மனம் கவர்ந்த மங்கை
சாதனைப் பெண்கள் சிலர் பற்றி படித்ததுண்டு..
பலரை வாழ்வில் பார்த்ததுண்டு,
ஆனால் நான் வாழ்ந்து பார்த்து அதிசயத்த பெண், என் அன்னையே.
1939 ல், ஆகாயத்தாமரை ஒன்று மண்ணில் தோன்றிய தருணம், நாடே வெள்ளையனிடம் அடிமைப்பட்டு கிடந்த போது, அடித்தட்டு வர்க்கத்தில் முதல் பெண்ணாகப் பிறப்பெடுத்தார்..
பெற்றோரின் புரிதல் இன்றி பிறந்ததால், அடுத்தடுத்து நான்கு சகோதரர்கள்.
பாலப்பருவம் குடும்ப பாரம் சுமந்தே கரைந்தது...
ஒரு கை மாவாட்ட மறு கையில் புத்தகம்... மனப்பாடம் செய்தது அவர் மனம்...
சேவை மனதோடு "செவிலியர்" துறையில் சேர்ந்து மனிதாபி மானத்தை மடியில் கட்டினார்...
நான்கு பிள்ளைகளின் தலைமகள், தன்னை நம்பி வந்த நோயாளிகளின், "மலைமகள்" ஆனாள்..
அவள் கனிவான பேச்சில் கால்வாசியும், கண்டிப்பான கவனிப்பில் முக்கால்வாசியும்,
நலம் பெற்றனர்..
அன்னையின் அன்பிலும், அழகிலும் மயங்கி அவர் கரம் பிடித்து, இல்வாழ்க்கை தொடங்கிய என் தந்தையின் தயவால் பிறந்து, வானத்தில் பறந்தோமே தவிர, அவர் வறுமையை நாங்கள் உணரவில்லை.. மன்னிக்கவும்,
அவர்கள் எங்களுக்கு உணர்த்தவில்லை.
வேலை நிமிர்த்தமாக , தந்தை வெளியூர் சென்றதனால், தன்னந்தனியாக எங்களை வளர்க்க அவள் செய்த தியாகம் சொல்லில் அடங்காது..
அதிகாலை சூரியன் கூட ஆறு மணிக்கு தான் உதிக்கும், ஆனால் அன்னையோ,
நாலு மணிக்கே உழைப்பை தொடங்குவார்..
ஒற்றை மகளை வளர்க்கவே இன்று பலர் மயங்கி நிற்கையில்....
அன்று அசால்ட்டாக நால்வரை வளர்த்து ஆளாக்கியவர் என் அன்னை.. தன்னுடைய வாழ்வையே எங்களுக்கு வளமாக வழங்கிய வள்ளல் அவள்...
எத்தனையோ முறை விழுந்து எலும்பு முறிந்தாலும், ஏன் இந்த வாழ்க்கை என்று எள் அளவும் எண்ணாது, எழுந்து நின்று எதிர்கொண்ட இரும்பு பெண்மணி
என் தந்தை மறைந்த பின், முதுமை அவளை அணைத்து கொள்ள முடங்கியது முழு நிலவொன்று வீட்டிற்குள்...
அதுவரை விண்மீன்களாய் சிறகடித்த எங்கள் பார்வை, அன்றுதான் விழுந்தது அவர் மேல்..
அன்னை என்னும் புத்தகத்தை படிக்கத் தொடங்கினோம்..
அந்த நொடியில் அவள் வறுமை உணர்ந்தோம்..
படிக்க வேண்டும் என்ற வெறி அறிந்தோம்....
சகோதரம் போற்றிய தன்மை யறிந்தோம்...
கனிவும் கண்டிப்பும் சேர்ந்த செவிலித்தாய் கண்டோம்...
தனித்து என்னை வளர்த்த தன்னம்பிக்கை அறிந்தோம்...
நான் தாயாகும் வரை தெரியாத என் தாயின் தாய்மை உணர்ந்தோம்...
இத்தனையும் அறிந்து அவர் அருகே செல்லுகையில்,
எங்கள் வீட்டு அகல்விளக்கு அணைந்து, ஆகாய தீபம் ஆனது😭
23/11/2021 ல் அவர் உயிர் பிரிந்ததாக சொன்னார்கள் ..
ஆனால் கண் தானம் செய்து அவர் விழி வழியே யாரோ ஒருவர் இன்னும் இவ்வுலகில் வாழ்கிறார்கள் என்று நினைக்கும் போது, என் அன்னை இன்னும் மரிக்கவில்லை என்று மனதை தேற்றிக் கொண்டேன்...
ஏழ்மையில் பிறந்து, சகோதரருக்கு ஏணியாகி , ஏழை மக்களின் வலி நிவாரணையாகி தனித்துப் போராடி,
இரும்பு பெண் மணியாய் எட்டா உயரத்தில் எங்களை வைத்த, மனம் கவர்ந்த மங்கை மறு பிறவியில் என் மகளாக வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்🙏
அன்புடன்,
உமாராணி கருணாமூர்த்தி
INNER WHEEL CLUB STATE LEVEL COMPETITION LA WIN PANNINA KAVITHAI.