Sunday, November 13, 2011

நிலா....


காலை விடிகையில்
காற்றில் கரையும் நிலா....

நித்திரை கொள்கையிலும்
தன் முத்திரை மறைக்கும் நிலா...

நினைவுகள் எங்கும்
நீந்திச் செல்லும் நிலா...

என் கனவில் மட்டும்
தினம் வந்து போகும் உலா..

பார்த்து பார்த்து லயித்தாலும்
பாத்திய படாதவளான‌தால்

பங்கு பெற முடியாத‌
உன் வாழ்க்கையில் விழா....

ஏற்றுக்கொள்


பிடிக்கிறது என்பதனால்
காற்றை பிடிக்க இயலுமா?

பிடிக்காது என்பதனால்
சூரியனை மறைக்க முடியுமா?

சொத்து முழுதும் கொடுத்தாலும்
முழுமதியை சொந்தமாக்கிட இயலுமா?

காலச்சக்கரத்தின் ஓட்டம்
என் கால் தடுப்பில் நிற்குமா?

இயலாது ...முடியாது ....நிற்காது...
என தெரிந்தும்

தெறித்து விழும் விழியோடும்
வெம்பி அழும் மனதோடும்
தினம் மல்யுத்தம் ஏனோ??

Saturday, October 8, 2011

என் காதல் வாழும்...

உன்னையும் என்னையும் அன்றி
"அவன்" மட்டும் அறிந்த‌
என் காதலை
என்னையும் "அவனை"யும் அன்றி
நீ கூட அறியவில்லை,
இருந்தும் பரவாயில்லை
என் காதல் வாழும்.....

அதற்கு உருவம் வேண்டாம்
மொழிகள் வேண்டாம்
ஸ்பரிசம் வேண்டாம்
விசாரிப்புகள் வேண்டாம்
ஆயினும் என் காதல் வாழும்.....

மெய் மறைக்க வேண்டாம்
பொய்யுரைக்க வேண்டாம்
வரி வரி யோசித்து பேச வேண்டாம்
வார்த்தை அளவிட்டு ஏச வேண்டாம்
ஆயினும் என் காதல் வாழும்.....

சண்டை வேண்டாம்
அதனால் வரும் கண்ணீர் வேண்டாம்
கடந்த காலம் மனதில் கொண்டு
கற்பை கலங்கடிக்கும் வார்த்தை வேண்டாம்
ஆயினும் என் காதல் வாழும்.....

ஏனென்றால்
என் காதல் காதலனும் அறியா காவியம்..
கனவிலே நான் எழுதிய ஓவியம்
ஒற்றையாய் நான் வாழும் ஆலயம்
எனவே என் காதல் என்றும் வாழும்.....

Thursday, September 15, 2011

ஸ்ரீ ரமணர் பொன் மொழி


"அவரவர் பிராரப்தப் பிரகாரம்
அதற்கானவன் ஆங்காங்கிருந்து
ஆட்டுவிப்பான்

என்றும் நடவாதது என்
முயற்சிக்கினும் நடவாது;

நடப்பது என் தடை செய்யினும்
நில்லாது.

இதுவே திண்ணம் ஆதலின்
மெளன‌மாயிருக்கை நன்று".



( ஸ்ரீ ரமணர் பொன் மொழி )‌

Friday, August 12, 2011

கடிதம்



[எனக்கு நானே எழுதிக்கொண்ட கடிதம்]


பிச்சை எடுத்து வாழ்வது ஒரு வாழ்வா?
எச்சில் இலை நீயென்றிந்தும்
எருக்கன் செடியே
உனக்கு ஏனிந்த மோகம்?

துளியூண்டு போதையால்
பாதை மாறி போனவளே!
இன்று பைத்தியமாய் ஆன பின்னும்
மீண்டு வர மனமில்லையா?

மாண்டிட மனம் துணிந்த உனக்கு
வாழ்ந்திட வழியில்லையா?

காதல் அமுதம் தான்
அளவுக்கு மிஞ்சி போனதால்
விஷமாகி விருட்சத்தை அழிக்கிறது
அனுமதிக்கலாமா அதற்கு?

வெறுப்பை நெருப்பாய்
கொட்டுகையில்
நெருங்கி போகாதே
நொறுங்கி போகும் உன் இதயம்...

யோசித்து பார் ஒரு நிமிடம்
யாசித்து பெறுகையில்
காதலும் உனக்கு பிச்சை தான்..
பிச்சை எடுத்து வாழ்வது ஒரு வாழ்வா?

நானும் கவிஞன் தானோ?


பலர் சொல்லி கேட்டதுண்டு
கவிஞனுக்கு கற்பனா சக்தி அதிகம் என்று
காதலைப் பற்றிய 'கற்பனை'யில் அது
காலாவதியானதை கூட அறியவில்லையே..........
ஓ! நானும் கூட கவிஞன் தானோ??/‌

Thursday, August 11, 2011

ஏன்???


[அடுக்குத்தொடரில் எழுத முயற்சி செய்து இருக்கிறேன் ]


போ போ என் தடுத்தும்
வாவா என்றழைத்த‌
வசந்தமே! இன்று
வேண்டும் வேண்டும்
என்றழுதும்
வேண்டாம் வேண்டாம்
என் மறுப்பதேன்???

தேடி தேடி அலுத்த பின்னே
நாடி நாடி வந்த
அமுதமே! இன்று
வாடி வாடி வதங்கினாலும்
எனை உதறி
ஓடி ஓடி ஒதுங்குதலேன்???

மூச்சடக்கி மூச்சடக்கி
முத்தெடுத்தேன் உன் உருவில்
மூளையில்லா பேதையென்றே
முத்திரை முகத்திரையில்
குத்தியதேன்??

பல பல பேர்களுக்கு
பகிர்ந்தளித்தேன் அன்பினை
அது உனக்கு உனக்கு என்
உருகுவது தெரிந்தாலும்
மருகி மருகி தான் வாழுகிறேன்
இருந்தும் மன்னிக்க மறுப்பதேன்???

காதல் காதல் என்று
கையேந்தி நின்ற போது
காணிக்கை மறுக்கையிலே
மனம் சாதல் சாதல் என்றே
சாஷ்டாங்கமாய் வீழ்கிறதே.........

Wednesday, August 10, 2011

காரணி




காதலும் ஒரு வகை
சித்ரவதை தான்
இருந்தும் இனிக்கிறது
விரும்பி நான் ஏற்றுக்கொண்டதால்....

அணுக்களை கட்டையாக்கி
ஆர்மோனியம் இசைக்கிறது
இருந்தும் ரசிக்கின்றேன்
என் ரகசியமே அதுவானதால்...

ராத்தூக்கம் பறித்து
பகற்பொழுதே நீள்கிறது
இருந்தும் மகிழ்கின்றேன்
உறக்கத்தில் உன் குரல் கேளாதென்பதால்...

சத்தமின்றி ஓடும் இரத்தம் கூட‌
சலசலத்து கேட்கிறது
இருந்தும் சங்கீதமாய் உணர்கின்றேன்
உன் பெயரை அது உச்சரிப்பதால்....

ஆனால்

உண்மையில் துடிக்கும்
என் இதயம் மட்டும்
இன்று வரை கேட்கவில்லையே ஏன்?
ஓ ! உன் நினைவுச் சுமையில்
நினவிழந்து கிடக்கிறதோ !

Friday, July 15, 2011

அறிவேன்


உயிரை விட உயர்வான
ஒரு வார்த்தை
உன் பெயரன்றி
வேறொன்றும் நானறியேன்....

பாசத்தை பதியமிட்டு-நீ
ஓசையின்றி ஒதுங்கி நிற்க‌
உலகிலே உன்னையன்றி
வேறுருவம் நானறியேன்....

உயிரே உயிரே என்றழைத்து
என் உயிர் மூச்செல்லாம் திருடிச் செல்ல
உறவெல்லாம் கூடி கேட்டும்
நான் யாரென்றே நானறியேன் ......

உன்னை என்னை படைத்த பிரம்மன்
உண்மையில் குழம்பி விட்டான்
நீயும் ,நானும் யாரென்று???

அது பாதி வாழ்வில்
உயிர் பெற்ற "பரணி " என்று
படைத்தவனோடு
நான் மட்டும் அறிவேன்.....

Sunday, April 3, 2011

அமைதி

சுனாமி தோன்றும் வரை
ஆழ்கடல் அமைதி தான்...

'மேக்மா' சிதறும் வரை
எரிமலையும் அமைதி தான்...

பட்டென கொட்டும் வரை
தேள் கூட அமைதி தான்...

இடியும் மழையும் இணையும் முன்
கார்மேகமும் அமைதி தான்...

மன்னித்து விட மன்றாடியும்
மறுத்து வறுக்கும்(வார்த்தையால்)
நீ கூட அமைதி தான்....

அமைதியே உனது
பெயர் காரணம் தான் என்ன??

Wednesday, February 2, 2011

வால் நட்சத்திரம்

[ மிகுந்த கஷ்டத்தில் இருந்த ஒரு பெண்ணை
ஒரு வசதியான வீட்டு பையன் விரும்புகிறான்
அவர்களை பற்றிய கவிதை]

நீல வானமாய் என்
நிர்மல வாழ்வில்
நீண்ட தொலைவில்
தோன்றியது வால் நட்சத்திரம்.....

கார் மேகம் சூழ்கையில்
கண்ணெதிரே தோன்றியிருப்பின்
அடை மழை பொழிந்த கண்கள்
அமுத மழையில் நனைந்திருக்கும்....

இடி மின்னல் உரசலில்
இடையினில் உதித்திருந்தால்
பூர்வ ஜென்ம பந்தமொன்று
புது பிறவி எடுத்திருக்கும்.........

சுடு நெறுப்புச் சொல்லிலே
சுக்கு நூறாய் சிதறுகையில்
தூரத்திலாவது வந்திருந்தால்
வசந்தம் வேர் விட்டு துளிர்திருக்கும்.........

ஆனால்...

மின்னலில் மிதிபட்டு
அடைமழையாய் அழுத பின்னே
நெருப்பாய் மனம் தகிக்கையிலே
வந்து நின்றாயே ஏன்?

என் வேதனை தணிக்கவா [வா?]
வேரறுந்த கொடியென்னை
உன் தோளில் சாய்க்கவா [வா?]
உயிர் பிரிந்து போகும் வேளை
உன் உயிரை ஊற்றவா [வா?]
இல்லையெனில்
வாழத்தால் வழியில்லை
என்னோடு சாகவா [வா?]

இறுதியாய் கூறுகிறேன்
இனியாவது வந்து விடு
இருவரும் புவியிலே
புது விண்மீனாய் ஜொலித்திடுவோம்..........