ஓலைச்சுவடி தொடங்கி,
ஒளிநாடா வரை,
இன்று புத்துயிர் பெற்றது,
புத்தகத்தின் பரிணாமம்..
அகச்சுத்தம், அறிவுப்பசி,
அடுக்கி வைத்த புத்தகமே ,
எனது ஆகாரம்...
கரிகாலன் கல்லணையும்,
ஆத்தங்குடி கல் வகையும்,
காட்டிக்கொடுத்தது புத்தகம்...
வெனிஸ் நகர வீதிகளையும்,
வேற்றுக்கிரகவாசிகளையும்,
வெளிக்கொணர்ந்தது புத்தகம்...
எல்லோரா சிற்பத்தையும்,
ஏகலைவன் தட்சணை யையும்,
எடுத்துரைத்தது புத்தகம்..
ராணா பிரதாப் பின், "சேட்டாக்" குதிரையும்,
ராணி எலிசபெத்தின் ராஜிய வித்தையும்,
விதவிதமாய் சொல்லிவைத்தது புத்தகம்...
மனக் குழப்பத்தின் மருத்துவர்,
மனம் வருடும் மாயாவி,
அறிவுத் தேடலின் திறவுகோல்,
அக இருள் போக்கும் அகல்விளக்கு,
அன்னையாய் என்னை அரவணைத்த
அழகு பிள்ளை புத்தகம்...
ஆதி முதல் அந்தம் வரை,
எண்ணத்திற்கு ஒளியூட்டி,
அக்னிச் சிறகளித்து
ஆலயத்து அமைதியை
அடிநெஞ்சில் அடக்கியது புத்தகம்,
அதனுள் அடங்கியது என் அகம்...
வாசிப்பை சுவாசமாக்கி,
வாழும் கலை வளர்ப்போம்..
புத்தகம் பல படித்தே,
புது உலகம் நாம் படைப்போம்..
அன்புடன்,
உமாராணி கருணாமூர்த்தி