Wednesday, September 1, 2021

தாய் பாலின் மகத்துவம்.

 
தாய் வழி பிள்ளைக்கு
தானாக தேனாக‌
தங்க பஸ்பமாக‌
ஊணாக உயிராக‌
இரத்தமெல்லாம் பாலாக‌
பாசத்தின் உச்சமாக‌
பாலூட்டும் போழ்தினிலே
பாவையரெல்லாம்
பாரினிலே
பரமனை விட உயர்ந்து விட்டோம்....

பிள்ளை கனியமுதை
அள்ளி அணைத்து
அமுதூட்டும் நேரமெல்லாம்
அதனோடு கை கோர்த்து
துளியூண்டு பசி போகும்
மலையளவு பாசமேவும்...

நோய்க்கு விடை சொல்லும்
நோய் எதிர்ப்பு திரவம்
தினம் தினம் தாய் தரும்
தாய் பாலின் வடிவம்...
தாய்மையின் புனிதத்தை
தானாக நிறுத்திடாது
தாராளமாக கொடுத்திடுக‌
கொஞ்சும் குழவி வளரும் வரை.
உன்னை என்னை உலகறிய,

அன்னை ஊட்டிய அமுத உணவு,
ஆறு மாதம் தாண்டினால்,
ஆயுள் வரை தொடரும்
உடல் அஸ்திவாரக் கனவு...

தாய்ப்பால் ஊட்டும் மாந்தருக்கு,
தாமதமாக கூட வராது 

மார்பகப்புற்று,இதை மனதில் ஏற்றி
தாய்ப்பால் புகட்டிடுவோம்.
தாய்மையை போற்றிடுவோம் .
            

                  வாழ்க வளமுடன் .



 

#Rtn. UMARANI KARUNAMOORTHY#

ID:11065356

Rotary club of Ramnad,Ramnad 3212.

தாண்டிக்குடி வேல் ஃபார்ம் ஹவுஸ்

 
6 மணிக்கு தொடங்கிய அழகிய பயணம்,
6 மணி நேரம் தாண்டி, 

கால் வைத்தோம் தாண்டிக்குடியில் ..

அடர்ந்த காட்டுக்குள், 

அழகிய குடில் ஒன்று..

 குயிலின் இசையோடு, 

குரங்குகளின் ஆட்டம், 

குதூகலித்தது மனம் ...

உடலோடு உள்ளமும் குளிர, 

குட்டி நடைபோட்டு 

சுற்றி வந்தோம் பொடிநடையாய்..
அட்டைகளின் முத்தமழையில் 

ஆங்காங்கே காலில் ரத்த கோலம்..

அரை வயிற்று உணவு 

ஆயுளுக்கு நன்று, 

அங்குள்ள உணவோ 

ஆயுளுக்கே நன்று,
அகம் மகிழ இசையோடு 

அத்தனை சுவை நாவிற்கு...

நான்கடி நடந்தால் 

நளினமாய் ஒரு நீர்வீழ்ச்சி, 

வீழுகின்ற அழகிலே, 

விழுந்தது என் மனம் ,
விழியில் தெறித்தது சாரல்,
மேனி நனைத்தது சிறு தூறல்..

இன்னிசையோடு
இரவின் பனிமூட்டம், 

அதை விரட்ட
போடப்பட்டது நெருப்பு மூட்டம்..
ஆட்டம் பாட்டத்தோடு 

அன்றிரவு அடித்துப் போட்ட தூக்கம்..

மறுநாள் 

பாலமுருகன் பாதம் பணிந்தே 

பாதி மனதோடு பயணம் முடித்தோம்.

       #உமாராணி#

வாராயோ கண்ணா.

யசோதைக்கு மகனாகி,

யாதவர்களுக்கு வரமாகி,
பூதகிக்கு எமன் ஆகி,
எனக்கு எல்லாமும் ஆன 

கண்ணனே❤️

உன் கான குழலொலியில்
ஆவினமே🐑 அதிசயித்து, 

போதை கொள்கையில், 

இம் மானிடரின் மயக்கத்தை 

மாயன்  நீ அறியாயோ??

காரிகை என்நெஞ்சில் 

காதல் பெருகி,

கை வழியே கவிதையாய் வழிவதை, 

கார்முகிலோன் கண்கள் 

அறிந்திலையோ???

பாற்கடலில் பள்ளிகொண்ட 

பரந்தாமா !
உன் பாதம் வரைந்தே,

 பாதை நான் பார்த்திருக்க, 

பாரிஜாத மனம் வாடும் முன்னே, 

பல்லக்கிலேறி, வா கண்ணா❤️ 

       #உமாராணி#

Monday, August 16, 2021

"யாரை வெல்வீர் "


      
"யாரை வெல்வீர் "
மருத்துவ மணிமகுடம்
 திரு.ஜோசப் ராஜன் அவர்கள்,
எனக்கு அளித்த
மகத்தான தலைப்பு..

அகத்தோடு அகம் பேசி,
ஆத்மார்த்த சேவையில்,
அன்னை தெரசாவின்  " அன்பை "க் கூட,
ஆதியோகியின் அருளோடு
யாம் வெல்வோம்..

மண்ணுயிர் காக்க,
நுண்ணுயிரோடு போராடும்,
மருத்துவருக்கு சிரம் தாழ்த்தி,
மனித மனதின், மக்கிய " மமதையை "
யாம் வெல்வோம்..

தேனூறும் சொல்லில்
தெளிவாய் பேசியே,
காயம் கண்ட மனதை ,
" கருணையால் "
யாம் வெல்வோம்..

தட்டுத்தடுமாறி ,தன்னம்பிக்கை
தலைதூக்குகையில்,
தட்டிவிடும் " தயக்கத்தை "
தயங்காது
யாம் வெல்வோம்...

கண்ணன் உணர்வோடு,
கண்ணில் கருணையும்,
நெஞ்சில் தாய்மையும் வழிந்தோட,
காதலை தாண்டிய
" காமத்தை "
யாம் வெல்வோம்..
       
       அன்புடன்,
       உமாராணி கருணாமூர்த்தி.

Thursday, July 1, 2021

மார்பகப்புற்று .

 
சுயபரிசோதனை சுழற்சியில், 

நாமே மருத்துவராவோம் ,
மாதம் ஒருநாள்.. 

மருத்துவரை தோழியாக்குவோம் ,
வருடம் ஒருநாள்...

இதில்
தயங்கவோ, தவிர்க்கவோ 

தேவையில்லை..
பெற்ற பிள்ளைக்கு 

பால் ஊட்டும் பெண் கண்டு, 

பத்தடி பதுங்கி நிற்கும் 

மார்பகப்புற்று,,

தாய்ப்பால் ஊட்டிய தாய் மார்க்கு,

 தாமதமாக கூட வராது அதன் தொற்று..
மழலை மார்பு பற்றிட ,
புற்றின் வாய்ப்பும் அற்றிடும்.

அதையும் தாண்டி அருகில் வந்தால், 

அதற்கு வைத்திடுவோம் ஒரு முற்று.

    அன்புத்தோழி ,   உமாராணி கருணாமூர்த்தி

 

Innerwheel club of Ramnad kaha eluthiyathu.

Tuesday, May 11, 2021

வாசிப்பை சுவாசிப்போம் .


 
ஓலைச்சுவடி தொடங்கி, 

ஒளிநாடா வரை, 

இன்று புத்துயிர் பெற்றது, 

புத்தகத்தின் பரிணாமம்..

அகச்சுத்தம், அறிவுப்பசி, 

அடுக்கி வைத்த புத்தகமே ,

எனது ஆகாரம்...

கரிகாலன் கல்லணையும், 

ஆத்தங்குடி கல் வகையும், 

காட்டிக்கொடுத்தது புத்தகம்...

வெனிஸ் நகர வீதிகளையும், 

வேற்றுக்கிரகவாசிகளையும், 

வெளிக்கொணர்ந்தது புத்தகம்...

எல்லோரா சிற்பத்தையும், 

ஏகலைவன் தட்சணை யையும்,

 எடுத்துரைத்தது புத்தகம்..

ராணா பிரதாப் பின், "சேட்டாக்" குதிரையும், 

ராணி எலிசபெத்தின் ராஜிய வித்தையும், 

விதவிதமாய் சொல்லிவைத்தது புத்தகம்...

மனக் குழப்பத்தின் மருத்துவர், 

மனம் வருடும் மாயாவி, 

அறிவுத் தேடலின் திறவுகோல், 

அக இருள் போக்கும் அகல்விளக்கு,
அன்னையாய் என்னை அரவணைத்த 

அழகு பிள்ளை புத்தகம்...

 ஆதி முதல் அந்தம் வரை, 

எண்ணத்திற்கு ஒளியூட்டி, 

அக்னிச் சிறகளித்து  

ஆலயத்து அமைதியை 

அடிநெஞ்சில் அடக்கியது புத்தகம், 

அதனுள் அடங்கியது என் அகம்...

வாசிப்பை சுவாசமாக்கி, 

வாழும் கலை வளர்ப்போம்.. 

புத்தகம் பல படித்தே, 

புது உலகம் நாம் படைப்போம்..

அன்புடன்,

 உமாராணி கருணாமூர்த்தி

Tuesday, March 2, 2021

விடை தெரியா வினாக்கள்.

 
வாழ்வே தேடல் தானோ...
தேடல் முடிவில்,
நான் பெற்றதும் கோடி,
கற்றதும் பல கோடி,
 

கற்கண்டாய் இனித்த
கனவெல்லாம்,
கானல் நீராய்
கண்முன்னே
கரைவதை எண்ணி
அழுவதா?

காத்திருந்த காதல் ,
கை கூடியும்-அதன்
கனமறியாது
தினம் தினம் தொலைக்கும்
உன்னை எண்ணி சிரிப்பதா?

பத்து மாதம்,
வயிற்றில் சுமந்தவள்
தாயென்றால்,
இருபது வருடம்,
மனதில் சுமந்த நான் யார்?


மண்வளம் பார்த்து பயிறிட‌
மனிதனே நினைக்கையில்,
மன வளம் பார்த்து இணைத்திட தான்
மாயனவன் நினைத்தானோ ?

புரியாத சூத்திரம்...

 புல‌ம்பி என்ன பயன்.

Sunday, February 28, 2021

பெண்மை வெல்கவென கூத்திடுவோமடா .



காரியம் கை கூடுகையில், 

மெய் பட்டது பாரதியின் கனவு..


போதை பொருளாய் இருந்த பெண்கள், 

புரட்சிப் பெண்ணாய் மாறியபோதே, 

"பெண்மை வென்றது ".. 


சரி நிகர் சாமானத்தை 

சேலையில் மட்டுமல்ல, 

வேலையிலும் காட்டத் துணிந்து, 

இராணுவத்தளம் தொட்டபோதே,

 "பெண்மை வென்றது".. 


அன்னை தெரசாவாய், 

அன்பை விதைத்து, 

ஆத்திச்சூடி அவ்வையாய், 

பண்பை அறுவடை செய்யும்போதே 

"பெண்மை வென்றது"... 


அடுக்களை துடைத்த அம்மாக்கள், 

கல்பனா சாவ்லாவாய் 

ஆகாயம் தொட்ட போதே 

"பெண்மை வென்றது" ..


கொரானாவின் கோரத்தாண்டவத்தை, 

களத்தில் சந்திக்க, 

செவிலியர் துணிந்த போதே, 

"பெண்மை வென்றது".. 


அன்று பெண்மை வெல்கவென 

பாரதி விரும்பினார்.. 


இன்று பெண்மை வென்றது என, 

நாங்கள் விளம்பினோம்.


அன்புடன் ,


 உமாராணி கருணாமூர்த்தி.

130, அக்ரஹாரம் ரோடு,

 இராமநாதபுரம், 

இராமநாதபுரம் மாவட்டம்,

623501

கைப்பேசி எண்: 

9487754727

வரம்

 என் தேடல் முடிவுற்றது 

தேவன் உன் வரவால் ...


தேவை என்று எதுவும் இல்லை, 

பார்வை பரிமாற்றமே, 

என் பசிக்கு போதுமானது... 


போகப்போக கிடைக்கும் 

"போகம்" அனைத்தும் 

பொக்கிஷ நிமிடங்களே... 


உணர்வுக்கும், உணர்ச்சிக்கும், 

இடையில் நடக்கும் யுத்தத்தை, 

நான் வென்று வருடம் பல ஆகிவிட்டது...


உன் உலகம் எனக்கு வேண்டாம் ,

என் உலகம் உனக்கு வேண்டாம், 

ஆனால் நம் உலகில் நாம் வாழ வேண்டும்...

அதற்கு கடவுள் வரம் அருள வேண்டும்.

ஹைக்கூ

 உன்னை பார்த்ததும் காதல் வரவில்லை,

என் காதல் உன் உருவில் வந்தது..

         ======================

இருபது வருடங்களாக‌

மூடிகிடந்த விதையொன்று

முதல் விடியலிலேயே,

விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது.

       ======================

எதுகையாய் நானும்,

மோனையாய் நீயும் .

இருப்பதால் தானோ.

கவிதை  உருவானது?

              ===================



Friday, February 12, 2021

2021

மனது மழுங்கி,
அறிவு விழிப்புற்ற வருடம்..

நம் மனம் படிக்காதவன், 

மனதுக்குப் பிடித்தவனாயினும்,
மண்ணில் எறிவோம்

மறுபரிசீலனை இன்றி...

நம் உற்சாக சிறகினை, 

உரசிச் செல்லும் ஊரானை,
ஒதுக்கி வைப்போம், 

உள்ளமெனும் ஊரைவிட்டு...

நம் உணர்வு அறியாது, 

ஒதுக்கும் ஓரவஞ்சனை, 

ஒடித்தெறிவோம்
ஒரு நொடியில்...

காரியவாதிகளை
கச்சிதமாக கணக்கிட்டு, 

களை எடுப்போம், 

கணப் பொழுதில்...

கண்ணில் நிலவையும், 

சொல்லில் தேனையும், 

சமமாக கலந்தெடுத்து, 

சத்ரியனாய் வாழ்ந்திடுவோம்,

சிறிது சாணக்கிய தனத்துடன்.

 

தை மகளே நீ வருக

 போகி யன்று போர் குணம் போயிட,
ஆசை, கோபம்
அனைத்தையும்  அக்னியில் அழித்திட,
ஆனந்தமாய் ஆடிடுவோம்,
அகமகிழ வாழ்ந்திடுவோம்,
அடுத்த நாள் வரப்போகும்,
தை மகளை வரவேற்க...

வைகறையில் நீராடி
வாசலிலே கோலமிட்டு
வண்ண வண்ண பட்டுடுத்தி
புதுப்பானை பொங்கலிட்டு
பொங்கி வரும் புன்னகையுடன்
பூரணமாய் படையலிட்டு
பூமித்தாயை வணங்கி பின் 

கதிரவனுக்கு நன்றி சொல்லி 

களிப்புடனே வாழ்த்திடுவோம்..

வந்தனம் உழவுக்கு மட்டுமன்றி, 

உதவிய காளைக்கும் காட்டிடுவோம்..
களப்பணியாற்றிய, 

காளையுடன் களமிறங்கிய காளையர், 

கட்டிப்புரண்டு ஜல்லிக்கட்டு நடத்த,
காணும் இதயமெல்லாம் 

துள்ளிக்கிட்டு குதிக்கும்..

மனதில், துளிர் விட்ட மகிழ்வு, 

மடையென திறந்து பெருக, 

காணும் பொங்கலுடன் 

களிப்புடனே வரவேற்போம்...

" தை மகளே நீ  வருக'

          அன்புடன்,

          உமாராணி கருணாமூர்த்தி