Thursday, August 27, 2015

எங்கள் திருமண நாள் கவிதை

எட்டு எட்டாய் நடை பயின்று,
பட்டு ரோஜா நாலு பெற்று,
பார் புகழ உயர வைத்தோம்,
இருபத்தியெட்டு ஆண்டுக்குள்ளே...

எத்தனையோ சண்டைகளில்,
எட்டிப் பார்த்த கோபங்களில்,
ஒளிந்து நின்ற பாசத்தை,
பாவை நான் பகுத்தறிய‌,
பாதி வாழ்க்கை க‌ழிந்தது...

கரி பூச எண்ணி
சதி செய்த சமூகத்தில்,
கறைபடாது எனை காத்த,
கல்லுக்குள் ஈரமாய்
கடவுளை நான் காண‌,
கால் நூறாண்டு கடந்தது...

பாசத்தின் கொள்ளளவை,
பாத்தியப் பட்ட நாம் உணர‌,
மீதி வாழ்வு வழங்கிடவே,
இறை வணங்கி
அருள் வேண்டிடுவோம்...

Wednesday, August 26, 2015

திருமண நாள் வாழ்த்துகள்


உன் மனதை
கொள்ளையிட்ட காரணத்தால்,
மன்றாடி கேட்டும்,
மனமிறங்க மாட்டாது
மன‌ச்சிறையில் பூட்டி வைத்து,
அன்பு கணையெடுத்து
அன்னாரை நோகடித்து,
நொடி பொழுதும் நீங்காது
நரம்பெல்லாம் நாண் ஏற்றும்
நாயகியே!
உன் ராமனின் ரத்தமெல்லாம்
மத்தளமாய் உன் நினைவு
சத்தமின்றி ஓடுவதை
சந்தேகமின்றி அறிவாயா?

தமயந்தி நளனை
தரணியில் யாம் கண்டதில்லை..
சத்தியவான் சவித்திரியை
சத்தியமாய் சந்திக்கவில்லை..
இருவரையும் பார்க்கிறேன் இன்று,
"காவேரி ராமன்" உம் வடிவில்..

தேவர்களின் தலைமகனை
கரம் பிடித்த தேவதையே!
தேனூறும் மனதோடு
"ராணி"நான் வாழ்த்துகிறேன்
வாழ்க பல்லாண்டு,
வளமோடும் நலமோடும்.
                 
                 அன்புடன்
                     உமா கருணாமூர்த்தி.

Thursday, July 23, 2015

ஆராதனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.




ஆண்டவன் அருளிய
ஆகாய தாமரை நீ,

' பாரதி ' வணங்கி நின்ற‌
பராசக்தியும் நீ..

' கம்பனின் ' கவி தொகுப்பில்
தப்பிய தாரகை நீ,

' வாலியின் ' வரிகளில்
பிரிந்து வந்த வாக்கியம் நீ...


' வைரமுத்து '  கண்டிடாத‌
வைர வரிகளும் நீ,

' தாமரையின்'  தலைமகளாம்
தமிழ் மொழியும் நீ..

'பழநி பாரதி ' பார்த்திடாத‌
'பா' க்களின் தொகுப்பு நீ,

கவிஞர் ' சுரதா 'வின்
சூரிய படைப்பும் நீ..

பாஷையின்றி பேசும்
' ஓஷோ 'வின் புது மொழி நீ

ஓசையின்றி கரைகிறது மனம்
ஓயாது ஒலிக்கும் உன் குரலில்..

ராணியின் ராஜ்ஜியத்தை
ஆள வந்த ஆராதனாவே

நீ ஆண்டு நூறு நலம் வாழ‌
நாளும் வேண்டுகிறோம் இறைவனிடம்..



Wednesday, January 14, 2015

தை மகளே வருக..



போகியன்று போர் குணம் போயிட,
ஆசை, கோபம்
அனைத்தையும் அக்னியில் அழித்திட,
ஆனந்தமாய் ஆடிடுவோம்,
அகமகிழ வாழ்ந்திடுவோம்,
அடுத்த நாள் வரப்போகும்,
தை மகளை வரவேற்க...

வைகறையில் நீராடி
வாசலிலே கோலமிட்டு
வண்ண வண்ண பட்டுடுத்தி
புதுப்பானை பொங்கலிட்டு
பொங்கி வரும் புன்னகையுடன்
பூரணமாய் படையலிட்டு
பூமித்தாயை வணங்கி பின் கதிரவனுக்கு நன்றி சொல்லி
களிப்புடனே வரவேற்போம்
தை மகளே நீ வருக..


                          அன்புடன் வாழ்த்தும்,
                              உமா கருணாமூர்த்தி