Wednesday, September 19, 2012

கவிதை



கண்ணனை எண்ணி 
கவிதை எழுத‌
கண்களை மூடினேன்
கன்னம் நிறைத்தன‌
என் கண்ணீர் துளிகள்...

என்னுள் எல்லாமாய்
நீயிருக்க‌
என்னவென்று எழுத?
நீர்,    நிலா,காற்று
எதில் சென்று உன்னைத் தேட?

லட்சம் பல வார்த்தைகள் 
என்னைச் சுற்றி வட்டமிட‌
ஒற்றை வரி கிடைக்கவில்லை
உன்னைப் பற்றி நான் எழுத...

வெற்று காகிதம் என்னை
வெறுமையாய் கேலி செய்ய
வேறெதுவும் தோன்றாமல்
வேடிக்கை பார்க்கிறாய்
என்னுள் நீயிருந்து..........

Saturday, March 10, 2012

மெளனத்தின் ஓசை

இரும்பு இதயத்துள்- உன்னை
இறுக்கி பூட்டி வைத்தேன்,
நெருப்பு வார்த்தைகளால்
உருக்கி உடைத்து விட்டாய்..

உன் அன்பு ஒன்றை பெற‌
அனைத்தையும் அடகு வைத்தேன்..
சுற்றம் தவிர்த்தேன்,
சுற்றுலா தவிர்த்தேன்,
நட்பு தவிர்த்தேன்,
நல் விழாவினை  தவிர்த்தேன்,
ஆனால்
நீ என்னை தவிர்த்தது தெரியாமல்...

காதல் வயப்பட்டு
வரம்பு மீறியதால்
வார்த்தைச் சாட்டையால்
விலாசி எடுத்து விட்டாய்
வலி தாங்காது மூர்ச்சையாகும் வரை...

என்னை வேண்டாமென‌
நயமுடன் சொல்லியிருப்பின்
நானாக விலகியிருப்பேன்
வீணாக "வலி"யின்றி.....

உணர்வோடு பேசிய வார்த்தைகளே
உரு குலைந்து போன பின்னே
என் மெளனத்தின் ஓசை மட்டும்
உனக்கு கேட்கவா போகிறது???

Monday, February 20, 2012

வன வாசம்..

மான்க‌ள் மருண்டோட‌ 
மயில்கள் மகிழ்ந்தாட‌ 
குயில்கள் கூடி கூவ
கும்மிப் பாட்டோடு
குதூகளிக்கும் வண்டாட..
வண்ணக் குவியலாய் 
வாசனை மலர்களோடு 
மகிழ்ந்திருக்கும் 
மாலைப் பொழுதில் 
மனதில் சுமையோடு 
ஒருத்தி மட்டும் சாய்ந்து நின்றாள்
ஓரமாய் தென்னையோரம்... 
               ( சீதா தேவி )

அன்பும் விஷமே..

உன் உயிரே நானெனினும்
உரசிச்செல்லும்
என் வார்த்தை ஒவ்வொன்றும்
 உயிரோடு எரிக்கிறது உன் உணர்வை..

உன் சுவாசமே நானெனினும்
 அதன் சூடு தாங்காது
துவண்டு போகிறாய் சில பொழுது...

அன்பை மட்டும் யாசித்த‌
 உன்னைப் பற்றி
 அதிகம் யோசித்தேன்..

உன் ஆணி வேரோ
என்னைச்சுற்றி,
மர விழுதுகளோ
உன்னைச்சுற்றி...
வேரினை விடவும் முடியாது,
விழுதினை வெட்டவும் தெரியாது,
தவிக்கும் உன் உணர்வு
சொல்லாமல் சொல்லியது,
அளவுக்கு மிஞ்சினால்
அமுது மட்டும் அல்ல‌
அன்பும் விஷம் தான் என்று....