Thursday, April 27, 2017

சிவனே போற்றி.


ஆதி மூலமே,அதிசய ரூபமே,
அகிலத்தை ஆட்சி செய்யும்
அண்ணாமலையாரே!
ஆறடி உயரமும்,அரையடி இதயமும்
இளகி உருகுமய்யா
அர்த்தநாரிஷ்வரா-உன்
ஆத்மார்த்த அதிர்வலையில்..

திரித்த ஜடையும்,திண்ணென்ற தோள்களும்
திரிசங்கு கழுத்திலே
தரித்தாடும் சர்ப்பமும்,
தண்டை எதிரொலிக்க‌
தகதிமி நீ ஆட...
அண்ட சராசரமும்,அடிமையாகிடுமே
ஆதியோகி உன் அசைவில்...

அறுபத்துமூன்று நாயன்மார்களை
நயமுடன் ஏற்றுகொண்ட‌
நடுவனே !நஞ்சுண்ட நாயகனே
பூத கணங்கள் புடைசூழ‌
என் பாவ கணக்கை சரிபார்த்து
பூர்வஜென்ம வினை தீர்ப்பாய்-உன்
பாலகனாய் எனை ஏற்பாய்...

சுடுகாட்டு சாம்பலும்
சுட்டெடுத்த மண்டையோடும்
மாலையாய் சூடி கொண்டே
சூத்திரதாரி நீயிருக்க‌
பற்றுதய்யா என் மனம்
சுயம்பு லிங்கம் உன்னை சுற்றி..

ஆதிசேஷன் துப்பிய ,ஆலகாலவிஷத்தை
அள்ளி பருகிய நீலகண்டேஷ்வரா!
நின் தயவால் நீர் நில உயிரெல்லாம்
உயிர்பிச்சை கொண்டதய்யா..