Wednesday, July 14, 2010

கலைந்திடும் கனவு.....



கனவு கோட்டைக்குள்
காதல் தூளிக் கட்டி
காலமெல்லாம் ஆடி களிக்க‌
அப்பாவி ஒரு கிளி ஆசை பட,
ஆண்டவன் சிரித்துக் கொண்டான்
ஆடு பெண்ணே ஆடு ‍_உன்
அல்பாயுள் முடியும் வரை ஆடு..

நிஜம் எரித்து
நிழல் நிர்மூலம் ஆன போது
உறைத்தது உண்மை
யாரோ எழுதிய பாடல் வரியில்..
கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்...

Saturday, July 10, 2010

காதல் விஸ்வரூபம்

கானல் நீரான காதலை
கண் முன்னே காணுகையில்
கற்பனை வளமென்று
கண் மூடி யோசித்தேன்....

உன் பாச வெள்ளத்தில்
பாதி மூழ்கி போன போதும்
பார்ப்பது கனவென்று
பக்கத்தில் பேசிக்கொண்டேன்...

ஈராண்டு தேக்கத்தை
இரு வரியில் இயம்புகையில்
இதயச் சுவரெல்லாம்
இரத்தச் சுனாமி கண்டேன்...

வெறி பிடித்த வேங்கையாய்
என்னை வேட்டையடி வெல்லுகையில்
வேறெதும் தோணாது
அன்பில் கூட அஹிம்சை கண்டேன்...

அண்ணாந்து நான் பார்க்க‌
விண் முட்ட உன் உருவம்
உன்னுள்ளே எனைக் காண‌
எமனையும் எதிர்க்கும் கர்வம் கொண்டேன்.

காதல் வளர்த்தேன்

காதலியே காதலி என்றாய்
காதல் கொண்டேன்
நானும் உன் மேல்....

கசடில்லா காதலோடு
கையை பிடித்தாய்,
கட்டியணைத்தாய்,
கைப்பிள்ளையாய் எனை மாற்றி
கன்னம் சுவைத்தாய்,
கண்களது கள்வெறி கொள்ள‌
அன்பனைத்தும் அள்ளி குடித்தாய்,
அன்றே
என் ஆணிவேரை
அசைத்து பார்த்த‌
உன் உள்ளத்தை காதலித்தேன்,
உணர்வை காதலித்தேன்,
உன்னுள் இருக்கும்
என்னை காதலித்தேன்,
எனக்காக துடிக்கும்
இன்னொரு இதயம் என்ற‌
இறுமாப்புடன் இறுதியில்
உன்னை நான் காதலித்தேன்.....

தமிழ் ஊறிய சமூகத்தில்
பெண்ணாகிய பாவத்தால்
மண்ணாகி மறையும் வரை
மனம் குளிர காதலித்தேன்
காதலிக்கிறேன்
காதலித்துக்கொண்டே இருப்பேன்.......

எனக்கே எனக்கு


நாய் பெற்ற‌
தெங்கம்பழம் அல்ல நீ
நான் கேளாது பெற்ற
தங்க வரம்.....

வரம் கொடுத்த சாமியே
வந்து நின்று கேட்டாலும்
வன்மையாய் மறுத்திடுவேன்
தண்மையாய் உணர்த்திடுவேன்........

தாயான பின்பு
நான் கேட்ட‌
முதல் தாலாட்டு கவிதை நீ......

தான் தோன்றி சுயம்புவாய்
என்னுள் வளர்ந்த‌
காதல் சொரூபம் நீ......

சொக்கப்பனை சாம்பலை
பூக்கச் செய்த‌
சோலை நிலவொளி நீ....

பாலைவன மனதை
பரவசப்படுத்திய‌
பசுந்தளிர் நீ....

உன்னை பகிர்ந்தளிக்க முடியாது
பரிதவிக்கும் எனக்கு
நாய் பெற்ற‌
தெங்கம்பழம் தான் நீ.....