Thursday, August 27, 2015

எங்கள் திருமண நாள் கவிதை

எட்டு எட்டாய் நடை பயின்று,
பட்டு ரோஜா நாலு பெற்று,
பார் புகழ உயர வைத்தோம்,
இருபத்தியெட்டு ஆண்டுக்குள்ளே...

எத்தனையோ சண்டைகளில்,
எட்டிப் பார்த்த கோபங்களில்,
ஒளிந்து நின்ற பாசத்தை,
பாவை நான் பகுத்தறிய‌,
பாதி வாழ்க்கை க‌ழிந்தது...

கரி பூச எண்ணி
சதி செய்த சமூகத்தில்,
கறைபடாது எனை காத்த,
கல்லுக்குள் ஈரமாய்
கடவுளை நான் காண‌,
கால் நூறாண்டு கடந்தது...

பாசத்தின் கொள்ளளவை,
பாத்தியப் பட்ட நாம் உணர‌,
மீதி வாழ்வு வழங்கிடவே,
இறை வணங்கி
அருள் வேண்டிடுவோம்...

Wednesday, August 26, 2015

திருமண நாள் வாழ்த்துகள்


உன் மனதை
கொள்ளையிட்ட காரணத்தால்,
மன்றாடி கேட்டும்,
மனமிறங்க மாட்டாது
மன‌ச்சிறையில் பூட்டி வைத்து,
அன்பு கணையெடுத்து
அன்னாரை நோகடித்து,
நொடி பொழுதும் நீங்காது
நரம்பெல்லாம் நாண் ஏற்றும்
நாயகியே!
உன் ராமனின் ரத்தமெல்லாம்
மத்தளமாய் உன் நினைவு
சத்தமின்றி ஓடுவதை
சந்தேகமின்றி அறிவாயா?

தமயந்தி நளனை
தரணியில் யாம் கண்டதில்லை..
சத்தியவான் சவித்திரியை
சத்தியமாய் சந்திக்கவில்லை..
இருவரையும் பார்க்கிறேன் இன்று,
"காவேரி ராமன்" உம் வடிவில்..

தேவர்களின் தலைமகனை
கரம் பிடித்த தேவதையே!
தேனூறும் மனதோடு
"ராணி"நான் வாழ்த்துகிறேன்
வாழ்க பல்லாண்டு,
வளமோடும் நலமோடும்.
                 
                 அன்புடன்
                     உமா கருணாமூர்த்தி.