று தந்தவரே,

தாளாத மனதோடு
தாலாட்டு இசைக்கின்றேன்,
தாயாக நான் மாறி
தந்தையே நீ தூங்கு..
மறுபிறவி உண்டென்றால்
மனதார வேண்டுகின்றேன்
மறுபடியும் பிறந்திடுவாய்
மகனாக என் வயிற்றில்.

Saturday, March 25, 2017

யாழினி என் தேவதை.



விடியல் வேளையில்
விடிவெள்ளியாய்
மண்ணில் தோன்றிய‌
முழுமதி முகத்தவளே...

உன்னை முழுமையாய் கண்ட நொடி
மூச்சு விட மறந்தேனடி,
அள்ளி கொஞ்சிய
அடுத்த நொடி,இதயம்
அனிச்சையாய் துடித்ததடி...

கூவும் குயிலிசையும்
புல்லரிக்கச் செய்யும்
புல்லாங்குழலிசையும்,
பூரித்துப்போகும்
யாழி நீ இசைக்கும் யாழிசையில்...

யட்சக‌ன் அருளிய
எல்லோரா ஓவியமே,  - கீர்த்தி
யாசித்து பெற்றெடுத்த‌
ஆறாம் காப்பியமே...

கண்ணனின் கருணை உனை நனைக்க,
பாபுவின் பார்வையோ அரவணைக்க,
அன்னையின் அன்பிலே அமுதாகி
ஆண்டு பல கோடி அழகி நீ வாழ‌
ஆச்சி எந்தன் ஆழ்மன வாழ்த்துகள்