Thursday, December 9, 2010

உன்னுள் கண்டேன்

[ தன் பையனே உலகம் என்று எண்ணிய‌
தாய் அவன் வேறு பெண்ணை விரும்பியதும்
அதை எண்ணி புலம்பியது ]

எனக்கோர் புது உலகம்
உன்னில் நான் கண்டேன்.

என்னுயிரின் மறுபாதி
உன்னுடலில் உலவக்கண்டேன்...

ஆறடி உயரத்தில்
அடை மழை நான் கண்டேன்...

அதில் துளியூண்டும் குறையாது
அனுதினம் நனையக்கண்டேன்...

அங்கேயும் ஒரு இதயம்
எனக்காகத் துடிக்க கண்டேன்...

அதில் அணுவெல்லாம்
துகள் துகளாய் என் நினைவு தான் என்றேன்...

அதில் ஆக்ஸிஜன் குறைகையில்
என் மூச்சு திணறக்கண்டேன்...

உறவுகளை மதியாது
உலகத்தை ஒதுக்கி வைத்தேன்...

நீ ஒருவன் போதுமென்று
புது உலகம் நான் செய்தேன்.....

அதை உற்று பார்க்கையில் தான்
உன் குரல் கேட்க கண்டேன்...

உனக்கென்று ஒரு மனம்
இருப்பதை உணர்ந்து கொண்டேன்...

அதில் விருப்பொன்றும் வெறுப்பொன்றும்
இருப்பது தெரியக் கண்டேன்...

சடுதியில் என் உலகம்
சரியக் கண்டேன்...

ஊரார் கை கொட்டி சிரித்திடும்
கரகோசம் கேட்க கண்டேன்...

காண்பது கனவா என்று
கண் கலங்கி ஒதுங்கி நின்றேன்....