Saturday, July 20, 2019

வெள்ளி விழா வாழ்த்துகள்.

பள்ளியின் முதல் மாணவியல்ல‌
மூத்த மாண‌வி என்ற மமதையில் கூறுகிறேன்,
இப்பள்ளியின் வாசல்
எனக்கோ ஒரு பள்ளிவாசல்..
மகளை சேர்க்க வந்த நானே
ஒரு மாணவியானேன்..
படித்தது பால பாடம் அல்ல‌
வாழ்க்கை பாடம்.
மண்ணையும் மனிதனாக்கி,
கல்லையும் கவிதையாக்கும் வித்தை
உணர்ந்ததில்லை எவரும்,
இங்கோ உணர்த்தினார்கள் பலரும்...
தினகர் வளாகத்தில் ஏற்றிய தீபம்
எட்டு திசையும் ஒளிபரப்ப,
எங்கெங்கு நோக்கினும், எம் பள்ளி மாணவரே
விடி வெள்ளியாய் வழிநெடுக..
வெள்ளிவிழா காணும் இவ்வேளை
இதை விட சிறப்பு எது உள்ளது..
உள்ளார்ந்த மனதோடு உளமாற உறைக்கின்றேன்
என்னை பெற்றதோ ஒரு தாய்,
இங்கு நான் பெற்றதோ இரு தாய்,
அது சேவையின் செல்விசெய்யதாமேடம்,
நம் பள்ளியின் ராஜமாதா ராஜ முத்து மேடம்
என்பதை ராம்நாடே அறியும்..
நான் தடுமாறிய வேளையிலும்,
மனம் தடம் மாறிய வேளையிலும்
எனை தாங்கி பிடித்த கரமென்றால்
அது சங்கரலிங்கம் சாரென்று
சத்தியமாய் உரைத்திடுவேன்..
என் எண்ணங்களை எல்லாம் எடுத்துரைக்க‌
எழுத்துக்கள் போதவில்லை... என‌வே
ஏங்கும் மனதோடு
எழுந்து நின்று வணங்குகிறேன்.
இன்று
வெள்ளி விழா காணும் இப்பள்ளியை
பொன் விழா தாண்டி,
வைர விழாவில் வரவேற்க,
என்றும் காத்திருக்கும் எம் தலைமுறை.
வாழ்க வளமுடன்.
உமாராணி கருணாமூர்த்தி

Friday, July 19, 2019

காமராஜர்

 
ஆதியோகி நமக்களித்த
கர்மயோகியே!

ஆண்டவனை பார்த்திடாத
ஆத்திகனின் அருள் ஜோதியே!

பசித்த வயிறோ டிருந்தால்
படிப்பேறாது என்ற
மனோதத்துவம் அறிந்த
மகத்தான மருத்துவரே!

மதிய உணவளித்து
மாணவரை மாணிக்கம் ஆக்கிய
மனித கடவுளே!

ஏழை குழந்தைகள் எட்டிப் பிடிக்க
வானை வளைத்து ஏணியாக்கி
ஏற்றிவிட்ட எம்பிரானே!

உம்மிடம் ஒரு கேள்வி ..

எப்படி உதித்தது இப்பண்பு
எங்களுக்கும் வேண்டும்
இந்த இறையன்பு .

கல்வியை காசாக்கி
களிப்புறும் மானுடனே....
கற்றுக்கொள் இவரிடம்...
காசில்லா வேளையிலும்
கல்வி களப்பணியாற்றும்
வித்தையினை..

என் தலைமுறையில்
நாங்கள் தவறவிட்ட
தரமான அரசியல் தலைவனே!
உன் ஆட்சிக்காலம் ஒவ்வொன்றும்
அழகிய பொற்காலம், என
புலம்பி புலம்பி ஓய்கிறார்கள் இங்கே..

ஓய்வெடுத்தது போதும் எம்பிரானே!
எழுந்து வா..
உன் எண்ண கதிர் பரப்பி,
எழுச்சிபெறச் செய் இந்தியாவை..

என வேண்டும் இதயத்துடன்
இறைவனை பிரார்த்திக்கிறோம்.
   
                         என்றும் அன்புடன்,
                         உமாராணி கருணாமூர்த்தி.

Tuesday, June 4, 2019

குரல்கள் பலவிதம்.

சங்கீதம் சாரலானாலும் அழகு ...
கனத்த தூரலானாலும் அழகு...

ஜானகியம்மாவின் குரல்
இனிக்கும் ஜாங்கிரி என்றால்,
மாதங்கியின் குரலோ
மயக்கும் மத்தளம்...

சுபாவின் குரல்
புரட்டும் சுனாமி என்றால்,
சுசீலாம்மாவின் குரல்
அதை சுருட்டும் சுக்கான் ...

உமா ரமணன்
உற்சாகத் துள்ளல் என்றால்,
அனுராதா ஸ்ரீராம்
அழகிய ஆர்மோனியம்...

குயில்கள் மாறும்போது,
குரல்களும் வேறு ..
ரசிக்க பழகினால்,
ராகங்களும் நூறு நூறு..

( For smule singers )

நான் யார்?

உனக்கே உனக்காய் நான் இருக்க
எனக்காய் என்றேனும் ஏங்கியதுண்டா?

எட்டிய தூரம் எதிரில் நானிருந்தும்
ஏங்கும் இதயத்தின் எதிரொலி கேட்டதுண்டா?

உன் தாயாய் மாறிய பிறகு கூட,
இத் தாரத்திடம் பாசம் பகிர்ந்தது துண்டா?

உண்மை உரைக்கிறேன் கேள் நண்பா!

என் கவிதையின் கரு நீ ...
என் காதலின் உரு நீ...
என் கனவின் நிழல் நீ ...
என் காலத்தின் நிஜம் நீ ..
என் மகிழ்வின் பதாகை நீ..
என் வாழ்வின் பாதி நீ... பாசத்தின் மொத்தம் நீ..

ஆனால் இதில் பாதி கூட உணரவில்லை நீ ...

கருகும் இதயத்துடன் கண்ணீர் விட்டு கேட்கின்றேன்..

இத்தனை நாள்
உன் உணர்வில் கலந்தவர் யார்?

உன் உயிரில் நிறைந்தவர் யார் ?

ஊரும் உறவும் அறிந்திடாது உன் உள்ளே உறைந்தவர் யார்?

உருக்கமுடன் கேட்கிறேன்... உண்மை கூறு உத்தமனே!

உன்னில் நான் யார்?