Monday, July 21, 2014

அழகு தேவதை ஆராதனாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து.


அந்தியில் உதித்த சூரியனே !
அன்னை கருவினில் துளிர்த்த சந்திரனே,உன்
சந்தன தேகமது ,அழகின் உச்சம்..
உன்னை கண்ட நாள் முதல்
வாழ்வில் எல்லாம் துச்சம்..

நான் துவண்டிடும் வேளையில் 
தூண்டா மணிவிளக்கு,
தூரிகைக்கு தப்பிய
காவியம் உன் சிரிப்பு..

மயக்கிடும் சிரிப்பிலே
மாயவலை விரித்தவளே !
அந்த மாய கண்ணனும்
மலைத்திடுவான் நீ செய்யும் லீலை...

ஆண்டவனின் அருள்மழையில்
அக்னி குஞ்சாய் வந்தவளே !
அவதரித்தேன் மீண்டும் நான்
ஆண்டு 43 கடந்த பின்னே...

ஆதியும் அந்தமும் ஆன
எங்கள் அழகு தேவதையே !
நீ ஆண்டு பல வாழ்ந்து
சாதனை படைக்க 
அன்போடு வாழ்த்துகிறோம்..

Friday, July 18, 2014

என் மகள் சஹானாவிற்கு


போராடும் மனதோடு
போட்டியிட பிறந்தவளே!
பூரிக்கிறது நெஞ்சம்
புவியில் உன்னை ஈன்றதற்கு...

அத்தனைக்கும் போட்டி
அனைத்துடனும் போட்டி...
அழகில் அல்லி மலருடன் போட்டி
அன்பில் என் அன்னையுடன் போட்டி...

நிறத்தில் நிலவுடன் போட்டி
நீண்ட கூந்தலோ
கார் முகிலுடன் போட்டி...
முல்லை மலருடன்
உன் முத்து பற்கள் போட்டி...

வெள்ளை சிரிப்பொலியில்
வெள்ளி கொலுசு தலை சாய‌
தகதக‌க்கும்  தேகமது
தங்கத்தோடு போட்டி..

போதுமடி பெண்ணே
போராட்டத்தை நிறுத்தி விடு,
இயற்கையும் தோற்கிறது உன்
இன்முக சிரிப்பிலே...
ஈன்றவளும் தோற்கிறேன்
ஈடில்லா உன் கருணையிலே...

( இதில் உயர்வு நவிற்சியோ
வஞ்சபுகழ்ச்சியோ கிடையாது )